பதிவு செய்த நாள்
03 ஜன2020
00:04

புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை முதல், புதிய, ‘ஆர்டர்’கள் வரவு அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளன. மேலும், புதிதாக ஆட்களை பணியமர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன என்பதும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், டிசம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கடந்த டிசம்பரில், புதிய ஆர்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட, டிசம்பரில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
கடந்த, 10 ஆண்டுகளில் வலுவான கூட்டு முன்னேற்றத்தை, இவ்விரு மாதங்களும் சேர்ந்து பதிவு செய்துள்ளன.தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும், ஐ.எச்.எஸ்., – பி.எம்.ஐ., குறியீடு, டிசம்பரில், 52.7 புள்ளியாக உயர்ந்து உள்ளது. இது, நவம்பர் மாதத்தில், 51.2 புள்ளியாக இருந்தது.
இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால், அது சரிவை குறிக்கும்.இதன்படி, தயாரிப்பு துறை உற்பத்தி, நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. தேவைகள் அதிகரித்ததை அடுத்து, தொழிற்சாலைகள் பயன் அடைந்துள்ளன.
கடந்த மே மாதத்திலிருந்தே தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரிக்கத் துவங்கின.மேலும், டிசம்பர் மாதத்தில், தொழிற்சாலைக்கு தேவையான உள்ளீட்டு பொருட்களை வாங்குவது மற்றும் புதிய நபர்களை பணிக்கு அமர்த்துவது ஆகியவை அதிகரித்துள்ளன.வெளிநாட்டு தேவைகள் அதிகரித்ததும், நிறுவனங்களின் மொத்த விற்பனைக்கு கைகொடுத்துள்ளது. புதிய ஆர்டர்கள் தொடர்ச்சியாக, 26வது மாதமாக ஓரளவு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பி.எம்.ஐ., குறியீடு தொடர்ச்சியாக, 29வது மாதமாக, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.இந்த ஆய்வின்படி, அடுத்த ஓராண்டில் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வணிக நம்பிக்கையின் அளவு, 34 மாத குறைந்தபட்சமாக பலவீனமடைந்து உள்ளது.
பணவீக்கத்தை பொறுத்தவரை, ஒட்டுமொத்த பணவீக்கம், 13 மாத உயர்வை எட்டியுள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வணிக நம்பிக்கையின் அளவு, எச்சரிக்கை தருவதாக இருக்கிறது. சந்தை நிலைமைகள் குறித்த கவலைகளை இது பிரதிபலிக்கிறது. வேலைவாய்ப்புகள், முதலீடுகள் ஆகியவற்றில், நடப்பு ஆண்டின் ஆரம்ப கட்டத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.பாலியானா டி லிமா தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|