பதிவு செய்த நாள்
08 ஜூலை2019
00:29

நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் பட்ஜெட்டில், கவனிக்கத் தக்க அம்சம், ரியல் எஸ்டேட் துறைக்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவம். இத்துறைக்கு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கும், துறை நிபுணர்கள், மேலும் செய்ய வேண்டியதையும் பட்டியலிட்டு சொல்கின்றனர். அவையெல்லாம் என்ன?
ரியல் எஸ்டேட் துறை என்பது மூன்று பக்கங்களைக் கொண்டது. வாடிக்கையாளர், பில்டர் மற்றும் அரசு. இதில், இம்முறை அரசு முன்முயற்சி எடுத்து, ரியல் எஸ்டேட் துறைக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறது.முதலில், வாடிக்கையாளர் பக்கம் இருந்து ஆரம்பிப்போம்.
அரசு, 2022க்குள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறது. அதனால், சகாய விலையில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறது. 45 லட்சம் ரூபாய்க்குள் கட்டப்படும் வீடுகளை வாங்குபவர் களுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை, வருமான வரிச் சலுகை உண்டு. 2019 பட்ஜெட்டில், அது, 3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுமை குறையும்
இந்த வீடுகளை வாடிக்கையாளர்கள், வங்கிக் கடன் வாயிலாகத் தான் வாங்கப் போகின்றனர். அங்கே வீட்டின் மதிப்பில், 85 சதவீதம் வரை கடன் கிடைக்கும். கூடுதல் சலுகையாக, 3.5 லட்சம் ரூபாயும் கிடைக்கும்போது, முதல் வீடு வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு, சுமை பெரிதாக இராது.வீடு கட்டிக் கொடுக்கும் பில்டர்கள் பக்கம் வாருங்கள். அவர்களுடைய பெரிய பிரச்னையே முதலீடு தான்.
வங்கிகளோ, வங்கியல்லாத நிதி நிறுவனங்களோ, பல்வேறு சிரமங்களைச் சந்தித்து கொண்டு இருந்ததால், அவை, பில்டர்களுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டின. 2019 பட்ஜெட்டில், வங்கி களுக்கு மறுமுதலீட்டுத் தொகையாக, 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வங்கியல்லாத நிதி நிறுவனங்களில், உண்மையிலேயே தகுதியுடைய நிறுவனங்களை இனங்கண்டு, அவற்றுக்குக் கிடைத்து வரும் கடன் வசதி தொடர்ந்து வழங்க படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், பில்டர்கள் மத்தியில் நிதிப் புழக்கம் அதிகரிக்க வாய்ப்புண்டு. அவர்கள் மீண்டும், கட்டுமானங்களைத் துவங்க முடியும்.
இந்த இரண்டு பக்கமும் செயல்பாடுகள் வேகம் பிடிக்குமானால், பலன் அடையப் போவது அரசு தான். ஒருபக்கம் பத்திரப் பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் பெருகும். வேலை வாய்ப்புகள் பெருகும். வர்த்தகம் பெருகும். இதற்கு ஏதுவான சூழ்நிலையை, 2019 பட்ஜெட் முன்வைத்துள்ளது.
இது போதுமா?
இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம்.வாடிக்கையாளர் பக்கம் செய்யப்பட வேண்டிய முக்கியமான விஷயம், வங்கிகளின் வட்டி குறைப்பு. ரெப்போ விகிதத்தை, ஆர்.பி.ஐ., குறைத்துக் கொண்டே வருகிறது. ஆனால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களில் அது, போதுமான அளவு பிரதிபலிக்கவே இல்லை.
கடந்த, 2004 – 05 காலகட்டத்தில், ‘ப்ளோட்டிங் ரேட்’ என்ற மாறுபடக்கூடிய வட்டி விகிதம், 6.50 சதவீத அளவுக்குச் சரிந்தது. அது தந்த உத்வேகத்தில், பல்வேறு தரப்பினரும், புதிய வீடுகள் வாங்க முண்டியடித்தனர். அது தான், அடுத்த, 10 ஆண்டுகளில், மிகப்பெரும் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.பாய்ச்சல்இதேபோல், பல மாநிலங்களில், முத்திரைத்தாள் கட்டணம், 4 சதவீதம் முதல், 7 சதவீதம் வரை இருக்கிறது.
பத்திரப்பதிவுக்கு, 1 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்பதற் கான வழிமுறை காணப்பட்டால், வாடிக்கையாளர்களுக்கான செலவு குறையும்.இப்போதும் அத்தகைய வட்டி குறைப்பும், முத்திரைத்தாள் செலவும் குறையுமானால், பெரும் பாய்ச்சல் நிச்சயம்.இரண்டாவது, பில்டர்கள், புரமோட்டர்கள் பக்கம் செய்ய வேண்டிய சலுகைகள் நிறைய இருக்கின்றன.
இதில் முக்கியமானது, கட்டுமானப் பொருட்களின் விலைகள். மணல், சிமென்ட், இரும்பு என்று ஒவ்வொன்றும், ஒவ்வொரு இடங்களில், ஒவ்வொரு விதமான விலை!‘ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு’ மாதிரி, ‘ஒரு நாடு, ஒரு மணல்; ஒரு நாடு, ஒரு இரும்பு; ஒரு நாடு, ஒரு சிமென்ட்’ என்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடெங்கும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் சீராக்கப்பட வேண்டும். இதற்குள் பல்வேறு கார்ட்டெல்கள் உட்கார்ந்து, விலைகளைச் சரிய விடாமல் கட்டுப்படுத்துகின்றன.
தமிழகம் போன்ற இடங்களில், ‘ப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்’ எனப்படும், எப்.எஸ்.ஐ., இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும்.மும்பை மற்றும் வேறு சில நகரங்களில் வீடு கட்டவே இடமில்லை. அங்கேயெல்லாம் அரசின் நிலங்கள், ரயில்வே துறை நிலங்கள் ஆகியவற்றை நீண்ட கால லீசுக்கு வழங்கி, கட்டுமானத் துறையை ஊக்குவிக்கலாம்.
தனிக்கவனம்
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்பது, நம் இந்திய மனங்களில் ஆழப் பதிந்த சிந்தனை. அதனால், எப்படியாவது பணத்தைப் புரட்டி வீடு வாங்குவது இயற்கை. இதற்கு மேலும் வசதி செய்து தரவேண்டியது தான் இந்திய அரசின் கடமை.மேலும், ரியல் எஸ்டேட் துறை தான் நேரடியாகவும், துணைத் தொழில்களின் மூலமாகவும் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. அதனால், அரசு இதற்கென தனிக்கவனம் எடுத்து, பல்வேறு நெருடல்களையும், இடறல் களையும் சீர்படுத்த வேண்டும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|