பதிவு செய்த நாள்
11 மே2019
23:47

வாஷிங்டன்:சீனா உடனான பேச்சில் சுமுக தீர்வு ஏற்படாததை அடுத்து, ஏற்கனவே பல பொருட்களுக்கு உயர்த்திய வரியுடன், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் எஞ்சிய பொருட்களுக்கும் வரியை உயர்த்த, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தன் நாட்டு பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வேண்டும் என, சீனாவை நிர்ப்பந்தித்து வருகிறார்; அத்துடன், தொழில்நுட்ப பரிமாற்றம், அறிவு சார் சொத்துரிமை சார்ந்த விதிகளை தளர்த்தவும், வலியுறுத்தியுள்ளார்.
சீனா வலியுறுத்தல்
இதையடுத்து, அமெரிக்க பொருட்கள் இறக்குமதியை அதிகரிக்க, சீனா ஒப்புக் கொண்டது. எனினும், பரஸ்பர வர்த்தகம் இயல்பாக நடைபெற, ஏற்கனவே உயர்த்தியவரியை நீக்குமாறு, அமெரிக்காவை, சீனா வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக, இரு நாடுகள் இடையே ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சில், இழுபறி நீடித்து வந்தது.இந்நிலையில், பொறுமை இழந்த டிரம்ப், ‘சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாததால், அந்நாட்டின், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு 10 – 25 சதவீதம் வரி உயர்த்தப்படும்’ என, சில தினங்களுக்கு முன், அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
உடனே, சீன துணை அதிபர், லியு ஹீ தலைமையிலான குழு, இரண்டு நாள் பயணமாக, அமெரிக்கா வந்து, அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதி, ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியது.முதல் நாள் பேச்சில் உடன்பாடு ஏற்படாத சூழலில், டிரம்ப் ஏற்கனவே அறிவித்தபடி, நேற்று முன்தினம், சீனப் பொருட்கள் மீதான வரி உயர்வு, அமலுக்கு வந்தது.அன்று நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சிலும் சுமுக தீர்வு ஏற்படாததால், சீனக் குழு, ஊர் திரும்பியது.
தீர்வு
இதனால், ஆத்திரம் அடைந்த டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதியாகும், 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான எஞ்சிய பொருட்களுக்கும், சுங்க வரியை உயர்த்துமாறு, வர்த்தக அமைச்சகத்திற்கு நேற்று உத்தரவிட்டார்.இதன் மூலம், அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும், வரி உயரும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து, அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி, ராபர்ட் லைட்திசர் கூறியதாவது:சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஞ்சிய பொருட்களுக்கு வரியை உயர்த்த, டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அவர் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களின் வரி உயர்வு, அமலுக்கு வந்துள்ளது.தற்போது, புதிய உத்தரவால், மேலும், 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களின் வரி உயர்த்தப்பட உள்ளது. வரி உயர்வு விபரம், ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா உடனான சுமுக பேச்சுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுபோல, சீனாவும், ‘அமெரிக்கா உடனான பேச்சு முறிய வில்லை’ என, பசப்பியுள்ளது.
வர்த்தகப் போர்
எனினும், அமெரிக்காவின் அதிரடிக்கு பதிலடியாக, அந்நாட்டு பொருட்களுக்கு, சீனாவும் வரியை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இரு நாடுகளின் வரி பிரச்னையால், சர்வதேச அளவில் வர்த்தகப் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பல ஆண்டுகளாக, சீனா உடன் நாம் முட்டாள்தனமாக வர்த்தகம் புரிந்து வந்துள்ளோம். இதனால், ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி டாலர் வீதம், பல ஆண்டுகளாக நாம் பணத்தை இழந்துள்ளோம். இதற்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப்,
அமெரிக்க அதிபர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|