பதிவு செய்த நாள்
14 ஜன2020
23:50

புதுடில்லி:தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை, வரும் பட்ஜெட்டில் குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது, மத்திய வர்த்தக அமைச்சகம்.
நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் துறையில், தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை பட்ஜெட்டில் குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது, மத்திய வர்த்தக அமைச்சகம்.
கடந்த பட்ஜெட்டின் போது, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை, 12.5 சதவீதமாக உயர்த்தியது மத்திய அரசு. இதையடுத்து, இந்த இறக்குமதி வரியை, 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என, நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட காரணத்தால், தங்கம் இறக்குமதியும் குறைந்து வருகிறது.கடந்த நவம்பரில், 152 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில், 39 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது, தங்கம் இறக்குமதி.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், நவம்பர் வரையிலான காலத்தில், 7 சதவீதம் அளவுக்கு, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. இதன் மதிப்பு, இந்திய ரூபாயில், 1.46 லட்சம் கோடி ரூபாய்.
இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில்,இதே காலகட்டத்தில், 1.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.தங்கம் இறக்குமதி குறைந்தது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதற்கு உதவியாக இருந்துள்ளது.
ஏப்ரல் முதல், நவம்பர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 7.59 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 9.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகில், அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாவாகும். இதற்கு, ஆபரணங்கள் துறையின் தேவை முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.இந்தியா ஒவ்வொரு ஆண்டும், 800 முதல், 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|