விலகுமா, மதிப்பீட்டு சந்தேகங்கள்? விலகுமா, மதிப்பீட்டு சந்தேகங்கள்? ... தேர்தலால் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை தேர்தலால் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை ...
ஆர்.பி.ஐ.,க்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
07:04

‘ரிசர்வ் வங்கி எனப்படும், ஆர்.பி.ஐ., பல்வேறு வங்கிகளில் ஆண்டுதோறும் நடத்தும் ஆய்வு அறிக்கைகளையும், இன்ன பிற தகவல்களையும், தகவல் உரிமைச் சட்டத்தின் படி, மனுதாரர்களுக்கு வழங்கவேண்டும்’ என கடுமையாக உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.

இத்தகைய ஆய்வு அறிக்கைகளில் பல முக்கிய விபரங்கள் அடங்கியுள்ளன. அவற்றை வெளியிட்டால், அது வாடிக்கையாளர் உறவுகளைப் பாதிக்கும் என்பது ஆர்.பி.ஐ.,யின் கருத்து. அதனாலேயே, பல அறிக்கைகளை வெளியிட மறுத்து வந்தது.இதற்கு ஆரம்பம், 2015ல் இருந்தே இருக்கிறது. அப்போது, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி., வங்கி, பாரத ஸ்டேட் பேங்க் ஆகிய வங்கிகளின் ஆண்டு ஆய்வு அறிக்கைகளைக் கோரி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்யப்பட்டு இருந்தது.

அதே சட்டத்தின் ஒருசில பிரிவுகள் வழங்கிய வாய்ப்புகளைச் சுட்டிக் காட்டி, ஆர்.பி.ஐ., தகவல்களை வெளியிட மறுத்தது.ஆனால், அப்போதே, உச்ச நீதிமன்ற நீதிபதி, எம்.ஒய். இக்பால் இதனை ஏற்கவில்லை. பொதுமக்களின் பணத்தைக் கையாளும் அமைப்பான ஆர்.பி.ஐ., வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்றார்.ஆனால், பல நிறுவனங்களோடும் வாடிக்கையாளர்களோடும் இருக்கும் வணிக உறவைச் சுட்டிக் காட்டி, ஆர்.பி.ஐ., வங்கி ஆய்வு அறிக்கைகளை வெளியிட மறுத்தது. மேலும் அது எந்தெந்த விபரங்களை வெளியிடும் என்பது தொடர்பாக ஒரு கொள்கைக் குறிப்பையும் உருவாக்கி இருந்தது. இதனையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

தேசிய அளவில் மிகவும் முக்கியமான ஒரு தீர்ப்பாக இந்த விஷயம் கவனிக்கப்படுகிறது. ஏன் இந்த முக்கியத்துவம்?இந்த விபரங்களையெல்லாம் பாருங்கள்.கடந்த ஐந்து ஆண்டுகளில், திரும்ப வராது என்று தலைமுழுகப் பட்ட வாராக்கடன் தொகை எவ்வளவு தெரியுமா? 5.56 லட்சம் கோடி ரூபாய். 200க்கும் மேற்பட்ட, மூடப்பட்ட நிறுவனங்களின் கணக்குவழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அவை ஏற்கெனவே திவால் சட்டத்தின் படி வழக்குகளைச் சந்தித்துக்கொண்டிருப்பவை. இவை செய்திருக்கும் பொருளாதார முறைகேடுகளின் அளவு ஒரு லட்சம் கோடி வரை.

 2015-- – 16ல், 1 லட்ச ரூபாய்க்கு மேல் நடைபெற்ற வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 4,693 என்றால், 2016---- – 17ல் அதுவே 5,076 ஆகவும், 2017 – -18ல், அதுவே 5,917 ஆகவும் உயர்ந்துஉள்ளன.

 வங்கியில் மோசடி செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஓடியவர்களின் எண்ணிக்கை, 41. அதில், 12 பேர், 1 லட்சத்து, 97 ஆயிரத்து, 769 கோடி ரூபாயை ஏமாற்றினர். மிச்சமுள்ள 29 பேர், 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 846 கோடி ரூபாயை சுருட்டினர். அதாவது மொத்தமாக ஏமாற்றப்பட்ட தொகை, 3.34 லட்சம் கோடி ரூபாய்.

வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றியவர்கள், அதுவும், 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு, 1.55 லட்சம் கோடி ரூபாய்.இவையெல்லாம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளின் மூலமும் இதர ஆய்வு அமைப்புகளின் மூலமும் வெளியான தகவல்கள். இவையெல்லாம் ஒரு விஷயத்தைத்தான் சொல்கின்றன. வங்கிகளுக்குள் நடைபெறும் பல்வேறு பரிவர்த்தனைகளில், ஒருசில குளறுபடிகள் உள்ளன. தெரிந்தே தவறுகள் நடப்பது ஒருபுறம். மறுபுறம், நடைமுறைகள், நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் போவதால் ஏற்படும் பாதிப்புகள்.

பெரும்பாலான சமயங்களில், எல்லாமே நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பது போன்றே தெரியும். ஆனால், அதில் உள்ள ஓட்டைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வுகளில் தான் வெளிவரும். உதாரணமாக, பல நிறுவனங்களின் கடன்கள் மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும். இதற்கு, ‘எவர்கிரீனிங்’ என்று பெயர். கூடுதல் கடன்கள் கொடுக்கப்பட்டு, பழைய கடன்களை அடைக்க வழிசெய்யப்படும். இதெல்லாம் எந்த அடிப்படையில் அல்லது நம்பிக்கையில் நடைபெறுகிறது என்பதே கேள்விக்குறிதான்.

அதேபோல், யாரெல்லாம் வங்கிகளை ஏமாற்றியுள்ளார்கள் என்ற பெயர் பட்டியலும் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர்களுடைய கெளரவத்தைக் காக்கவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை வங்கிகள் பின்பற்றுகின்றன. வங்கிகளுக்குள் இருக்கும் பெரும்பாலான பிரச்னைகளையும் குளறுபடிகளையும், ஆண்டு ஆய்வு அறிக்கைகள் கண்டுபிடித்துவிடும் என, தெரிவிக்கிறார்கள் வங்கியியல் நிபுணர்கள். அதனை ஒட்டி சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நபர்கள் மாற்றப்படுகிறார்கள். அல்லது நடைமுறைகளில் மேன்மேலும் ஒழுங்கு கொண்டுவரப்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

இவையெல்லாம் வங்கிக்குள்ளேயே நடப்பது நல்லதா? அவற்றை வெளிப்படையாக தெரிவிப்பது நல்லதா என்ற கேள்விதான் இத்தனை ஆண்டுகளும் ஓடிக்கொண்டிருந்தது.மக்களுடைய பணத்தைக் கையாளும் வங்கிகள், வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டும் என்று விரும்புகிறது உச்ச நீதிமன்றம். இதில் இருக்கும் சிக்கல்களை மறுப்பதற்கில்லை. இந்த ஆண்டு அறிக்கைகளை முழுதாகப் புரிந்துகொண்டு, அதற்கு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளையும் மதித்து, கருத்து கூறுவோர் ஒருபுறம் என்றால், அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக, அதில் காணப்படும் குறைகள் சுட்டிக்காட்டப்படுவதும், ஒருசில விவரங்கள் மட்டும் ஊதிப் பெரிதாக்கப்படுவதும் நிச்சயம நடைபெறவே செய்யும்.

ஜனநாயக நாட்டில் இத்தகைய அவதுாறு பிரசாரத்தைத் தவிர்க்கவே முடியாது. ஆனால், வெளிப்படைத்தன்மை என்பது வங்கிகளுக்கும் ஆர்.பி.ஐ.,க்கும் கூடுதல் பொறுப்பை வழங்கும். அதன் மூலம், சின்ன தவறு நேர்ந்தாலும் தாம் பொதுமக்களின் நன்மதிப்பை இழந்துவிடுவோம்; ஊடகங்களால் தோலுரிக்கப்படுவோம் என்ற அச்சம் எழும். மக்கள் தான் தங்களது உண்மையான கண்காணிப்பாளர்கள் என்ற எண்ணம் வலுப்பெறும்.எந்த ஒன்றையும் பிரச்னையாகவும் பார்க்கலாம், வாய்ப்பாகவும் பார்க்கலாம். ஆர்.பி.ஐ., உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு வாய்ப்பாகப் பார்த்து, வங்கித் துறை சீர்திருத்தத்தை மேலும் முடுக்கிவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)