பதிவு செய்த நாள்
20 ஏப்2019
23:55

நியூயார்க்: ''வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவில், எரிசக்தி, அடிப்படை கட்டமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், அன்னிய நிறுவனங்கள் கூட்டாக செயல்பட, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன,'' என, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர குழுவின் கவுன்சிலர், ஆஷிஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
அவர், நியூயார்க்கில், ஐ.நா.,வின், 'வளர்ச்சிக்கான நிதியுதவி' கருத்தரங்கில் மேலும் பேசியதாவது:மத்திய அரசு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மூலம், அதிகமானோரை, வறுமைப் பிடியில் இருந்து மீட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உலகளவில், மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடு என்ற சிறப்பை, இந்தியா தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
சீர்திருத்தம்
பல ஆண்டுகளாக, நாட்டின் வளர்ச்சி, 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால், எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில், திவால் சட்டம், ஜி.எஸ்.டி., ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், உலக வங்கியின் அறிக்கைபடி, 2018ல், சுலபமாக தொழில் துவங்கும் நாடுகளில், இந்தியா, 23 இடங்கள் முன்னேறி, 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதாக உள்ளது. அதனால், எரிசக்தி, இயற்கை வளம், அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களில், இந்திய நிறுவனங்களுடன், அன்னிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
வங்கிச் சேவை இல்லாதோருக்கு வங்கிச் சேவை, பொருளாதார பாதுகாப்பற்ற சாமானியர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு, நிதியுதவியற்ற பிரிவுகளுக்கு நிதியுதவி, சேவைகள் கிடைக்காத பகுதிகளில், சேவைகளை மேற்கொள்வது ஆகியவை தான், மத்திய அரசின் இலக்கு.அதன்படி, அனைவருக்கும் வங்கிச் சேவை என்ற திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில், புதிதாக, 32 கோடி பேருக்கு, வங்கிக் கணக்கு துவக்கி தரப்பட்டுள்ளது.இந்த வங்கிக் கணக்குகளில், நேரடி மானியம் வரவு வைக்கப்படுகிறது. சமீபத்தில், அறிமுகமான, 'ஆயுஷ்மன் பாரத்' என்ற இலவச ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தில், நான்கு மாதங்களில், 16 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
சூரிய மின்சக்தி
உலகளவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது.சூரிய மின் உற்பத்தி திறன், 26 கிகாவாட் ஆக உள்ளது. இது, ஆண்டுக்கு, சராசரியாக, 15.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2028ல், 105.9 கிகா வாட் ஆக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஆய்வு, கண்டுபிடிப்பு ஆகியவை தான், நான்காம் தொழிற்புரட்சிக்கு உந்துசக்தியாக இருக்கும்.மத்திய அரசு, வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உதவ, 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தின் கீழ், 140 கோடி டாலர் முதலீட்டில், நிதியம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் காணப்படும் வர்த்தக வாய்ப்புகளை, இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பயன்படுத்திக் கொள்ள, அன்னிய நிறுவனங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|