பதிவு செய்த நாள்
21 ஜூன்2019
06:23

புதுடில்லி: ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ கோரும் நடைமுறையில், பல நிறுவனங்கள் மோசடி செய்துள்ளதை, அரசு கண்டுபிடித்துள்ளது. இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும், 5,106 ஏற்றுமதி நிறுவனங்களை, ‘ஆபத்தான ஏற்றுமதியாளர்கள்’ என, அரசு அடையாளப்படுத்தி உள்ளது.
இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜி.எஸ்.டி., ரீபண்டு பெறுவதற்காக, போலியான, ‘இன்வாய்ஸ்’ கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில், சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம், 1.42 லட்சம் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இவர்களில், 5,106 ஏற்றுமதியாளர்கள், இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், இத்தகைய ஆபத்தான ஏற்றுமதியாளர்கள் எண்ணிக்கை, 3.5 சதவீதம் மட்டுமே.
அனுமதி:
இவர்கள், ஆபத்தான ஏற்றுமதியாளர்கள் என தெரிய வந்திருப்பினும், அவர்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி, உடனே வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ரீபண்டை பொறுத்தவரை, உள்ளீட்டு வரிப்பயன் தீவிரமாக சரிபார்த்த பிறகே வழங்கப்படும். இந்த சரிபார்ப்பு பணிகள் அதிகபட்சம், 30 நாட்களிலேயே முடிக்கப்பட்டு விடும். இதனால், எந்த ஏற்றுமதியாளருக்கும் காலதாமதம் இருக்காது. மோசடிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., ரீபண்டு விஷயத்தில், கம்ப்யூட்டர்கள் மூலமாக மட்டுமின்றி, அலுவலர்களும் பரிசோதிக்க வேண்டும் என்ற நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம், 17, 18ம் தேதிகளில், 925 ஏற்றுமதியாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட 1,436, ‘பில்’கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. தினசரி, சராசரியாக, 9,000 ஏற்றுமதியாளர்களால், 20 ஆயிரம், ‘பில்’கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அத்துடன் இதை ஒப்பிட்டால், பெரிய குறுக்கீடுகள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.
அவப்பெயர்:
இந்த புதிய பரிசோதனை நடைமுறை, நியாயமான முறையில் நடந்து வரும் பெரும்பான்மையான ஏற்றுமதியாளர்களுக்கு, அவப்பெயர் ஏற்படாமல் தடுக்கும் எனக் கருதுகிறோம். நியாயமான ஏற்றுமதியாளர்களின் பில்கள், தானியங்கி முறையில் விரைவாக பரிசீலிக்கப்படும். ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி.,யில் இரு விதங்களில், உள்ளீட்டு வரிப்பயனை ஏற்றுமதியாளர்கள் திரும்ப பெறலாம். ஏற்றுமதி சமயத்தில், பத்திரம் அல்லது கடிதம் கொடுத்து, அதன் அடிப்படையில் ரீபண்டை பெற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்றுமதியின் போது, ஐ.ஜி.எஸ்.டி.,யை ரொக்கமாக செலுத்தி, பின் பெற்றுக் கொள்ளலாம்.
பல நேரங்களில், கப்பலில் ஏற்றப்படும் சரக்கு மதிப்புக்கும், ஜி.எஸ்.டி., தாக்கலில் குறிப்பிடப்படும் மதிப்புக்கும் இடையே, வேறுபாடுகள் காணப்படுகின்றன. இத்தகைய சந்தர்ப்பங்கள் தவிர, மற்றபடி, நியாயமான முறையில் ஏற்றுமதி விபரங்களை வழங்கி, வரி செலுத்தி வருபவர்களுக்கு, தாமதம் எதுவும் ஏற்படுவதில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|