பதிவு செய்த நாள்
20 ஜூன்2019
07:11

புதுடில்லி: முத்ரா திட்டத்தின் கீழ், தற்போது வழங்கப்பட்டு வரும், 10 லட்சம் ரூபாய் கடனை, இரு மடங்கு அதிகரித்து, 20 லட்சம் ரூபாயாக வழங்கலாம் என, ரிசர்வ் வங்கியின், நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
நுண், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான, ரிசர்வ் வங்கியின் நிபுணர்கள் குழு, தன் பரிந்துரைகளை, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸிடம் வழங்கி உள்ளது. அதில், முத்ரா திட்டத்தின் கீழ், பிணை எதுவுமில்லாமல், தற்போது வழங்கப்பட்டு வரும், 10 லட்சம் ரூபாய் கடனுதவியை, 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கலாம் என, பரிந்துரைத்துள்ளது.
பரிந்துரை:
நுண், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வரையறை குறித்து ஆராய்வதற்காக, எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி அமைத்திருந்தது. இக்குழுவுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் முன்னாள் தலைவர், யு.கே.சின்ஹா தலைமை ஏற்றுள்ளார். கடந்த செவ்வாய் அன்று, இக்குழுவானது, தன் அறிக்கையை ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.
நுண், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பொருளாதார, நிதி ஸ்திரத்தன்மை குறித்த, பல்வேறு நீண்ட கால தீர்வுகளை, இந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி குழு அளித்துள்ளது. மேலும், இடர்ப்பாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்வது குறித்தும், அறிக்கையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நுண், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வரையறையை மாற்றுவது குறித்து, அரசு சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த குழுவின் பரிந்துரைகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வளைவு:
கடந்த, 2006ம் ஆண்டின் வரையறையின் படி, கீழ்க்கண்டவாறு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வகை பிரிக்கப்பட்டுள்ளன.முதலீடு, 25 லட்சம் ரூபாய்க்கு குறைவாக செய்யப்பட்டிருந்தால், நுண் நிறுவனமாகும். முதலீடு, 25 லட்சத்திலிருந்து, 5 கோடி ரூபாய் வரை எனில், சிறு நிறுவனமாகும். முதலீடு, 5 கோடியிலிருந்து, 10 கோடி ரூபாய் வரை எனில், நடுத்தர நிறுவனமாகும்.
இதுவே, சேவை நிறுவனங்கள் எனில், 10 லட்சம் ரூபாய் வரை, நுண்; 10 லட்சம் முதல், 2 கோடி ரூபாய் வரை, சிறு; 2 கோடி முதல், 5 கோடி ரூபாய் வரை எனில், நடுத்தர நிறுவனங்களாகும். நிறுவனங்களை வகை பிரிப்பது குறித்து, அரசின் புதிய வரைவு திட்டத்தின்படி உற்பத்தி நிறுவனங்களுக்கும், சேவை நிறுவனங்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
விற்றுமுதல், 5 கோடி ரூபாய் வரை இருப்பின், அது நுண் நிறுவனமாகும். 75 கோடி ரூபாய் வரை இருப்பின், அது சிறு நிறுவனமாகும். 250 கோடி ரூபாய் வரை இருப்பின், அது நடுத்தர நிறுவனமாகும். இந்த புதிய வரைவு, அமைச்சரவை குழுவால் அங்கீகரிக்கப்பட்டாலும், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், குழுவினரின் இந்த அறிக்கையை, விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு, ரிசர்வ் வங்கி வைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முத்ரா திட்டம்:
முத்ரா திட்டத்தை, பிரதமர் மோடி, 2015 ஏப்., 8ம் தேதி துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மூன்று வகைகளில், கடன் வழங்கப்படுகிறது. ‘சிசு’ திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை; ‘கிஷோர்’ திட்டத்தில், 50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை; ‘தருண்’ திட்டத்தில், 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை கடன், வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|