பதிவு செய்த நாள்
08 ஜன2020
23:42

புதுடில்லி:மியூச்சுவல் பண்டில், எஸ்.ஐ.பி., திட்டத்தில், கடந்த டிசம்பர் மாதத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடு குவிந்துள்ளது.
இது குறித்து, மியூச்சுவல் பண்டுகளுக்கான அமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளதாவது: குறிப்பிட்ட கால இடைவெளிகளில், தொடர்ந்து முதலீடு செய்வதற்கு உதவும் வகையிலான, எஸ்.பி.ஐ., திட்டத்தில், டிசம்பர் மாதத்தில், அதிகபட்ச அளவாக, 8,518 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது, அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, 3 சதவீதம் அதிகமாகும்.
கடந்த நவம்பர் மாதத்தில், எஸ்.ஐ.பி., மூலமாக, 8,273 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இது, அதற்கு முந்தைய மாதத்தை விட, 6 சதவீதம் அதிகமாகும்.
புதிய கணக்குகள்
கடந்த ஆண்டு இறுதி மாதமான டிசம்பர் நிலவரப்படி, எஸ்.ஐ.பி., முதலீட்டாளர்கள் கணக்கு எண்ணிக்கை, 2.97 லட்சம் கோடி ஆக உள்ளது.கடந்த டிசம்பரில் மட்டும் மொத்தம், 9.62 லட்சம் புதிய எஸ்.ஐ.பி., முதலீட்டு கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும், இம்மாதத்தில், 5.91 லட்சம் கணக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில், பாதியில் நின்று போன கணக்குகளும் அடக்கம்.
இதையடுத்து, டிசம்பர் மாதத்தில், நிகர கணக்குகள் எண்ணிக்கை, 3.71 லட்சம்.மதிப்பீட்டு மாத இறுதி நிலவரப்படி, எஸ்.ஐ.பி., திட்டத்தில் நிர்வகிக்கப்படும் சொத்து மட்டும், 3.17 லட்சம் கோடி ரூபாய்.இருப்பினும், டிசம்பர் இறுதி நிலவரப்படி, மியூச்சுவல் பண்டு துறையில் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பானது, 2 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
இத்துறையில் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு, 26.54 லட்சம் கோடி ரூபாய்.இதற்கு முக்கிய காரணம், லிக்யுட் பண்டு உள்ளிட்ட கடன் திட்டங்களிலிருந்து பெருமளவு முதலீடு வெளியேறியது தான்.கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், 61 ஆயிரத்து, 810 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வெளியேறி உள்ளன.
அதிகரிக்கும்
இதுவே, இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில் வெளியேறிய தொகை, 54 ஆயிரத்து, 419 கோடி ரூபாய்.கடன் திட்டங்களிலிருந்து மட்டும், கடந்த ஆண்டில் மொத்தம், 78 ஆயிரத்து, 940 கோடி ரூபாய் வெளியேறி உள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில், தங்க ஈ.டி.எப்., திட்டத்தில், 27 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த நவம்பர் மாதத்தில், 7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஸ்மால் மற்றும் மிட் கேப் திட்டங்கள் அதிக லாபம் தரும் நிலையில் இல்லை. லார்ஜ் கேப்பில் மட்டுமே அதிக அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன.இந்த போக்கு, இன்னும் தொடர்ந்து நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.அடுத்த, 10 ஆண்டுகளில், மியூச்சுவல் பண்டு துறையில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 100 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில், முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும், 10 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|