பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:03

‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ ஆன கோவைக்கு, பஞ்சாலைகள் ஆதாரம் என்றால், இவற்றுக்குப் பஞ்சு தான் ஆதாரம். ஆனால், பஞ்சுக்கே பிரச்னை என்றால், இந்த ஆலைகள் என்ன செய்யும்?
என்ன தான் பிரச்னை!
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவடையும் நிலையில் உள்ளது. இரு நாடுகள் இடையே, முதல் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.சீனாவில், நுால் மற்றும் ஜவுளி ஆலைகள் ஏராளமாக உள்ளன. சீனாவிடம் பஞ்சு கையிருப்பில் இல்லாததால், உலக அளவில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளான, அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் இருந்து, அதிகளவிலான பஞ்சை, இறக்குமதி செய்கிறது. ஏற்கனவே 20 லட்சம் பேல்கள்(ஒரு பேல் என்பது 170 கிலோ) பஞ்சு, இந்தியாவில் இருந்து, ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி, 60 லட்சம் பேல்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.சி.ஐ., எனப்படும் இந்தியப் பருத்திக்கழகம் தான், பஞ்சைப் பெறுவதற்கான, மூலாதாரமாக, நுாற்பாலைகளுக்கு உள்ளன. சந்தையில், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், சி.சி.ஐ., நிர்ணயித்துள்ள விலையோ 46 ஆயிரம் ரூபாய்.
தென்னிந்திய மில்கள் சங்க(சைமா) தலைவர் அஸ்வின் சந்திரன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், ‘‘சி.சி.ஐ.,செயல்படுத்தும் வர்த்தகக் கொள்கையில் தலையிட வேண்டும். சந்தை விலைக்குப் பஞ்சை வழங்க வேண்டும்; இதன் மூலம், விலை உயர்வைத் தடுக்க முடிவதோடு, அனைத்து குறு, சிறு, நடுத்தர நுாற்பாலைகள் பஞ்சைக் கொள்முதல் செய்ய முடியும்’’ என்று முறையிட்டிருக்கிறார்.
சி.சி.ஐ., சொல்வதென்ன!
அதேசமயம், ‘சைமா’வின் கோரிக்கையை, சி.சி.ஐ., ஏற்கவில்லை. சி.சி.ஐ., சேர்மன் அல்லிராணி, ‘‘சி.சி.ஐ., அரசு நிறுவனம். தரமான பஞ்சையே கொள்முதல் செய்கிறது. ஒரு கேண்டி பஞ்சு,40 ஆயிரத்துக்கு கிடைக்கிறது என்றால், அது இரண்டாம்தரப் பஞ்சு. சி.சி.ஐ., பருத்தியைப் பதுக்கவில்லை. சந்தைக்கு வரும் பஞ்சில் தற்போது, 50 சதவீதம் வரை வாங்குகிறோம். சி.சி.ஐ., பஞ்சை நஷ்டத்துக்கு விற்க முடியாது’ என்று கூறுகிறார்.
நுாற்பாலைகள் கவலை
‘‘ஏற்கனவே, 26 முதல் 28 சதவீதம் வரை, குறைந்தபட்ச ஆதார விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. பஞ்சு கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டால், அது நுாற்பாலைகளுக்குக் கட்டுபடியாகாது. ஏற்கனவே, நுாற்பாலைகள் நெருக்கடியில் தவிக்கின்றன. இச்சூழலில், சி.சி.ஐ., செயல்படுத்தும் வர்த்தக நடைமுறை, மோசமான சூழலையே ஏற்படுத்தும். அரசு நிறுவனம், இதுபோன்ற தருணங்களில், நுாற்பாலைகளுக்கு உதவ வேண்டும். ஆனால், அரசு நிறுவனமே கைவிரித்தால் என்ன செய்வது?’’ என்று, நுாற்பாலை உரிமையாளர்கள், கேள்வி எழுப்புகின்றனர்.நுாற்பாலைகளின் பஞ்சு தொடர்பான பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண, மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|