பதிவு செய்த நாள்
22 ஏப்2019
00:14

வழக்கம்போல், இன்னொரு கனவுப் பயணம் சிறகொடிந்து நின்றுவிட்டது. கடந்த புதன் கிழமை இரவோடு, இந்தியாவின் மிக முக்கியமான விமான சேவையான ஜெட் ஏர்வேஸின் கடைசி விமானம் தரையிறங்கியது. இனி, மீண்டும் பறக்குமா, பறக்காதா, என்ன ஆகப் போகிறது?
கடந்த, 1991ல் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமான பின், இந்திய விமானத் துறையும் புதிய சிறகை விரித்தது. பல தனியார் நிறுவனங்கள், விமானச் சேவையைத் தொடங்கின. முதலில் உள்நாட்டிலும், பின் வெளிநாடுகளிலும் தம் சேவையை விரிவுபடுத்தின.அப்படி தொடங்கப்பட்ட சேவைகளில், எட்டு நிறுவனங்கள் ஏற்கனவே தன் பயணத்தை முடித்துக்கொண்டன. கடந்த புதன் அன்று, ஜெட் ஏர்வேஸும் அந்த வரிசையில் சேர்ந்து கொண்டது.
இதற்கு முன், கிங்பிஷர் விமான சேவை நின்றபோது ஏற்பட்ட அதிர்ச்சியைவிட, இது மிகவும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் ஏர்வேஸின் சரிவு என்பது இந்தியாவின் பொருளாதார நலத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமைகிறதோ என்ற அச்சம் எழாமல் இல்லை.ஜெட் ஏர்வேஸ், 8,500 கோடி ரூபாய் வங்கிக் கடனில் தத்தளிக்கிறது. இன்னும், 3,500 கோடி ரூபாய் வெளியே தரவேண்டியது பாக்கி இருக்கிறது. எங்கே சரிவு தொடங்கியது என்று கணிக்க முடியவில்லை. ஏர் சகாராவை வாங்கி, அதை, ‘ஜெட் லைட்’ என்ற பெயரில் சேவை வழங்கியதில் தொடங்கியது வீழ்ச்சி என்று ஒருசிலர் கணிக்கின்றனர்.
இன்னொருபுறம், விலை மலிவு விமான சேவைகள் பெருகியதால், அதனோடு போட்டி போட முடியாமல், ஜெட் சறுக்கியது என்றும் மதிப்பிடுகின்றனர்.இதன் தலைவரான நரேஷ் கோயல் முன்னரே பதவி விலகியிருந்தால், ஜெட்டைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பதும் இன்னொரு கருத்து. விடாப்பிடியாக தன் சேர்மன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றதோடு, தம் கட்டுப்பாடுகளை விட்டுத்தர மறுத்தது தான், பிற முதலீட்டாளர் வரமறுத்ததற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
விமான சேவையின் செலவுகளில், 40 சதவீதம், அதன் எரிபொருளுக்கு மட்டுமே பயன்படுகிறது. அதன் விலைகள் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால், விமான நிறுவனங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.ஜெட் ஏர்வேஸின் விமானங்களில், அதன் சொந்த விமானங்கள் மிகவும் சொற்பமானவை. மிச்சமெல்லாம் குத்தகைக்கு வாங்கி ஓட்டப்பட்டவைதான். குத்தகைக் கட்டணம் ஒவ்வொரு முறையும் அதிகமாகிக் கொண்டே சென்றதும், நஷ்டத்துக்கு வழிவகுத்தது.
