பதிவு செய்த நாள்
02 அக்2019
23:55
மும்பை:வங்கிகளின் மொத்த வாராக் கடன், மார்ச், 2020க்குள், 8 சதவீதமாக குறையக்கூடும் என, ‘கிரிசில்’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
உள்நாட்டு தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:மார்ச், 2020க்குள், வங்கிகளின் மொத்த வாராக் கடன், 8 சதவீதம் வரை குறையக்கூடும். இருப்பினும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தொடர்ந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், வங்கிகளின் மொத்த வாராக் கடன், 11.5 சதவீதமாக உச்சத்தில் இருந்தது.இது, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில், வரும் மார்ச் மாதத்தில், வாராக் கடன், 8 முதல், 8.5 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, வங்கிகள் அமைப்பு, வாராக் கடன்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாராக் கடன்களால், வங்கிகளின் நிகர மதிப்பு, மிகவும் குறைந்து போனது. இருப்பினும், இதன் காரணமாக, இந்த துறையில் உள்ள மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன.வாராக் கடன்கள் குறைவது ஒருபுறம் இருக்க, கடன் வளர்ச்சி, 12 சதவீதத்துக்கும் மேலாக, நிலையானதாக இருக்கும். அரசின் மறுமூலதன நடவடிக்கைகள், பொதுத் துறை வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
தனியார் வங்கிகளை பொறுத்தவரை, அவற்றின் வேகமான நடவடிக்கைகள் மூலம், கடன் வளர்ச்சியை எட்டக்கூடும்.வாராக் கடன்களை பொறுத்தவரை, புதிய வாராக் கடன்கள், 3 முதல், 3.5 சதவீதமாக நடப்பு நிதியாண்டில் குறையும். கடந்த நிதியாண்டில் இது, 3.8 சதவீதமாக இருந்தது. இதுவே, 2017 – -18ம் நிதியாண்டில், உச்சபட்ச அளவான, 7.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி சாரா நிதி நிறுவனங்களை பொறுத்தவரை, அவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டு, 12 சதவீதமாக குறைந்திருக்கும். இதுவே, கடந்த ஆண்டில் இத்துறையின் சொத்து வளர்ச்சி, 15 சதவீதமாக இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் இத்துறையின் சொத்து வளர்ச்சி, ஆண்டுக்கு, 18 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு முதல், ஏழு ஆண்டுகளில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை விரிவு படுத்தியதன் மூலம் வங்கிகளின் வணிகத்தை பாதித்தன.ஆனால், இப்போது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், நிலைமை அப்படியே திரும்பி உள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|