பதிவு செய்த நாள்
18 மே2019
23:43

புதுடில்லி: 'மத்திய அரசின் கீழ் செயல்படும் ராணுவம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை துறைகளின் திட்டங்களுக்கு, மாநில அரசுகளும் நிதியுதவி வழங்க வேண்டும்' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
டில்லியில், இந்திய வர்த்தக தொழிலக கூட்டமைப்பான, 'அசோசெம்' ஏற்பாடு செய்த கருத்தரங்கில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர், பிபேக் தெப்ராய் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:ஆரோக்கிய பராமரிப்பு, மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இருந்தபோதிலும், மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'பிரதான் மந்திரி ஜன் ஆயுஷ்மான் யோஜனா' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில், ஒரு குடும்பம், 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு பெறலாம். இதன் மூலம், 50 கோடி பேர் பயனடைவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் இத்திட்டம், மாநில அரசுகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
முக்கியம்
அதுபோல, மத்திய அரசின் கீழ் செயல்படும் ராணுவம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகளில், மாநில அரசுகளும் பங்கேற்க வேண்டும்.இத்துறைகளுக்கு தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு, ராணுவத்தின் பங்கு மகத்தானது. ரயில்வே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும், நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவையாக உள்ளன. அதனால், இந்த மூன்று துறைகளிலும், மாநில அரசுகள் பங்கேற்க வேண்டும்.
இந்தியாவில், அனைத்து துறைகளிலும், மத்திய அரசின் பங்கு, அளவிற்கு அதிகமாக உள்ளது. அதனால், மத்திய அரசு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி மூலம் மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது.அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை கிடைக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதேசமயம், பொது நிர்வாகத்தின் பார்வையில், எந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்வதும் அவசியம்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான வரி வருவாய், 17 சதவீதம் என்ற அளவில், மிகக் குறைவாக உள்ளது. நாம் எவ்வளவு காலத்திற்கு வரி விலக்குகளை வழங்குகிறோமோ, அதுவரை எளிமையான வரி விதிப்பு முறையை அமல்படுத்துவது சிரமம்.
இந்தியா போன்ற, மிகப் பெரிய நாட்டில், எந்த அளவிற்கு நிலம், தொழிலாளர் வளம், மூலதனம் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே, வளர்ச்சியும், உற்பத்தியும் இருக்கும்.பல மாநிலங்கள், இன்னும் அரதப் பழசான, நில உரிமை கணக்கெடுப்பு விபரங்களை வைத்துள்ளன. அவற்றை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, நில உரிமம் தொடர்பான துல்லியமான புள்ளிவிபரங்களை அறியாத வரை, நிலங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது மிகவும் சிரமம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|