பதிவு செய்த நாள்
25 ஜூலை2019
05:16

புதுடில்லி: ‘அடுத்த ஆறு மாதங்களில், வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்’ என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதள நிறுவனமான, ‘நோக்ரி டாட் காம்’ ஜூலை முதல், வரும் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், வேலைவாய்ப்புகள் குறித்து, ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 15 துறைகளில், வேலைவாய்ப்புகளை வழங்கும் 2,700 பேரிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிறுவனங்களில், பணியில் அமர்த்தப்படுவோர் எண்ணிக்கை, ஜூலை முதல், டிசம்பர் வரையிலான அரையாண்டு காலகட்டத்தில் அதிகரிக்கும். குறிப்பாக, மூன்று முதல், ஐந்து ஆண்டுகள் அனுபவம் உடையவர்களுக்கு, அதிகளவிலான வேலைவாய்ப்புகள் ஏற்படும்.புதிய வேலைகள் உருவாகுவது மகிழ்ச்சி தரும் செய்தி தான் என்றாலும், சரியான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்கள் தொடரவே செய்கின்றன.
வேலைவாய்ப்புகளை வழங்குபவர்களில், 41 சதவீதம் பேர், அடுத்த ஆறு மாதங்களில், திறமையானவர்கள் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும் என, தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 50 சதவீதம் பேர், இதே கருத்தை தெரிவித்திருந்தனர்.ப ணியமர்த்துபவர்களில், 16 சதவீதம் பேர், இந்த ஆறு மாதங்களில், காலியாக இருக்கும் இடங்களுக்கு மட்டுமே, பணியில் அமர்த்தப்படுவர் என, தெரிவித்துள்ளனர்.
புதிதாக யாரும் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என, 5 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். ஒரு சதவீதம் பேர், மதிப்பீட்டு காலத்தில், பணிநீக்கமே இருக்கும் என, எதிர்பார்க்கின்றனர். ஒட்டு மொத்தத்தில், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை, தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஓ., வங்கி, நிதிச் சேவை, காப்பீடு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களே தெரிவித்து உள்ளனர். இத்துறைகளைச் சேர்ந்தவர்களில், 80 முதல், 85 சதவீதம் பேர், புதிய வேலைகள் உருவாகும் என, குறிப்பிட்டுள்ளனர்.
அனுபவ அடிப்படையிலான வேலைவாய்ப்பில், மூன்று முதல் ஐந்து ஆண்டு அனுபவம் கொண்டவர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இவர்களை அடுத்து, ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் அனுபவம் உடையவர்களுக்கு, வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.மொத்த வேலைவாய்ப்பில், 18 சதவீதம், எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் தேவைப்படும் உயர் பதவிகளுக்கானதாக இருக்கும் என, தெரிய வந்துள்ளது.
வாகனத் துறை, 12 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்களை பணிக்கு எடுப்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது.நல்ல ஊதியம், நல்ல பதவி, எதிர்கால வளர்ச்சி ஆகியவை காரணமாகவே, பெரும்பாலானோர் வேறு இடங்களை நோக்கி செல்கின்றனர் என, அதிகமானோர் கருதுகின்றனர்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|