பதிவு செய்த நாள்
25 ஜன2019
23:17

புதுடில்லி : ‘இறக்குமதி செய்யப்படும், ‘டிவி, ஏசி, வாஷிங் மிஷின், ரெப்ரிஜிரேட்டர்’ உள்ளிட்ட சாதனங்களுக்கு, சுங்க வரியை உயர்த்த வேண்டும்’ என, நுகர்வோர் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘சியாமா’ வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர், கமல் நந்தி கூறியதாவது:மத்திய பட்ஜெட், பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், இறக்குமதியாகும் ‘டிவி, ஏசி, ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின்’ உள்ளிட்ட சாதனங்களுக்கான வரியை உயர்த்த வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.இந்த சாதனங்கள், பல நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள, தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதேசமயம், இந்த சாதனங்களுக்கான உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு, 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த உதிரிபாகங்கள் மூலம், ‘டிவி, ஏசி, வாஷிங் மிஷின்’ உள்ளிட்ட சாதனங்களை தயாரிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, உதிரிபாகங்களுக்கான சுங்க வரியை, 5 சதவீதமாக குறைத்தால், மின்னணு மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்களின் தயாரிப்பு செலவு குறையும். இதனால், குறைந்த விலையில் சாதனங்களை விற்க முடியும்.
இது, சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்ளவும், வரிச் சலுகைகள் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கவும் துணை புரியும்.கொள்கைமின்னணு பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து, அவற்றின் இறக்குமதியை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் கொள்கை.
இதற்கு நேர்மாறாக, மின்னணு உதிரிபாகங்களை விட குறைந்த வரியில், முழுமையாக தயாரிக்கப்பட்ட, ‘டிவி, ரெப்ரிஜிரேட்டர்’ போன்ற சாதனங்கள் இறக்குமதியாவது வேதனை அளிக்கிறது.பல நிறுவனங்கள், உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, அந்த பாகங்களை உள்ளடக்கிய, முழுமையான மின்னணு சாதனங்களை, குறைந்த வரியில் இறக்குமதி செய்து, விற்பனை செய்கின்றன.
இதை கருத்தில் கொண்டு, ‘டிவி, ரெப்ரிஜிரேட்டர்’ உள்ளிட்ட சாதனங்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த, அவற்றுக்கான சுங்க வரியை உயர்த்த வேண்டும்.மேலும், மின்னணு சாதனங்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். இது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கு வலு சேர்க்கும் என்பதுடன், உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஊக்கமளிக்கும்.சீனாகடந்த இரண்டு ஆண்டுகளாக, ‘கம்ப்ரஸர், டிஸ்ப்ளே பேனல், ஓபன் செல்’ உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், சீனாவின் பங்களிப்பு, 59 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
நுகர்வோரின் தேவை, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிற போதிலும், அதை சமாளிக்கும் அளவிற்கு, உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய இயலாத சூழல் உள்ளது.இதை சாதகமாக்கி, சீனா அதிக அளவில் உதிரிபாகங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து பயனடைந்து வருகிறது. நுகர்வோர் சாதனங்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், இன்னும் இந்தியாவில் தயாரிக்கப்படாமல் உள்ளன.அதிக முதலீடு, அடிப்படை கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்டவை தேவைப்படுவதால், அத்தகைய உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதே லாபகரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கண்காணிப்பு கேமரா:
உள்நாட்டில், ‘சிசிடிவி கேமரா மற்றும் சிசிடிவி ரெக்கார்டர்’களுக்கான அடிப்படை சுங்க வரியை, 15 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். இது, இச்சாதனங்களின் இறக்குமதியை குறைக்கவும், இத்துறையில் உள்ள உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும்
-‘சியாமா’ அமைப்பு
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|