பதிவு செய்த நாள்
26 மார்2019
07:08

புதுடில்லி: தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதியை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, உயிரி எரிபொருள், மரம், சிறப்பு வகை நிலக்கரி உள்ளிட்ட பல பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இவற்றில், உயிரி எரிபொருள் உள்ளிட்ட சில பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பினால், அதற்காக, பிரத்யேக உரிமம் கோரி, ஏற்றுமதியாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, அனுமதி அளிப்பது வரை, அனைத்து நடைமுறைகளிலும், காகித ஆவணங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி உரிமம் வழங்கக் கோரும் நிறுவனங்கள், அது தொடர்பாக, வர்த்தகத் துறை அதிகாரிகளை சந்தித்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.இதனால் ஏற்படும் காலதாமதம், செலவினம் ஆகியவற்றை குறைக்கவும், சுலபமாக ஏற்றுமதி மேற்கொள்ளவும், உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் அனைத்தும், வலைதளம் மூலம் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
காகிதம் இல்லை:
இது குறித்து, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தடை செய்யப்பட்ட பொருட்களில், குறிப்பிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கு உரிமம் கோரும் நடைமுறை, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காகித பயன்பாடு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.இயக்குனரகத்தின் வலைதளத்தில், தேவையான ஆவணங்களை பதிவேற்றி, ஏற்றுமதிக்கு விண்ணப்பிக்கலாம். முக்கியமாக, வெளிநாட்டு நிறுவனம் அளித்த, ‘ஆர்டர்’ மற்றும் ஏற்றுமதி உரிமத்திற்கான விண்ணப்பத்தை பதிவேற்ற வேண்டும்.
இவற்றின் பரிசீலனை மற்றும் அது தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும், வலைதளத்திலேயே மேற்கொள்ளப்பட்டு, உரிமம் வழங்கப்படும். அதிகாரிகளை நேரில் சந்தித்து அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.இந்த புதிய வசதி, 19ம் தேதி முதல், அமலுக்கு வந்துள்ளது. இம்மாத இறுதி வரை, தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு, வலைதள விண்ணப்பங்களுடன், காகித ஆவணங்களும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏப்., 1 முதல், கண்டிப்பாக வலைதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி:
இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைவர், கணேஷ் குமார் குப்தா கூறியதாவது: வலைதளம் மூலம் ஏற்றுமதி உரிமம் பெறும் வசதி அறிமுகமாகி இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், ஏற்றுமதியாளர்களின் செலவு குறையும். நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, இதுபோல் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், தடை செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு, வலைதளம் மூலம் உரிமம் பெறும் வசதியை, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் அறிமுகப் படுத்திருந்தது.
வேகமான முன்னேற்றம்:
உலக வங்கியின், 2018 அறிக்கைப்படி, சுலபமாக தொழில் துவங்கும் வசதியுள்ள, 190 நாடுகளில், இந்தியா, 100வது இடத்தில் இருந்து, 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், ஏப்., – பிப்ரவரி வரையிலான, 11 மாதங்களில், ஏற்றுமதி, 8.85 சதவீதம் உயர்ந்து, 29 ஆயிரத்து, 847 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இறக்குமதியும், 9.75 சதவீதம் உயர்ந்து, 46 ஆயிரத்து, 400 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|