பதிவு செய்த நாள்
29 மார்2020
02:08

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தொற்று நோயால், உலக மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், உலக பொருளாதாரமானது, தெளிவாக மந்தநிலைக்கு சென்றுவிட்டது என, பன்னாட்டு நிதியம் அறிவித்துள்ளது.
இது குறித்து, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறியுள்ளதாவது: நாம் இப்போது, 2009ம் ஆண்டை போல அல்லது அதைவிட மோசமான மந்த நிலைக்குள் சென்றுள்ளோம். இருப்பினும், அடுத்த ஆண்டில் பாதிப்பிலிருந்து மீள முடியும். ஆனால், சர்வதேச அளவில், எல்லா இடங்களிலும் வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றால் மட்டுமே, இது சாத்தியமாகும்.
உலகின் பிற முன்னேறிய பொருளாதாரங்களைப் போலவே, அமெரிக்காவும் மந்த நிலையில் உள்ளது. மேலும் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களிலும் ஒரு பெரிய தடை ஏற்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தின் மீதான இந்த திடீர் தாக்கத்தால் நிறுவனங்கள் திவாலாகுவதும், பணி நீக்கத்தில் இறங்குவதும் மிகவும் அபாயமானதாகும். இதன் தாக்கம், மீட்சியைப் பாதிக்கும். சமூகங்களின் பிணைப்பையும் பாதித்துவிடும்.
இது நடப்பதை தவிர்ப்பதற்காக, பல நாடுகள், மருத்துவ நெருக்கடிகளை சமாளிக்கவும், பொருளாதாரத்தில் அதன் பாதிப்பை குறைப்பதற்கும், நிதி சார்ந்த பல்வேறு தொலைநோக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், இதற்கு அந்நாடுகளின் சொந்த இருப்புகள் மற்றும் வளங்கள் போதுமானதாக இருக்காது என்பதை நாங்கள் அறிவோம். தற்போதைய மந்தநிலை மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், இந்த காலகட்டத்தின் அளவை குறைக்க முடியும் எனக் கருதுகிறோம்.
சமீப நாட்களில், பல்வேறு நாடுகள், நிதி சார்ந்த விஷயங்களில், அவர்களால் என்ன முடியுமோ, அந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எங்கள் உறுப்பினர்கள் மூலம் அறிகிறோம். கிட்டத்தட்ட, 80க்கும் மேற்பட்ட குறைவான வருமானம் கொண்ட நாடுகள், அவசரகால நிதியுதவி கேட்டு, எங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளன. அவர்களுடைய இருப்பும் உள்நாட்டு வளமும் போதுமானதாக இல்லை.
அமெரிக்கா, 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவியை அறிவித்திருப்பது மிகவும் தேவையான நடவடிக்கையாகும். பொருளாதார செயல்பாடுகள் திடீரென ஸ்தம்பித்து போகாமல் இருக்க, இந்த நடவடிக்கை மிகவும் அவசியமாகும். நாம் இப்போது மந்த நிலையை குறுகிய காலம் கொண்டதாகவும், தீவிரமாக இல்லாததாகவும் மாற்ற விரும்புகிறோம்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்வைப்போம். இந்த விஷயத்தில், நாங்கள் மிகவும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|