பதிவு செய்த நாள்
01 ஏப்2019
07:14

தேர்தல் முடிவு சார்ந்த பங்கு வர்த்தகம் துவங்கி, தொடர்ந்து சூடு பிடிக்கும் அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த பங்கு வர்த்தகத்தில், சந்தையின் அரசியல் குறியீடுகள் உள்ளடங்கி இருப்பதாகவே தோன்றுகிறது.
இது நாள் வரை, அதிகம் சரிவை சந்தித்த பொதுத் துறை நிறுவன பங்குகள், மீண்டும் உயரத் துவங்கி உள்ளன. அரசும் இந்த பங்குகளை சமீப மாதங்களில் பெருமளவில் விற்று, தன் ஆண்டு நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் கொண்டது. இந்த விற்பனை முடிந்தவுடன், பொதுத் துறை நிறுவன பங்குகள் எதிர்கொண்ட விலை அழுத்தம் விலகியது. ஒரு காலத்தில் இவற்றை வாங்க, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை விட்டால் ஆளில்லை என்ற சூழல் இருந்தது. இன்று இந்த சூழல் மாறி, தொடர்ந்து இந்த பங்குகள் வாங்கி குவிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...
முதலில், பொதுத் துறை நிறுவன மதிப்பீடுகள், மற்ற தனியார் நிறுவன மதிப்பை விட இவற்றின் மதிப்பு மிகக் குறைவு. இந்த விலையில் வாங்கினால், இழப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.இழப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவும், சந்தையில் அதிக மதிப்பு இல்லாமலும் இருக்கும் நிறுவன பங்குகளை வாங்க, இது மிகச் சிறந்த நேரம். இந்த நிலைமை இப்போது அன்னிய முதலீட்டாளர்களையும், உள்ளூர் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
பொதுத் துறை நிறுவன பங்குகளை, தேர்தல் முடிவுகளின் ஒரு பிம்பமாகவும் இப்போது பல முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். அடுத்து அமையும் ஆட்சியில், இந்த நிறுவன பங்குகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக சந்தை எதிர்பார்க்கிறது. இதற்கு காரணம், மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தான். இனி செய்ய வேண்டிய திருத்தங்களை மேற்கொள்ள, அடுத்து வரும் அரசு முடிவெடுத்தால், அது எளிதில் முடியும் என்று சந்தை நம்புகிறது.
மேலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்கள், இனி வரும் ஆண்டுகளில் பெருகக்கூடும். அப்போது, பொதுத் துறை நிறுவன பங்குகளின் மதிப்பு வெகுவாக கூடும் என்பதே, முதலீட்டாளர்கள் இவற்றை வாங்கிக் குவிக்க காரணம். பொதுத் துறை நிறுவன பங்குகளை வாங்க அடுத்த முக்கிய காரணம், அவற்றின் மதிப்பீடும், டிவிடெண்ட் கொள்கைகளும், பை பேக் கொள்கைகளும் தான்.நிகர லாபத்தில், தொடர்ந்து 20 முதல், 25 சதவீதம் வரை டிவிடெண்டு கொடுக்கும் கொள்கையை, பல பொதுத் துறை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. ஆகவே, தொடர்ந்து லாப வளர்ச்சி காணும் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக டிவிடெண்டு கொடுக்கக் கூடும் என்று சந்தை ஊகிக்கிறது.
தொடர்ந்து, பங்கு மதிப்பு குறைவாக இருப்பதால், டிவிடெண்டு அடிப்படையில் இந்த பங்குகள் அதிகம் வாங்கப்படுகின்றன. பொதுத் துறை வங்கிகள், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வந்ததால், டிவிடெண்டு கொடுக்க இயலவில்லை. ஆனால், வளர்ச்சியற்று இருந்த சூழல் மாறி, இந்த வங்கிகள் வரும் ஆண்டுகளில் மீண்டும் வளர்வதற்கான சூழலை, அரசு உருவாக்கி உள்ளது. வரும் ஆட்சியில், வளர்ச்சி கண்டு, பொதுத் துறை வங்கிகள் மீண்டும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்வதாகவே சந்தையின் பார்வை அமைந்துள்ளது. இந்த பங்குகளில் தென்படும் குவிப்பு, இந்த எதிர்பார்ப்பின் வெளிப்பாடே ஆகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|