பதிவு செய்த நாள்
24 பிப்2019
23:47

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில், வைப்பு நிதி முதலீட்டாளர்கள் தங்கள் உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டுமா?அண்மையில் ரிசர்வ் வங்கி, கடனுக்கான வட்டி விகிதத்தை, 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது, வட்டி விகிதம் குறையும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டுக்கடன், வாகனக்கடன் பெற விரும்புகிறவர்களுக்கு இது நல்ல செய்தி என்றாலும், முதலீட்டாளர்களுக்கு இது கவலை அளிக்கும் செய்தியாக அமைகிறது. ஏனெனில் வட்டி விகிதம் குறையும் சூழலில், பல்வேறு வகையான வைப்பு நிதிகளுக்கான வட்டிவிகிதம் குறையும் வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை மற்றும் மேலும் வட்டி குறைப்புக்கு ஏற்ப இது அமையலாம். இதன் காரணமாக, வைப்பு நிதிகளுக்கான வருமானமும் வரும் மாதங்களில் குறையலாம்.
அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், வைப்பு நிதிகளை பிரதானமாக நாடும் தன்மை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, இது நிச்சயம் கவலை அளிக்கும் விஷயம் தான். அதிலும் குறிப்பாக, மேற்கொண்டு முதலீடு செய்ய வட்டி விகித உயர்வை எதிர்பார்த்துக்கொண்டிருந்த முதலீட்டாளர்களுக்கு, இது ஏமாற்றம் அளித்திருக்கலாம். அதே நேரத்தில் வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் உடனடியாக உயர்வதற்கான வாய்ப்பில்லை எனும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய உத்தி என்னவாக இருக்க வேண்டும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
முதலீட்டாளர்கள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கலாமா? அல்லது தற்போதைய வட்டி விகிதத்தில் வைப்பு நிதிகளில் முதலீடு செய்யலாமா? எனும் கேள்வியும் பலரது மனதில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை அடுத்து, உடனடியாக வருங்காலத்தில் வட்டிவிகிதம் உயர வாய்ப்பில்லை என, வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த சூழலில், வைப்பு நிதி உள்ளிட்ட நிரந்தர வருமானம் தரும் முதலீடுகளை நாடுபவர்கள், உடனே முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும் என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மேலும், மூன்று முதல் ஐந்து ஆண்டு வரையான வைப்பு நிதிகளில் முதலீடு செய்வதும் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். தற்போதைய வட்டி விகித பலனை பெற இது அவசியம் என்கின்றனர். அதே போல, டெப்ட் பண்ட்களில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள், நீண்ட கால முதிர்வு கொண்ட பத்திரங்களில் முதலீடு செய்யும் நிதிகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. குறுகிய கால அளவிலான முதலீடுகளை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டு வந்ததற்கு மாறாக இது அமைகிறது.
அதே நேரத்தில் வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டிருப்பது உடனடியாக வைப்பு நிதி குறைப்புக்கு வழிவகுக்காது என்றும் சில வல்லுனர்கள் கருதுகின்றனர். வைப்பு நிதி வளர்ச்சி மற்றும் வங்கியின் கடன் வளர்ச்சிக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும் என்றும், இதன் காரணமாக வங்கிகள், குறிப்பாக தனியார் வங்கிகள், வைப்பு நிதி திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தும் நிலை ஏற்படலாம் என்று கூறுகின்றனர். இது, வங்கிகள் அதிக வட்டி அளிக்கும் சூழலையும் ஏற்படுத்தலாம்.
எனினும், வட்டி விகித போக்கை மட்டும் அடிப்படையாக கொண்டு வைப்பு நிதி முதலீடு முடிவை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். வட்டி விகித போக்கை எதிர்பார்த்து முதலீட்டை தாமதமாக்குவதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர். நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் தன்மை ஆகிய அம்சங்களை முக்கியமாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். தேவை எனில் நிதி ஆலோசகர் உதவியையும் நாடலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|