பதிவு செய்த நாள்
27 மார்2019
07:02

புதுடில்லி: ‘‘கடன் நெருக்கடியில் சிக்கிய, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு உதவும் வங்கிகள், எனது, ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு உதவாமல், இழுத்து மூட காரணமாக இருந்தது ஏன்?’’ என, விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
வங்கிகளிடம் வாங்கிய, 9ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பத் தராமல், தலைமறைவான விஜய் மல்லையா, லண்டன் கோர்ட் உத்தரவுப்படி, விரைவில் நாடு கடத்தப்பட உள்ளார்.
இந்நிலையில் அவர், ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:எஸ்.பி.ஐ., தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவன கடன் நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதை வரவேற்கிறேன்.இதனால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் காப்பாற்றப்பட்டுள்ளது. ஊழியர்களின் வேலை பறிபோவது தடுக்கப்பட்டுள்ளது. விமான சேவை, தடங்கலின்றி தொடர வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மகிழ்ச்சி.ஆனால், இதே வங்கிகள் கூட்டமைப்பு, எனது ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் கடன் பிரச்னையை தீர்க்க, இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளாதது ஏன் என, தெரியவில்லை.
முதலீடு:
நான், நிறுவனத்தை காப்பாற்றவும், ஊழியர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், 4ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தேன்.அதை அங்கீகரிப்பதற்கு பதில், எந்தெந்த வகையில் என்னை ஒடுக்க முடியுமோ அந்தந்த வகையில் ஒடுக்கவே, முயற்சிகள் நடைபெற்றன.இதே, பொதுத் துறை வங்கிகள், இந்தியாவின் மிகச் சிறந்த விமான நிறுவனம் ஒன்றின் சேவைகள் தடைபடுவதை, ஈவிரக்கமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. இது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், இருவகையான அணுகுமுறையை காட்டுகிறது.
ஊடகங்கள், நான், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு, என் மதிப்பை சீர்குலைத்தன.இது போதாதென்று, முந்தைய பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு நான் எழுதிய கடிதத்தை, பா.ஜ., செய்தி தொடர்பாளர் பகிரங்கப்படுத்தினார். அதன் அடிப்படையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பொதுத் துறை வங்கிகள், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தவறாக ஆதரித்தன எனவும், குற்றஞ்சாட்டினார்.பொதுத் துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் வாங்கிய கடனை, திரும்பத் தர தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து உள்ளேன்.என் சொத்துக்களையும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளேன்.
ஆனால், வங்கிகள் ஏன் என் பணத்தை வாங்காமல் உள்ளன என்பது தெரியவில்லை. அந்த பணம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்ற, வங்கிகளுக்கு உதவும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். அது வேறு – இது வேறுஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 7ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் உள்ளது. அதனால், வங்கிகள் கூட்டமைப்பின் கடன் தீர்வு திட்டத்தை ஏற்று, நிறுவனர், நரேஷ் கோயல், மனைவி அனிதா கோயல் ஆகியோர், நேற்று முன்தினம் இயக்குனர் பதவியை துறந்தனர். பங்கு மூலதனத்தையும் குறைத்துக் கொள்ள சம்மதித்தனர்.
இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், வங்கிகள் கூட்டமைப்பு, 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. அத்துடன், இயக்குனர் குழுவை சீரமைத்து, நிர்வாக மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இதனால், ஜெட் ஏர்வேஸ், நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது.ஆனால், விஜய் மல்லையா, எவ்வித தீர்வுக்கும் உட்படாமல், வங்கிகள் கணிசமான கடனை தள்ளுபடி செய்யும் என, காத்திருந்தார். அது நடக்காததால், கைது நடவடிக்கைக்கு அஞ்சி, 2015, மார்ச்சில் திடீரென தலை மறைவானார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|