பதிவு செய்த நாள்
05 மே2019
23:57

அமெரிக்க பங்குச் சந்தையில், நிறுவனங்கள் சார்ந்த வருங்கால எதிர்பார்ப்புகளை சீராகவும், முறைப்படுத்தப்பட்ட விதமாகவும் எடுத்துச் சொல்லும் வழிமுறையை, ‘வழிகாட்டல்’ என்று சொல்வது வழக்கம். நிறுவனங்கள் தாமே முன்வந்து, தங்களுடைய எதிர்காலம் சார்ந்த எதிர்பார்ப்புகளை, முதலீட்டாளர்கள் எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவது வழக்கம்.
குறிப்பிட்ட கால இடைவெளியில், இந்த வழிகாட்டல் வழங்கப்படும். ஒவ்வொரு முறை வழிகாட்டல் வழங்கும் போதும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டல் எந்த அளவு நிறைவேற்றப்பட்டது என, சந்தை கூர்ந்து ஆய்வு செய்யும்.
ஏற்கனவே சொன்ன வழிகாட்டலை விட சிறப்பாக நிறுவனம் செயல்பட்டு இருந்தால், நிறுவனம் மீதான சந்தையின் மதிப்பு கூடலாம். ஒரு வேளை, நிறுவனம் வழிகாட்டலில் இருந்து தவறி இருந்தால், சந்தை அந்த நிறுவன போக்கை விரும்பாது.
சில சமயங்களில், அடுத்து என்ன நடக்குமோ என்ற சந்தேகங்கள் தோன்றி, சந்தையில் ஒருவித கலக்கத்தை புழங்கச் செய்யக்கூடும். அத்தகைய சூழலில், வருங்காலம் பற்றிய நிறுவன வழிகாட்டல், தொடர்ந்து சந்தையின் மதிப்பை பெற வேண்டும்.
அதேசமயம், அடிப்படையில், சந்தையின் நன்மதிப்பை ஒரு நிறுவனம் எப்படி உருவாக்கி, தொடர்ந்து கையாள்கிறது என்பது, வழிகாட்டல் முறையின் வெற்றி, தோல்வியை பெரிதும் பாதிக்கும்.சந்தையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவும், சீராக தொடர்ந்து கையாளவும், எவ்வித ஏமாற்றங்களும் ஏற்படாத வண்ணம் அவை அமையவும் வழிகாட்டல் வழிவகுக்கிறது.
ஆகவே, நிறுவனங்கள் அதிக பொறுப்புடன், உரிய முன்யோசனையோடு வழிகாட்ட வேண்டியது அவசியம். ஆனால், நடைமுறையில் எவ்வளவு தான் பொறுப்புடன் வழிகாட்டினாலும், அவை பல சந்தர்ப்பங்களில் நிறைவேறாமல் போகலாம்.இத்தகைய சூழலில், அடுத்து நிறுவனம் சொல்வதை சந்தை ஏற்குமா, இல்லையா என்பது தான், ஒரு நல்ல நிறுவனத்திற்கும், சராசரி நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசம்.
நம்பகத்தன்மையை இழக்காத நிறுவனங்கள், தொடர்ந்து நேர்மையாக வழிகாட்ட வேண்டும். மாறி மாறி பேசும் தன்மையுள்ள நிறுவனங்கள், சந்தையின் நம்பிக்கையை முழுதும் இழந்து விடும். அப்படி இழக்கும் மதிப்பை, பெரும்பாலான நிறுவனங்கள், மீண்டும் சம்பாதிப்பது இல்லை.சந்தையின் தொடர் மதிப்பை பெறும் நிறுவனங்களுக்கு என, ஒருவித இலக்கணம் உண்டு. அத்தகைய நிறுவனங்கள் சீராகவும், மிக கவனமாகவும் வழிகாட்டும் வழக்கம் கொண்டவையாக இருக்கும்.
பொறுப்பான நிறுவன தலைமை எப்போதுமே தான் எதிர்பார்ப்பதைவிட, சற்றே குறைவாக வழிகாட்டுவது வழக்கம். தொடர்ந்து கவனமாக வழிகாட்டி, பிறகு சிறப்பாக இயங்கும் நிறுவனங்கள், சந்தையின் பிடித்தமான நிறுவனங்கள் ஆகிவிடும்.இப்படி சம்பாதிக்கும் அங்கீகாரத்தையும், நம்பிக்கையையும், நன்மதிப்பையும் அவர்கள் நெடுங்காலம் காப்பாற்றி பேணுவது வழக்கம்.
நிறுவன ஆய்வாளர்கள் அத்தகைய நிறுவனங்களை விரும்பி பரிந்துரைப்பது வழக்கம். எதிர்பார்ப்புகளை நிர்வகிக்கவும், சிறப்பாக கையாளவும் சந்தை பயன்படுத்தும் முக்கிய கருவியே வழிகாட்டல் தான். நிறுவன வர்த்தக வளர்ச்சி, லாப பெருக்க வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்கு தரும் டிவிடெண்ட் வளர்ச்சி, புதிய தொழில் வளர்ச்சி என, சந்தை எதிர்பார்க்கும் முக்கிய குறியீடுகளில், நிறுவனத்தின் வழிகாட்டல், சந்தையால் கூர்ந்து கவனிக்கப்படும். அவற்றை சிறப்பாக கையாளும் நிறுவனங்கள் மட்டுமே, சந்தையின், ‘புளூ சிப்’ நிறுவனங்களாக போற்றப்படும்.
ஷியாம் சேகர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|