பதிவு செய்த நாள்
19 பிப்2019
07:06

புதுடில்லி : பாகிஸ்தான் பொருட்களுக்கு, சுங்க வரி, 200 சதவீதம் உயர்த்தப்பட்டதால், பழங்கள், சிமென்ட், தோல் உள்ளிட்ட, முக்கிய, 10 பொருட்களின் இறக்குமதி குறையும்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், கடந்த வாரம், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, பாக்.,கைச் சேர்ந்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, மத்திய அரசு, பாக்.,லிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, சுங்க வரியை, 200 சதவீதம் உயர்த்தியது.
பழங்கள்:
இதனால், பாக்., பொருட்கள் விலை உயர்ந்து, அவற்றின் இறக்குமதி குறையும். குறிப்பாக, பழங்கள், சிமென்ட், தோல், பெட்ரோலிய பொருட்கள், கனிமங்கள், பருத்தி, பருத்தி ஆடைகள், ரசாயனம், கண்ணாடி, கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட, 10 பொருட்கள் விலை அதிகரிக்கும். இந்த முக்கிய பொருட்கள், இந்தியாவின் இறக்குமதியில், 95 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இதனால், இந்தியாவுக்கு, பாக்., மேற்கொள்ளும் ஏற்றுமதி, பெருமளவு வீழ்ச்சி அடையும்.
இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல், ஆஜய் சபாய் கூறுகையில், ‘‘இந்தியாவின் முடிவால், பாக்., குறிப்பிடத்தக்க பாதிப்பை சந்திக்கும்,’’ என்றார்.
சிமென்ட்:
பாக்.,கில் இருந்து, பழங்கள் மற்றும் சிமென்ட் அதிக அளவில் இறக்குமதியாகிறது. இவற்றின் சுங்க வரி, முறையே, 30 – -50 சதவீதம் மற்றும் 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதனால், இப்பொருட்களுக்கு ஏற்கனவே, ‘ஆர்டர்’ கொடுத்துள்ள, உள்நாட்டு இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், உயர்த்தப்பட்ட சுங்க வரியை செலுத்தி, பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது ஆர்டர் அளித்தது தொடர்பான பல்வேறு ஆவணங்களை அளித்து, சரக்கை பெறலாம்.
அதிக வரி செலுத்தி, பொருட்களை இறக்குமதி செய்யும் போது, சந்தையில் போட்டியை எதிர்கொள்ள இயலாமல் போகும். அதனால், பலர் ஏற்கனவே அளித்த ஆர்டரை ரத்து செய்யக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்., பொருட்களுக்கு, இறக்குமதி வரியை உயர்த்தியதன் மூலம், அந்நாடு, வர்த்தக ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 200 சதவீத உயர்வு, இந்தியாவுக்கு பொருட்களை அனுப்பும், பாக்., ஏற்றுமதியாளர்களை அடியோடு பாதிக்கும்.
–பிஸ்வஜித் தார், பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். புதுடில்லி
இனி குறையும்:
கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், இந்தியா – பாக்., இடையிலான பரஸ்பர வர்த்தகம், 241 கோடி டாலர், அதாவது, 17 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2016- – 17ல், 16 ஆயிரம் கோடி ரூபாயாக காணப்பட்டது.இதே காலத்தில், இந்தியாவின், பாக்., பொருட்கள் இறக்குமதி, 3,188 கோடியில் இருந்து, 3,419 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்தியா – பாக்., பரஸ்பர வர்த்தகம் வெகுவாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|