அதேபோல், பணியாளர்கள் செலவுகள். தரமான விமானிகள், விமான நிலைய பணியாளர்கள், இதர பணியாளர்கள் அனைவருக்கும் நல்ல சம்பளம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் தரமான சேவையைத் தர முடியும். இந்தச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்ததும் சரிவுக்கு முக்கியமான காரணம்.அரசு உதவி செய்திருக்க வேண்டும். எஸ்.பி.ஐ., தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, கொடுக்கிறேன் என்று சொன்ன கடன் தொகையை வழங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாததால் தான், ஜெட்டின் டயர் பஞ்சராகிவிட்டது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இவையெல்லாமே சரியான காரணங்கள் தான்; மறுப்பதற்கில்லை. ஆனால், அடிப்படையில் ஒரு கேள்வியை எழுப்பவேண்டியிருக்கிறது. சாத்தியமற்ற ஒன்றை சாத்தியப்படுத்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டி செயல்படுவதால், என்ன பயன் ஏற்படப் போகிறது? கையைச் சுட்டுக்கொண்டது தானே மிச்சம்!ஆம், விமானப் பயணம் என்பது இயல்பிலேயே அதிக செலவு பிடிக்கக்கூடியது. மேலே சொன்ன அத்தனை காரணிகளையும் உள்ளடக்கியது. அப்படியானால், நிச்சயம் விமான கட்டணங்களும் அதிகமாகவே இருந்தாக வேண்டும். வாடிக்கையாளர்கள்தான் இந்தக் கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். இது தான் யதார்த்தம்.
இதற்கு மாறாக, கட்டணங்கள் குறைவாக இருக்கவேண்டும் என்று திட்டமிடும்போது, வரவுக்கும் செலவுக்கும் என்றுமே ஈடுசெய்ய முடியாது. அல்லது அப்படி ஈடாகும் வரை, விமான நிறுவனத்தை நடத்திச் செல்ல போதிய முதலீடு தேவை. நஷ்டத்தைத் தாங்கும் வலிமை தேவை.எல்லாருக்குமான விமான சேவை; சாமானியர்களும் விமானத்தில் பறக்கலாம் என்றெல்லாம் கனவு காணுவது சுலபம். ஆனால், அது நடைமுறைச் சாத்தியமில்லை, விஷப்பரிட்சை என்பது இன்னொரு முறை நிரூபணமாகியிருக்கிறது.
இதற்கு முன் கடையைக் கட்டிக்கொண்டு போன ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும் இதே காரணங்களைத்தான் அப்போதும் தெரிவித்தது.இதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தான் பயமுறுத்துகின்றன. சுமார், 22 ஆயிரம் பணியாளர்கள், கண்ணில் நீர் தேக்கி நிற்கின்றனர். ஜெட்டை நம்பி வெளியே பணி செய்தவர்கள் எல்லாருமே தவித்துப் போயிருக்கின்றனர். கடன் கொடுத்த வங்கிகள் முதற்கொண்டு, எரிபொருள் வழங்கிய எண்ணெய் நிறுவனங்கள், இதர சப்ளையர்கள், ஜெட்டின் பங்கில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர் வரை அனைவருமே நஷ்டத்தில் தத்தளிக்கின்றனர்.
இப்போது மீண்டும் ஜெட்டை பறக்க வைக்க என்ன தேவை? முதலில் பணியாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளம் தர, 600 கோடி ரூபாய் தேவை. அதன் பின், விமானச் சேவை நடத்துவதற்கு 7,000 கோடி ரூபாயாவது தேவை. இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்ய முன்வருபவர்கள் ஒரு விஷயத்தைக் கேட்கின்றனர்.வங்கிகளிடம் ஜெட் வாங்கியிருக்கும் கடனில், அதாவது, 8,500 கோடி ரூபாயில், 80 சதவீதத்தை அந்த வங்கிகள் விட்டுத் தரவேண்டும். இதுவரை தரைதட்டிப் போன எட்டு விமான நிறுவனங்களும் மீண்டும் சிறகசைத்துப் பறந்ததாக சரித்திரமில்லை.
ஜெட்டுக்கும் அதே நிலைமை தான். உண்மையில், மக்களிடம் போதிய வருவாயை ஏற்படுத்தி, அவர்கள் முழுக் கட்டணம் செலுத்தி, விமானச் சேவையைப் பெறும்போது தான், விமான நிறுவனங்கள் பிழைக்க முடியும். அதுவரை இத்தகைய சோகங்களைத் தவிர்க்கவே முடியாது.
-ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|