பதிவு செய்த நாள்
24 பிப்2019
23:28

பங்கு முதலீட்டில் லாபம், நஷ்டம் இரண்டையும், தொடர்ந்து மாறி மாறி பார்ப்பது சகஜம். ஆனால், பெரும்பாலும் இந்த லாப, நஷ்ட கணக்குகள் உத்தேசமானவையே அன்றி, உண்மை அல்ல!அதற்கு காரணம், நாம் பங்குகளை குறிப்பிட்ட நேரத்தில் விற்பது இல்லை. நாம், இந்த கணக்குகளை பார்ப்பதே, நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ளவோ, தேற்றிக் கொள்ளவோ மட்டுமே.
ஆனால், நல்ல பங்குகள், இவற்றை எல்லாம் கடந்து, காலப்போக்கில் நமக்கு செல்வத்தை சேர்த்து விடும். அதே சமயம், தர வரிசையில் குறைவான பங்குகள், நம்மை நிரந்தர நஷ்டத்தில் ஆழ்த்தி விடும். நம்முடைய தேர்வுகள் எந்த வகையை சேர்ந்தவை என்பதை புரிந்து கொள்ளவே, பல காலம் பிடிக்கும். அப்படி புரிந்து கொண்டாலும், நாம் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளில், தெளிவான முன்னெடுப்பு மிக அவசியம்.
சில சமயங்களில், உத்தேச கணக்குகளும் உண்மை கணக்குகள் ஆவதுண்டு. இது, நாம் தரம் குறைவான, தவறானபங்குகளை வாங்கும் போது ஏற்படும். அப்படிப்பட்ட தர வரிசையில் மிகக் குறைவான பங்குகள், நமக்கு நிரந்தர நஷ்டம் ஏற்படுத்துவது உறுதி. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட மன நிலை மிக அவசியம். அந்த மன நிலை, நம் தவறுகளை ஏற்றுக் கொண்டு, அவற்றில் இருந்து வெளியேற நம்மை பழக்கிக் கொள்ள உதவும்.
அத்தகைய மன நிலையை வளர்க்க முதிர்வும், பக்குவமும் அவசியம். ஆனால், அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வது மிகக் கடினம்.இத்தகைய மனநிலையை வளர்த்துக் கொள்ள, பெரும்பாலான முதலீட்டாளர்கள் தவறி விடுகின்றனர். மாறாக, காலம் தங்களுடைய தவறுகளை திருத்தி விடும் என்று நம்புவதே, முதலீட்டாளர்களின் இயல்பாக இருக்கிறது.இயல்புக்கு மாறான போக்கை கடைப்பிடிப்பது மிகக் கடினம் தான் என்றாலும், அதை நோக்கி பயணிப்பது அவசியமான ஒன்றாகும்.
சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நிலை அறிந்து, நடைமுறைகளை கற்று, அதை கடைபிடிப்பது மிக அவசியம். தவறை தாமே முன் வந்து ஏற்றுக்கொள்வது தான், இந்த நகர்வின் முதல் படி.அடுத்து, ஏற்கனவே செய்த முதலீட்டின் எதிர்காலத்தை, மீண்டும் ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்கப் பழக வேண்டும். அந்த கண்ணோட்டம் தரும் முடிவுகளை, முழு மனதுடன் ஏற்க பழக வேண்டும்.
இதை உரிய நேரத்தில் செய்தால் மட்டுமே, நிரந்தர நஷ்டத்தில் இருந்து மீள இயலும்.ஆனால், பெருவாரியான முதலீட்டாளர்கள், தவறான முடிவில் வாங்கிய பங்குகளை விற்காமல், நல்ல முறையில் தேர்வு செய்த லாபகரமான பங்குகளை அவசரப்பட்டு விற்று விடுகின்றனர்.இதனால், அவர்களிடம் மீதமிருப்பது தவறான தேர்வுகள் மூலம் வாங்கிய நஷ்ட பங்குகள் மட்டுமே. அவர்கள் போர்ட்போலியோ, அந்த இடத்தில் இருந்து மீளவே மீளாது.
இப்போதைய சந்தை சூழலில், கிட்டத்தட்ட பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சி கண்டுவிட்ட நிலையில், தரம் குறைவான பங்குகளை முதலில் விற்று, தரத்தில் உயர்வான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.இதுவே, உங்கள் பங்கு மதிப்பை உயர்த்துவதற்கான முக்கிய நடவடிக்கை.இந்த முடிவுக்கு வர துணிச்சலும், தன்னம்பிக்கையும் மிக அவசியம். இன்றைய முடிவுகள் வாயிலாக, உங்கள் முதலீட்டு தேர்வுகளின் தரத்தை உயர்த்தி, நாளைய வெற்றிக்கு வித்திடலாம். முடிவு உங்கள் கைகளில் தான் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|