பதிவு செய்த நாள்
12 மே2019
23:47

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த மூன்று வாரங்களாக, சரிவில் வர்த்தகமாகி வருகிறது. நடப்பாண்டின் புதிய உச்சத்தில் இருந்து, ஒரு பேரலுக்கு, 6 அமெரிக்க டாலர் வரை, விலை குறைந்துள்ளது.கடந்த பல மாதங்களாக அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் இருந்து வருகிறது. மோதல் போக்கை தீர்க்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுவரை எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீதம் வரை வரியை கூடுதலாக விதித்துள்ளது அமெரிக்கா.இப்புதிய வரி விதிப்பு காரணமாக, வர்த்தக மோதல் மேலும் அதிகரிக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் கருதப்பட்டதால், விலை சரிவு நிகழ்ந்தது.நடப்பாண்டின் முதல் காலாண்டான, ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளின் கச்சா எண்ணெய் நுகர்வு, உலகின் மொத்த நுகர்வில், 34 சதவீதமாக இருந்தது
என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டின் துவக்கம் முதல் இதுவரை, எண்ணெய் விலை, 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, உற்பத்தி குறைப்பு நடவடிக்கை. எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான, ஒபெக் உடன் ரஷ்யாவும் இணைந்து, உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதன்படி, ஜனவரி முதல், ஜூன் வரையிலான ஆறு மாத கால கட்டத்தில், தினசரி எண்ணெய் உற்பத்தியை, 1.2 மில்லியன் பேரல்கள் குறைத்துள்ளன.
அடுத்து, ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளின் மீது, அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை. இதனால், இந்நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி, பாதிப்புக்கு உள்ளானது.வெனிசுலா நாட்டின் தினசரி உற்பத்தி, 2 லட்சத்து, 70 ஆயிரம் பேரல்கள் குறைந்து, மார்ச் மாதத்தில், தினசரி உற்பத்தி, 7 லட்சத்து, 32 ஆயிரம் பேரல்களாக இருந்தது. ஈரான் நாட்டின் தினசரி உற்பத்தி, 2.7 மில்லியன் பேரல்கள் என்ற நிலையில் உள்ளது.
தற்போது, அமெரிக்காவின் தினசரி உற்பத்தி, 11.8 மில்லியன் பேரல்கள் ஆக கடந்த வாரம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, உற்பத்தியில் அமெரிக்கா, உலக அளவில், முதல் இடத்தை
பிடித்துள்ளது. இப்போக்கு தொடரும் சூழலில், 2025ல், சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகியவை உற்பத்தி செய்யும் அளவுக்கு அமெரிக்கா முன்னிலை வகிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
தங்கம் வெள்ளி
கடந்த வாரம் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, அதற்கு முந்தைய வாரத்தை விட அதிகரித்து, வர்த்தகம் ஆனது.இதற்கு,
அமெரிக்க நாணயத்தின் மதிப்பு சரிந்தது ஒரு காரணமாகும். அடுத்து,
அமெரிக்கா, சீனா ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தக மோதல்
வலுவடைந்திருப்பது இன்னொரு காரணமாகும்.கடந்த பல
மாதங்களாகவே, அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக மோதல் போக்கு
அதிகரித்து வருகிறது. இந்நிலையை மாற்ற, இரு நாட்டினருக்கும் இடையே
பேச்சுகள் நடைபெற்று வந்தன. ஆனால், இந்தப் பேச்சுகளில் எந்த ஒரு
சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில்,
அமெரிக்க அதிபர், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 5,700
பொருட்களுக்கு, 10 முதல், 25 சதவீதம் வரை இறக்குமதி வரியை
அதிகரித்து அறிவித்துள்ளார். இதனால், மோதல் போக்கு மேலும் தொடரும்
என கருதப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக, பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்ற கண்ணோட்டத்தால், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை உயர்ந்தன. வர்த்தக
மோதல் நிலை மேலும் தொடரும் நிலையில், தங்கம், வெள்ளி விலை மீண்டும்
உயர வாய்ப்பு உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற, அமெரிக்க மத்திய
வங்கியின் வட்டி விகிதக் கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்தவித
மாற்றமும் செய்யப்படவில்லை என, அறிவிப்பு வெளியானது.
வட்டி
விகிதமும் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலையும் எதிர்மறையான
போக்கை கொண்டதாக இருக்கும். அதாவது வட்டி விகிதம் உயரும்போது,
முதலீட்டாளர்கள், அரசு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வர். இதனால், தங்கம் மீதான முதலீடு குறையும்.
மாறாக,
வட்டி விகிதம் குறையும்போது, தங்கம் மீதான முதலீட்டில் ஆதாயம்
உயரும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது
வழக்கமாகும்.
எனவே, வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஈரான்
நாட்டின் மீது, அமெரிக்கா கொண்டு வந்துள்ள பொருளாதார தடை மேலும்
தொடரும் சூழலில், அந்நாட்டின் மீதான கண்காணிப்பை அமெரிக்கா வலுப்
படுத்தி
வருகிறது. தற்போது, கத்தார் நாட்டில் அமெரிக்கா ராணுவத்தை நிறுத்தி
வைத்துள்ளது. இத்தகைய அசாதாரண சூழல்கள், சந்தையில் தங்கத்தின்
விலை உயர காரணமாக அமைகிறது.
செம்பு
கடந்த நான்கு
வாரங்களாக செம்பு தொடர் சரிவில் வர்த்தகம் ஆகிறது. நடப்பாண்டின்
உச்சத்தில் இருந்து, 9 சதவீதம் அளவுக்கு விலை சரிந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
செம்பு நுகர்வில் ஏற்பட்ட தொய்வு
காரணமாகவும், அமெரிக்கா, சீனா ஆகியவற்றுக்கு இடையேயான
வர்த்தகம் மோதல் போக்கு காரணமாகவும் விலை சரிந்து வர்த்தகமாகி
வருகிறது.
சீனாவின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டின் வளர்ச்சி,
இவ்வாண்டு துவக்கம் முதல் சரிந்து வரும் சூழலால், செம்பின் தேவை
குறைந்து வருகிறது.
உலக அளவில் செம்பை பொறுத்தவரை, தேவை மற்றும்
நுகர்வில் சீனா முதலிடம் வகிக்கிறது. இங்கு தேவை குறைந்ததால், விலை
ஏற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. லண்டன் பொருள் வாணிப
சந்தையில், செம்பு இருப்பானது கடந்த வாரம், 34 ஆயிரத்து, 900 டன்
அதிகரித்து, மொத்த இருப்பு, 66 ஆயிரத்து, 325 டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|