பதிவு செய்த நாள்
25 பிப்2019
23:23

புதுடில்லி : ‘ஆபரணம், வாகன உதிரிபாகம் உள்ளிட்ட துறைகளுக்கும், ஏற்றுமதி சலுகைகளை விரிவுபடுத்த வேண்டும்’ என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பான எப்.ஐ.இ.ஓ., மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு தலைவர், கணேஷ் குமார் குப்தா கூறியதாவது:மத்திய அரசு, தேசிய மின்னணு வர்த்தக கொள்கை தொடர்பான வரைவறிக்கையை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.எனினும், ஒவ்வொரு துறைக்கும் பல சட்டங்கள், கொள்கைகள் உள்ளதால், அனைத்திற்கும் பொருந்துமாறு, மின்னணு வணிக கொள்கை சீராக இருக்க வேண்டும்.
தற்போது, கைவினைப் பொருள், கைத்தறி ஆடை, புத்தகம், தோல் காலணி, விளையாட்டுப் பொருள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், வரிச் சலுகை கிடைக்கிறது.ஆனால், இச்சலுகை, வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதிக்கு வழங்கப்படுவதில்லை. இத்துறையில், ஏராளமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.அதனால், வாகன உதிரிபாகங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்கும் வரிச் சலுகையை விரிவுபடுத்த வேண்டும்.
வரம்பு:
தற்போது, ‘கூரியர்’ எனப்படும் விரைவு அஞ்சல் சேவையில், அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே, ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யலாம். இந்த வரம்பை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தினால், அதிக அளவிலான பொருட்களை விரைவாக அனுப்பவும், பெறவும் முடியும்.மின்னணு வர்த்தகத்தில், சில்லரை விற்பனைக்கான ஏற்றுமதி நடைமுறை, மின்னணு தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படாமல், இன்னும் ஆவண வடிவிலேயே நடைபெற்று வருகிறது.
அதனால், உடனடியாக, அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக மின்னணு தொழில்நுட்பத்திற்கு மாற்ற வேண்டியது அவசியம். இதன் மூலம், இந்திய நிறுவனங்கள், சர்வதேச போட்டியை சமாளிக்க முடியும்.மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சர்வதேச அளவில், புதிய சந்தைகளை அடையாளம் காணவும் வழி பிறக்கும்.
ஆழமாக வேரூன்றி வரும் தகவல் தொழில்நுட்ப வசதியும், பரவலாக பெருகி வரும் மின்னணு பயன்பாடும், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணை புரியும்.மத்திய அரசு, உடனடியாக, இக்கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
எம்.இ.ஐ.எஸ்., திட்டம்:
மத்திய அரசு, ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க, 2015ல், எம்.இ.ஐ.எஸ் என்ற, வர்த்தக ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில், பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யும் நாடு மற்றும் பொருட்களை பொறுத்து, 2, 3 மற்றும் 5 சதவீத வரிச் சலுகை, ஆவண வடிவில் வழங்கப்படும்.
ஏற்றுமதியாளர்கள், தங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல் அடிப்படையில் வரிச் சலுகை ஆவணத்தை பெறுவர். அவர்கள், இந்த ஆவணம் மூலம், மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய வரியை கழித்துக் கொள்ளலாம். அதுபோல, ஜி.எஸ்.டி.,க்கும் இதை பயன்படுத்தலாம். கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|