பதிவு செய்த நாள்
26 பிப்2020
07:19
சிங்கப்பூர்: ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கணக்கில் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக, சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கியின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு நடைபெறும் வினியோக தொடர்பு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, அடுத்த கூட்டத்தில், வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும்போது, இப்பிரச்னையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என, டி.பி.எஸ்., வங்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
விலையேற்றம்:
இது குறித்து, ‘இந்தியா: வளர்ச்சி மற்றும் பணவீக்க இலக்கு மதிப்பாய்வு’ எனும், டி.பி.எஸ்., வங்கியின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது: கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து, சீனாவிலிருந்து இந்தியாவுக்கான வினியோகங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்தியாவில் உள்ள உள்நாட்டு தயாரிப்பாளர்கள் பலர், மொத்தமும் சீன இறக்குமதியை நம்பியே இருக்கின்றனர். இதனால், இந்தியாவின் பல்வேறு துறைகளில் பாதிப்புகள் ஏற்படத் துவங்கி இருக்கின்றன.
சீனாவில், நோயின் தாக்குதல், ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான காலாண்டு வரை நீடிக்கும்பட்சத்தில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தாமதம் ஏற்படும். மேலும் தற்காலிக விலையேற்றமும் தவிர்க்க முடியாததாகி விடும். இதன் காரணத்தால், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம், இந்த பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டை விட, வளர்ச்சி குறைவாக இருக்கும். அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலிருந்து, இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.
பரிசீலனை:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2019ம் ஆண்டு ஜூனில், 5 சதவீதமாகவும்; செப்டம்பரில், 4.5 சதவீதமாகவும் குறைந்துள்ளது.இத்தகைய வளர்ச்சி குறைவு எண்கள், நிதிக் கொள்கையை வகுப்பவர்களிடம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்திய சில்லரை விலை பணவீக்க இலக்கை ஆய்வு செய்ததில், ரிசர்வ் வங்கி அறிக்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும், பணவீக்க இலக்கு கட்டமைப்பை மாற்றுவதற்கான வாய்ப்புகளும் குறைவே.
கடந்த கூட்டத்தின்போது, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், சில்லரை விலை பணவீக்க இலக்கு குறித்த வரையறைகளை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்:
இந்திய ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை குழு, கடந்த இரு கூட்டத்தின்போதும், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போது, 5.15 சதவீதமாக ரெப்போ கடனுக்கு வழங்கும் வட்டி விகிதம் உள்ளது. சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்த வரை, கடந்த டிசம்பரில், 7.35 சதவீதமாகவும்; ஜனவரியில், 7.59 சதவீதமாகவும் தொடர்ந்து இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|