பதிவு செய்த நாள்
12 ஜூன்2019
23:17

புதுடில்லி:அரசு மற்றும் பொது நிறுவனங்களில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்கும் வகையில், புதிய திட்டம் குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதன்படி, நிறுவனங்களின் செயல் சாரா இயக்குனர்களுக்கு, அடிப்படையான நிறுவன சட்டங்கள், மூலதன சந்தை நெறிமுறைகள், நிறுவனங்களின் நன்னெறி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து, தேர்வு நடத்தப்படும்.தேர்வு இதன் அடிப்படையில், இயக்குனர் பதவிக்கு வருபவர்கள் குறித்து, மதிப்பீடு செய்யப்படும்.
இது குறித்து, நிறுவனங்கள் விவகாரத் துறை செயலர், இஞ்செட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில், செயல் சாரா இயக்குனர்கள் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இத்தகைய செயல்சாரா இயக்குனர்கள், இனி தேர்வுகளில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே, அவர்கள் அப்பதவியை வகிக்க முடியும்.மோசடிகளை தடுக்கும் பொறுப்பு அவர்களுக்கு இல்லை என்று, பொதுவாக கருதப்படும் போக்கை, நாங்கள் தகர்க்க முயற்சிக்கிறோம்.
மதிப்பீடுநிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம், அவர்களுடைய கடமைகள் என்ன, பங்கு என்ன, பொறுப்புகள் என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரிய வரும்.இந்த தேர்வானது, ஆன்லைனில் நடத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும். இந்திய நிறுவனங்கள் சட்டம், மூலதன சந்தை விதிமுறைகள் போன்றவை குறித்து, தேர்வுகள் நடத்தப்படும்.
வரம்பு
இயக்குனராக விருப்பப்படும் நபர்கள், குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இந்த தேர்வை எழுதி, தேர்வாக வேண்டும். ஆனால், அந்த கால வரம்புக்குள், அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.அனுபவம் மிக்க இயக்குனர்கள், தேர்வு எழுத தேவையில்லை. அவர்கள் தங்கள் பெயரை அரசிடம் பதிவு செய்து கொண்டால் போதுமானது.சிறந்த இயக்குனர்களை தேடும் நிறுவனங்களுக்கு, அவர்களை அடையாளம் காண, இந்த தேர்வு ஒரு வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
செயல் சாரா இயக்குனர்கள்
செயல் சாரா இயக்குனர்கள் ஒரு நிறுவனத்துக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள். நிறுவனத்தின் நம்பிக்கை, நிர்வாக தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொறுப்பு கொண்டவர்கள். சிக்கலான காலகட்டத்தில்,அதை தீர்க்கும் பணியில் முக்கிய பங்காற்றுபவர்கள்.பட்டியலிட பட்ட நிறுவனங்களில், மொத்த இயக்குனர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு செயல் சாரா இயக்குனர்களாக இருப்பர். பட்டியலிடப்படாத நிறுவனங்களில், சில சூழ்நிலைகளை பொறுத்து குறைந்தபட்சம் இருவர் அமர்த்தப்படுவர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|