பதிவு செய்த நாள்
23 டிச2019
04:43

2019ம் ஆண்டு நிறைவுபெறப் போகும் தருணத்தில், நம் இந்திய பொருளாதார நிலையை பற்றி, மூன்று முக்கியமான உரைகளை கேட்க முடிந்தது. மூன்றுமே நமக்கு திசைகாட்டும் விதத்தில் அமைந்திருந்தன.
அவை என்னென்ன?இந்திய பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு யார் காரணம், இதை தவிர்த்திருக்க முடியாதா என்ற திசையில், ஒரு விவாதம் நடைபெறுகிறது.மறுபுறம், சரிவின் அளவு என்ன? வீச்சு என்ன? எங்கே பிரச்னை? மீண்டு வருவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்ற ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.இந்நிலையில், பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகராக முன்பு இருந்த, அரவிந்த் சுப்பிரமணியன் இந்தியா வந்திருந்தார். புதுடில்லியில், அவர் ஆற்றிய உரை:இந்திய பொருளாதாரம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. முன்னர், தனியார் நிறுவனங்களும் வங்கிகளும் வாராக் கடன்களில் சிக்கித் தவித்தன. இப்போது, அவற்றோடு சேர்ந்து, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கடன்களும் இந்திய பொருளாதாரத்தை அழுத்துகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கு தீர்வாக அவர், நான்கு ஆலோசனைகளை முன்வைத்தார். முதலாவதாக, ஜி.டி.பி., நுகர்வு, வேலைவாய்ப்பு, நிதிக் கணக்குகள், வங்கிகளில் உள்ள வாராக் கடன்கள் ஆகியவை பற்றி ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும். அதன் வாயிலாக, நம் பொருளாதாரத்தை பற்றிய உண்மை நிலை வெளியே தெரியவரும்.இரண்டாவது, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள கடன்கள், தற்போது எந்த நிலையில் உள்ளன என்பதை பற்றிய மறுமதிப்பீட்டை செய்ய வேண்டும்.மூன்றாவது, திவால் சட்டத்தில் திருத்தம். அச்சட்டத்தினால் உண்மையிலேயே பலன் இருக்கிறது என்ற நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்த வேண்டும்.நான்காவதாக, ரியல் எஸ்டேட் துறைக்கு ஒன்றும், மின் உற்பத்தி துறைக்கு இன்னொன்றும் என்று தனித்தனியே, இரண்டு வாராக்கடன் வங்கிகளை உருவாக்க வேண்டும்.மேலும், பொதுத் துறை வங்கிகளுக்கு அரசாங்கம் மறுமுதலீட்டு தொகை வழங்குவதை, அதன் சீரமைப்போடும், சீர்திருத்தத்தோடும் முடிச்சுப் போட்டு செய்ய வேண்டும் என்கிறார், அரவிந்த் சுப்பிரமணியன்.பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அண்மையில், இந்தியா வந்திருந்தார். இவரது பேச்சும் கவனிக்கப்பட்டது.வங்கி அல்லாத நிதித்துறையில், இன்னமும் பிரச்னை இருப்பதாக இவர் கருதுகிறார். எதிர்பார்க்கப்பட்டதைவிட, அதில் கடன் சுமை அதிகமாக இருக்கிறது. அதேபோல், பொருளாதாரம் மீளக்கூடிய வேகமும் எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் இல்லை. தனியார் துறை முதலீடுகள் பெருகாதது ஒருபக்கம் என்றால், ஊரக பகுதிகளில் வருவாய் பெருக்கமும் ஏற்படவில்லை என்பது கீதாவின் கணிப்பு.மேலும், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்த அளவுக்கு, அது கீழே பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. வங்கிகளிடம் இருக்கும் வாராக் கடன் அளவு மிக அதிகம். அதனால், அவர்கள் ரிஸ்க் எடுத்து, கூடுதலாக கடன் கொடுக்க தயங்குகிறார்கள் என்றார், கீதா.நிர்வாக ரீதியான குழப்பங்களும், பொருளாதார சரிவுக்கு ஒரு முக்கியமான காரணம் என்பது இவரது கருத்து.
‘சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் இந்தியா, அதை இன்னும் தெளிவாகச் செய்ய வேண்டும்.’ என்றும் கேட்டுக் கொண்டார் கீதா.அதாவது, நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் ஆகியவற்றை வெளிப்படையாகவும், வேகமாகவும் செய்ய வேண்டும் என்பதே பன்னாட்டு நிதியத்தின் எதிர்பார்ப்பு.இதே சமயத்தில் தான், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பான, அசோசெம் கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றினார்.இவரும் இந்திய பொருளாதாரத்தை மந்தநிலையில் இருந்து மீட்பது பற்றிய கருத்தையே முன்வைத்தார்.அதாவது, அரசுத் துறை செய்யவிருக்கிற மிகப்பெரும் முதலீடுகள் பற்றி தெரிவித்தவர், கூடவே, தனியார் துறையினரை துணிந்து முதலீடு செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். உண்மையில், அரவிந்த் சுப்பிரமணியனும், கீதா கோபிநாத்தும் முன்வைத்தது, தனியார் துறை முதலீடுகளில் உள்ள சுணக்கத்தைத் தான்.நம் பொருளாதார முன்னேற்றம் குறித்து இருக்கும் சந்தேகத்தினாலேயே, தனியார் துறையினர் புதிய முதலீடுகள் செய்யத் தயங்குகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் மோடியின் பேச்சு அமைந்திருந்தது.அதாவது, கார்ப்பரேட் விரும்பும் மாற்றங்களை விரைந்து செய்து கொடுக்க, இந்த அரசு தயாராக இருக்கிறது என்பது தான் இதன் உட்பொருள். நிர்மலா சீதாராமனும், பெரு நிறுவனங்களுக்குள் பதுங்கியிருக்கும், ‘மிருகபலத்தை’ தட்டி எழுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார்.தனியார் துறையினர் அரசாங்கத்தையும், அரசாங்கம் தனியார் துறையினரையும் சார்ந்திருக்கும்போது தான், தொழில் பெருக்கம் ஏற்படும்; வேலைவாய்ப்புகள் பெருகும். நிதிச் சுழற்சி ஏற்படும். ஏதோ ஒரு கட்டத்தில், இவ்விரு அமைப்புகளுக்கும் இடையே விலகல் ஏற்பட்டு விட்டது. மந்தநிலை ஏற்பட்டவுடனேயே, தனியார் துறையினர் பின்வாங்கத் தொடங்கிவிட்டனர்.இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால் தான் ஓசை எழும் என்பதை இருதரப்பும் தற்போது உணர்ந்துள்ளன.அந்த கைத்தட்டல் ஓசை, பொருளாதார வளர்ச்சி எனும் சங்கீதத்துக்கு விழும், ‘அப்ளாஸாக’ இருக்கட்டும். ஆர்.வெங்கடேஷ்pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|