பதிவு செய்த நாள்
08 ஜூலை2019
00:23

ஒவ்வொரு பட்ஜெட் தினத்தன்றும் பொருளாதார கேள்விகள் எழுவது சகஜம். வருங்காலம் பற்றிய கேள்விகள் இவை. தனி நபர்கள், தங்களுக்கு என்ன கிடைத்தது என்றும், பணக்காரர்கள் தங்களுக்கு என்ன பாதிப்பு என்றும், தொழிலதிபர்கள், தங்களின் வருங்கால வளர்ச்சிக்கான தேவைகள் கிடைக்குமா என்றும், ஒவ்வொரு பட்ஜெட் தினத்தன்றும் புதிய தேடலில் இறங்குவது மரபு.
இதில், வர்க்க ரீதியான எதிர்பார்ப்புகள் மிக முக்கியமானவை. ஆனால், முதலீட்டாளர்களின் பார்வை, தங்களது முதலீட்டு வளர்ச்சியை சார்ந்தும், அதனால் ஏற்படும் வரிச்சுமை சார்ந்தும் மட்டுமே அமைவது இயற்கை.இந்த பட்ஜெட்டில், முக்கிய கேள்விகள் என்ன?‘பட்ஜெட் – 2019’ நாளைய இந்தியாவிற்கு என்ன செய்திருக்கிறது? அதிக எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வளரும் நாடு, செய்ய வேண்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் இந்த பட்ஜெட் எந்த அளவு கவனத்தில் கொண்டிருக்கிறது?
இந்த பட்ஜெட்டின் முக்கிய சாதனை, பன்முகத் தன்மையுடன் பொருளாதாரத்தை அணுகி இருப்பது. பலரது வாழ்வில் முன்னேற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய இடத்தில் அரசு இருந்தாலும், அதற்கான நிதி ஆதாரம் முழுவதும் அரசிடம் இல்லை.
அவசியம்
நிதி ஆதாரம் ஏற்பட, நாம் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அன்னிய முதலீடு இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக அவசியம். உள்நாட்டு சேமிப்பும், பொருளாதார வளர்ச்சியில் அதிகமாக பங்கேற்கும் வகையில், பட்ஜெட் அமைய வேண்டும். நிதி ஒதுக்குவதை தாண்டி, பட்ஜெட் உரை, நாட்டிற்கும், உலகிற்கும் என்ன சொல்கிறது என்பதும் மிக முக்கியமாகிறது. இந்த பட்ஜெட் உரை, இதை நன்றாகச் செய்திருக்கிறது.
விவசாயம், கிராம வளர்ச்சி, நகர வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, உட்கட்டமைப்பு அமைத்தல், நீர் ஆதாரம் பெருக்குவது போன்ற அடிப்படை எதிர்கால தேவைகளை, அரசு தன் பொறுப்பில் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளது.
அதிவேக மாற்றம்
பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான தொழில் முதலீடுகளை தனியார் மூலமாகவும், பன்னாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவும் ஏற்படுத்துவதே அரசின் திட்டம்.ரயில்வே, விமானத் துறை, காப்பீட்டு துறை, சில்லரை வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் விண்வெளி துறைகளில் அதிவேக மாற்றங்களை கொண்டு வர, அரசு தெளிவாக உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு முதலீடுகளை, பன்னாட்டு முதலீடுகள் மூலமும், நேரடி அன்னிய முதலீடு மூலமும் கொண்டு வர, இந்த பட்ஜெட் முயல்கிறது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால், போதுமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.புதிய தொழில் வேகமாக துவங்க, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, புதிய, ‘லேபர் கோடு’ நிச்சயம் உதவும். கொள்கை மாற்றங்கள் மூலம் நிதித் துறையை சீரமைக்க அரசு விரைவதும், இந்த பட்ஜெட்டில் தெளிவாக உள்ளது.
மின் வாகனத் துறை வளர கொடுக்கப்படும் ஊக்கம் மிக முக்கிய கொள்கை முடிவு.பொதுத் துறை வங்கிகளை, மீண்டும் கடன் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர, அரசு மேலும் முதல் கொடுப்பதும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் முக்கிய கொள்கை முடிவு.இந்த பட்ஜெட்டின் குறைகளாக, தங்கம் மீது வரி உயர்த்தியதையும், செஸ் வரிகள் மூலம் அதிக நிதி ஆதாரம் திரட்டுவதையும் சொல்லலாம். இவை, தவிர்க்கப்பட வேண்டிய கொள்கை திசைகள்.
பணக்காரர்களை மேலும் வரி செலுத்த வைத்தது, சர்ச்சையான முடிவாகவே பார்க்கப்படும். மக்களை அரசிடம் நேர்மையாக நடக்க செய்ய, இந்த முடிவுகள் உதவுமா என்பது கேள்விக் குறியே. ஒட்டுமொத்த பார்வையில், இந்த பட்ஜெட், அரசு வளர்ச்சியை மீட்க தீவிரமாக முயற்சிப்பதை உறுதி செய்கிறது. இனி, பட்ஜெட் முன்னெடுக்கும் கொள்கைகளை, விரைவாக செயல்படுத்துவதில் தான் அரசின் வெற்றி தீர்மானிக்கப்படும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|