பதிவு செய்த நாள்
15 நவ2019
23:44

புதுடில்லி:நாட்டில், நுகர்வோர் செலவினம் மிகவும் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த, 2017 – 2018ம் ஆண்டில், மக்கள் செய்யும் செலவுகள் குறித்த ஆய்வு ஒன்றை, மத்திய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை, இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வெளியில் கசிந்துள்ளன.
தனிநபர் நுகர்வு
‘இந்தியாவில் வீட்டு நுகர்வோர் செலவு குறித்த முக்கிய சமிக்ஞைகள்’ எனும் தலைப்பில், கணக்கெடுப்பு ஒன்றை மத்திய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்டது.இதில் குறிப்பிடப் பட்டு உள்ளதாவது:கடந்த, 2017- – 18ல், ஒரு தனிநபரின் சராசரி மாதச் செலவு, 1,446 ரூபாய். இதுவே, 2011 – 12ல் 1,501 ரூபாயாக இருந்தது. அதாவது, 2017 – 18ல் மாதச் செலவு, 3.7 சதவீதம் சரிவு கண்டுள்ளது. 2011 – -12ல், தனிநபரின் மாதாந்திர செலவு, இரண்டு ஆண்டுகளில், 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் இந்த கணக்கெடுப்பு, ஜூலை, 2017லிருந்து, ஜூன், 2018 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, இக்காலகட்டத்தில், கிராமப்புறங்களில் நுகர்வோர் செய்யும் செலவு, 8.8 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதேசமயம், நகர்ப்புற செலவினம், ஆறாண்டுகளில், 2 சதவீதம் அளவுக்கே குறைந்துள்ளது.
மேலும், இந்த கணக்கெடுப்பு மூலம், கிராமப்புற மக்கள், பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, பிற அனைத்து பொருட்களை வாங்குவதற்கு குறைவாகவே செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
உணவு செலவு
நாடு முழுக்க இருக்கும் மக்கள், நகர்ப்புறத்தில் இருப்பவர்களையும் சேர்த்து, அவர்கள் உணவுப் பொருட்களுக்கு செலவிடுவது குறைந்துஉள்ளது. குறிப்பாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களான எண்ணெய், உப்பு, சர்க்கரை, மசாலா உள்ளிட்டவற்றுக்கும் குறைவாகவே செலவிட்டுஉள்ளனர்.உணவு அல்லாத பொருட்களுக்கான செலவை பொறுத்தவரை கிராமப் பகுதிகளில், 7.6 சதவீதம் குறைந்துள்ளது.
நகர்ப்புறத்தை பொறுத்தவரை இதுவே, 3.8 சதவீதம் சரிந்துள்ளது.கடந்த, 2017- – 18ல் கிராமப்புற மக்களின் உணவுக்கான மாதாந்திர செலவு, 580 ரூபாயாக குறைந்துள்ளது. இது, 2011 – 12ல், 643 ரூபாயாக இருந்தது.நகர மக்களின் மாதாந்திர உணவு செலவு, 2011 – -12ல், 946 ரூபாயாக இருந்த நிலையில், 2017 – -18ல், 943 ரூபாயாக குறைந்துள்ளது.இவை அனைத்துமே, 2009 – 10ம் ஆண்டின் பணவீக்கத்தின் அடிப்படையில் சரி செய்யப்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் அபிஜித் சென் கூறியுள்ளதாவது: உணவுக் கான செலவு, குறிப்பாக கிராமப்புறங்களில் குறைந்திருப்பது, ஊட்டச் சத்து குறைபாடு அதிகரித்துள்ளதை காட்டுகிறது; வறுமையும் கணிசமாக அதிகரித்திருக்கும். இந்த சரிவு, 2012 – -13லிருந்து துவங்கி இருக்கலாம். அதுவரை கிராமப்புற ஊதியங்கள் உயர்ந்திருந்தன.நுகர்வு வீழ்ச்சி என்பது, விவசாய துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதையும், போதுமான வேலைகள் இல்லை என்பதையும் குறிப்பதாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|