பதிவு செய்த நாள்
13 மே2019
00:03

நம் நாட்டின், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ என்ற, ஜி.டி.பி., மதிப்பீடுகள் தவறோ என்ற அச்சம், முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார அறிஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த வாரம், என்.எஸ்.எஸ்.ஓ., என்ற, ‘தேசிய மாதிரி ஆய்வு மையம்’ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையே இதற்கு அடிப்படை.இந்தியா வெளியிடும் பல்வேறு புள்ளி விபரங்களில் மிகவும் முக்கியமானது, ஜி.டி.பி., நம் நாட்டில் தயாராகும் பொருட்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் மொத்த உற்பத்தி அளவு திரட்டப்படும்.
அதை, அப்பொருட்களுக்கான சந்தை மதிப்போடு பெருக்கி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு செய்யப்படும். இதை காலாண்டுகள் தோறும் வெளியிடுவதோடு, முழு ஆண்டு மதிப்பீடும் வெளியிடப்படும்.நம் நாடு வளர்ந்து கொண்டிருக்கிறதா, எவ்வளவு விரைவாக முன்னேறி கொண்டிருக்கிறது என்பதற்கான ஆதாரமே இந்த, ஜி.டி.பி., தான். சர்வதேச முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் இதுதான் ஆரம்பப் புள்ளி.
பல்வேறு பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும், அமைப்புகளும், இந்தியாவின், ஜி.டி.பி., மதிப்பீட்டை அடித்தளமாகக் கொண்டே, இதன் வளம் தொடர்பான முடிவுகளுக்கு வருகின்றன.கணக்கிடும் முறைஜி.டி.பி., மதிப்பீடுகளை கணக்கிட, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் உற்பத்தி என்னவென்று தெரிய வேண்டும் அல்லவா? அதற்கு அடிப்படையாக இருப்பது தான், ‘எம்.சி.ஏ., 21’ எனப்படும் பட்டியல். மத்திய கம்பெனி விவகாரத் துறை நிர்வகிக்கும் இந்த பட்டியலில், 3.5 லட்சம் நிறுவனங்கள் உள்ளன.
என்.எஸ்.எஸ்.ஓ., சேவை துறையில், இந்தியாவின் வளர்ச்சியை ஆய்வு செய்ய முனைந்தது. அதற்காக, எம்.சி.ஏ., 21 தரவுத் தளத்தில் இருந்து, 35 ஆயிரம் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, ஆய்வு மேற்கொண்டது. அப்போது தான், அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளிவந்தன.அவர்கள் தொடர்பு கொண்ட நிறுவனங்களில், 36 சதவீத நிறுவனங்களை கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதில், 15 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன; 21 சதவீத நிறுவனங்கள் இயங்கவே இல்லை அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் இல்லை.
கண்டுபிடிக்கப்பட்ட நிறுவனங்களில், 7 சதவீத நிறுவனங்கள், ஆய்வுக் கேள்விகளுக்கு பதிலே அளிக்கவில்லை.எம்.சி.ஏ., 21 பட்டியலில் உள்ள நிறுவனங்கள் எல்லாம், ‘இயங்கிக் கொண்டிருப்பவை’ என, கம்பெனி விவகாரத் துறை குறித்திருப்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.அதாவது, இவையெல்லாம் ஒன்று தவறாக வகைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அல்லது, உண்மையிலேயே இயங்காமல் மூடப்பட்டு இருக்க வேண்டும் அல்லது போலி நிறுவனங்களாக (ஷெல் கம்பெனிகள்) இருக்க வேண்டும்.
எப்படி இருந்தாலும், மொத்த தரவுத் தளத்தில் மூன்றில் ஒரு பகுதி நிறுவனங்கள் செயல்படாமல் இருக்குமானால், இவற்றின் உற்பத்தி அடிப்படையில் திரட்டப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும், ஜி.டி.பி., எப்படி உண்மையாக இருக்க முடியும்? இந்த அதிர்ச்சி தான் பொருளாதார வல்லுனர்களையும், புள்ளியியல் துறை அறிஞர்களையும் ஆட்டிவிட்டது.புதிய ஜி.டி.பி., வரிசைகடந்த, 2015 முதல், புதிய, ஜி.டி.பி., மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு, 2011 – -12 ம் நிதியாண்டே, கணக்கீட்டின் முதலாண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதுவரை, ஆர்.பி.ஐ., திரட்டி வந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையே, ஜி.டி.பி., கணக்கீட்டுக்கான அடிப்படை பட்டியலாக இருந்தது.புதிய, ஜி.டி.பி., கணக்கீட்டின் போது தான், ‘எம்.சி.ஏ., 21’ பட்டியல் அடிப்படையாக மாறியது. இந்தப் பட்டியல் வெளிப்படையாக அனைவர் பார்வைக்கும் வைக்கப்படவில்லை என்பதோடு, இதன் நம்பகத்தன்மை ஆரம்பத்தில் இருந்தே கேள்விக்குறியாக இருந்தது.
இப்போது, இதற்குள் இருக்கும் எண்ணற்ற ஓட்டைகள் வெளிவந்துள்ளன.என்.எஸ்.எஸ்.ஓ., மூலமாக இந்தச் சர்ச்சை வெளியானவுடன், இந்தக் குறைபாட்டால், நமது, ஜி.டி.பி., மதிப்பீடுகள் எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்று விளக்கம் அளித்திருக்கிறது, மத்திய அரசு.கேள்விகள்ஆனால், அது எப்படி சாத்தியம் என்று தான் தெரிய வில்லை. அடிப்படை பட்டியலே குறைபாடானது. அதிலிருந்து திரட்டப்படும் புள்ளி விபரங்கள் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும்?
முதலில், ஏன் இந்த, ‘எம்.சி.ஏ., 21’ பட்டியல் வெளிப்படையாக அனைவர் கண்காணிப்புக்கும் சோதனைக்கும் ஏதுவாக வெளியிடப்படவில்லை? இதற்குள் ஏன் இத்தனை செயல்படாத நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன? அவையெல்லாம் பட்டியலில் இருந்து களையப்பட்டு இருக்க வேண்டாமா?கொடுக்கப்பட்ட முகவரியில் அந்த நிறுவனங்கள் இயங்கவில்லை என்றால், அவை நஷ்டமடைந்து தம் கடையைக் கட்டிக் கொண்டு தொழிலை விட்டே வெளியேறி இருக்க வேண்டும் அல்லது போலி நிறுவனப் பதிவுகளாக இருக்க வேண்டும்.
அதாவது, ஒரு நிறுவனத்தில் உற்பத்தி செய்துவிட்டு, அவற்றை, 10 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டதாக போலி கணக்கு காட்டப்பட்டு, வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.பதிலே சொல்லாத, 7 சதவீத நிறுவனங்களும் வேறு கேள்விகளை எழுப்புகின்றன. உண்மையிலேயே அவை எதுவுமே செய்யவில்லை. அதனால் தான், ஆய்வுக் கேள்வி களுக்கு பதில் சொல்ல முன்வரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமே?
தவறான புள்ளி விபரங்கள், தவறான மதிப்பீடுகளுக்கு வழிவகுத்து விடும். இதனால், சர்வதேச பொருளாதார நிறுவனங்கள், அமைப்புகள் மத்தியில் நம்முடைய கவுரவமும் மதிப்பும் என்னாவது? உண்மை தகவல்களை மறைக்கும் நாடு என்ற அவப்பெயர் நமக்கு ஏற்பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறதே?புதிய அரசு என்ன செய்கிறதோ இல்லையோ, முதலில், நாம் வெளியிடும் புள்ளி விபரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|