பதிவு செய்த நாள்
25 ஜன2019
07:11

டாவோஸ் : ‘‘மின்னணு வணிகத்திற்கு, உலக நாடுகளின் பங்களிப்புடன் பொதுவான ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்,’’ என, சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தலைவர், ரோபர்டோ அசீவிடோ வலியுறுத்தியுள்ளார்.
அவர், சுவிஸ் நாட்டின், டாவோஸ் நகரில், சர்வதேச பொருளாதார மாநாட்டில் மேலும் பேசியதாவது:இரண்டாம் உலகப் போருக்கு பின், ஏற்படுத்தப்பட்ட பன்னாட்டு வர்த்தக நடைமுறை ஒப்பந்தம், முன்னெப்போதும் காணாத வகையில் மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.உலகம் மிக வேகமாக மாறி வருகிறது; அதற்கேற்ப, வர்த்தக நடைமுறைகளையும் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாறாத பட்சத்தில், சர்வதேச வர்த்தகம், இருண்ட காலத்தை சந்திக்க நேரிடும்.
பன்முக வர்த்தகத்தில் தேக்க நிலை ஏற்படக் கூடாது. அதை இன்னும் ஆழமாக வலுப்படுத்தும் நடவடிக்கைகளை, உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்டு வருகிறது. உலகின் யதார்த்த நிலைக்கு ஏற்ப, நாம் மாற வேண்டும். ஆனால், இதுவரை அவ்வாறு நடைபெறவில்லை.
உதாரணமாக, 2018ல், உலக வர்த்தக அமைப்பு, ‘டிஜிட்டல் பொருளாதாரம்’ அல்லது மின்னணு வர்த்தகம் தொடர்பான சர்வதேச நெறிமுறைகளை வகுக்க, எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.இன்று, மின்னணு வர்த்தகம், சர்வதேச வர்த்தக எழுச்சியின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. ஆகவே, அதற்கான செயல் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இதுவே, நம் முன் உள்ள சவால். அவ்வாறு மேம்பாடு காணத் தவறினால், ஒட்டுமொத்த வர்த்தக செயல் திட்டம், முக்கியத்துவத்தை இழந்து விடும்.
இதன் தாக்கம், பிற செயல் திட்டங்களையும் பாதிக்கும். இது, உலக வர்த்தக அமைப்புக்கு மட்டும் விடுக்கப்பட்ட சவால் அல்ல; சர்வதேச சமுதாயத்திற்கான சவால்.எனவே, மின்னணு வர்த்தகத்திற்கு, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்த பொதுவான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். நடப்பது நடக்கட்டும் என, மவுனமாக இருப்பதை ஏற்க முடியாது.உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சர்வதேச வர்த்தக நடைமுறை, இருண்ட காலத்தை நோக்கி செல்ல நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
உலக நாடுகள், வர்த்தக சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிகரித்து வருகிறது. சர்வதேச வர்த்தக நெறிமுறைகளை மதிக்காமல், சுயமாக செயல்படுவதால், வர்த்தகப் போர் பதற்றம் உண்டாகிறது. இது, உலக வர்த்தக அமைப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள், பரஸ்பர வர்த்தகம் மூலம் பயன் பெற வேண்டும்.சிசிலியா மால்ம்ஸ்ட்ராம் தலைவர், ஐரோப்பிய வர்த்தக ஆணையம் இந்தியாவின் கொள்கை மத்திய அரசு, சமீபத்தில், மின்னணு வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இது குறித்து, சர்வதேச பொருளாதார மாநாட்டில், பல நாடுகளின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர். இந்தியா, நிலையான மின்னணு வணிக கொள்கையை அறிவிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|