ஜி.எஸ்.டி., ரீபண்டு வழங்கப்பட்டது ஜி.எஸ்.டி., ரீபண்டு வழங்கப்பட்டது ...  பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எகோரேப்’ அறிக்கை பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எகோரேப்’ அறிக்கை ...
கொடுத்து சிவந்த கரங்களே கொஞ்சம் கவனியுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2020
08:49

தான தர்மம் செய்பவர்களாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளியோருக்கு உதவுபவர்களாலும் தான், உலகத்தில் பொருளாதார சமநிலை உண்டாகிறது. அந்த காலத்தில், நம் முன்னோர், அன்ன சத்திரங்கள் கட்டி வைத்து, ஏழைகளுக்கு தர்மம் செய்து மகிழ்ந்தனர். அதே தான, தர்மம் போன்ற நற்காரியங்களை சட்டப்பூர்வமாக்கி செய்தால், தொழில் அந்தஸ்து பெற்று விடுகிறது.


கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் பல, தங்களை அடையாளப்படுத்தி கொள்ளாது. ஆனால், ஊரறிய, உலகறிய, ஓர் நல்ல காரியம் செய்யும்போது, அதை பார்த்து பலரும் அதில் கரம் கோர்க்கலாம். அப்படிப்பட்டவர்கள், அறக்கட்டளை விதிகள் பற்றி அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.


டிரஸ்ட் தொடங்குவது எப்படி?
அறக்கட்டளை எப்படி தொடங்குவது? அதன் மூலம் தொழில் செய்ய முடியுமா? என்பது போன்று பல கேள்விகளை வாசகர்கள் தொடர்ந்து எனக்கு ‘இமெயில்’ செய்து வருகின்றனர். இந்த கட்டுரையில் அதற்கான விடை தந்துள்ளேன்.


தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே, அறக்கட்டளை என்று பெயர். ஆனால், தற்போது டிரஸ்ட் என்பது, அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. இரண்டு வகையான டிரஸ்ட்கள் உள்ளன. ஒன்று, தனியார் டிரஸ்ட், மற்றொன்று பொது டிரஸ்ட். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில், ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு, தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக, இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், தனியார் டிரஸ்ட்கள் அதிகபட்ச வருமான வரியை செலுத்த வேண்டும்.


பொது டிரஸ்ட்

பொதுமக்கள் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது, பொது டிரஸ்ட். உதாரணமாக, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாக கொண்டு, பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பயன்பாட்டில் பொது டிரஸ்ட்கள் தான் அதிகம் இருக்கின்றன. அதனால், அதன் விபரங்களை பார்ப்போம்.

டிரஸ்ட் பதிவு அவசியம்

குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களுடன் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தலாம். ஒரு டிரஸ்ட் அமைப்புக்கு, அதில் நிர்வாக அறங்காவலர் ஒருவர் இருக்க வேண்டும். மற்ற உறுப்பினர்கள் அறங்காவலர்களாக இருப்பார்கள். டிரஸ்ட்டின் சொத்தை பராமரிப்பதும், வருமானத்தை அதன் நோக்கத்துக்கு செலவு செய்வதும், டிரஸ்டியின் பொறுப்புக்கள்.டிரஸ்ட் அமைப்பை உருவாக்க, அது தொடர்பான ஆவணம் (trust deed) ஒன்றைத் தயாரிக்க வேண்டும். டிரஸ்ட் நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சொத்து மதிப்பு, சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.ஆவணத்தில், இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பின், டிரஸ்ட் செயல்படும் அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்ய வேண்டும்.


வருமான வரி விலக்கு
டிரஸ்ட் பதிவு செய்த பின் ‘பான்’ அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரம் மற்றும் ‘பான்’ அட்டையுடன் வங்கிக் கணக்கை தொடங்க முடியும். டிரஸ்டிகள், ரூ.2,000க்கு மேல் நன்கொடை பெற வேண்டுமானால், வங்கி கணக்கின் மூலம் தான் பெற வேண்டும். அதற்கு பின், வருமான வரி கமிஷனரிடமிருந்து, ‘12ஏ’ பதிவு சான்றிதழ் செய்யும் பட்சத்தில், டிரஸ்ட்டின் வருமானத்துக்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ‘80ஜி’ என்பது, டிரஸ்ட்டுக்கு நன்கொடை கொடுப்பவர்களுக்கு, வருமான வரி விலக்கு கிடைக்க வழி செய்யும் சான்றிதழ். அதையும் வருமானவரி கமிஷனர் தான் அளிக்க வேண்டும்.


தமிழகத்தில் உள்ள அனைத்து டிரஸ்ட்களும், தற்போது சென்னையிலுள்ள, டிரஸ்ட் வருமான வரி கமிஷனரிடம் தான் அணுக வேண்டும். பதிவு செய்யப்படும் அனைத்து டிரஸ்ட்களும், ஒவ்வொரு ஆண்டும் தங்களது கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்தி, வருமான வரித்தாக்கல் செய்வது அவசியம். வெளிநாட்டு நிதியை நன்கொடையாக நேரடியாக பெற வேண்டுமானால், உள்நாட்டு அமைச்சகம் மூலம் FCRA (Foreign contribution regulation Act) பதிவு செய்யப்பட்ட பின்தான் பெற முடியும்.


தமிழகத்தின் பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள், டிரஸ்ட் அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன. அதற்கு, கல்வி இலாகா, லாப நோக்கமில்லாத டிரஸ்ட், சொசைட்டி அல்லது பிரிவு 8ல் இயங்கும் கம்பெனிகளாக தான் இருக்க வேண்டும் என்ற அரசின் விதிமுறைதான் காரணம்.

நடைமுறைச் சிக்கல்


ஏற்கனவே உள்ள வருமான வரி சட்டத்தில், ஒரு டிரஸ்ட்டின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், எந்த நேரத்திலும் வருமானவரி கமிஷனரால் டிரஸ்ட் பதிவை நீக்கம் செய்ய முடியும் என்ற அதிகாரம் உள்ளது. ஒரு சில டிரஸ்ட்கள், முறைகேடாக பயன்படுத்துவதால், தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, அனைத்து டிரஸ்ட்களும் மறு பதிவு செய்ய வேண்டும். இது, நடைமுறையில் ஏராளமான சிரமத்தை ஏற்படுத்தும்.தவிர, டிரஸ்ட் அமைப்பில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க தவறி விட்டாலோ, வருமான வரி கமிஷனர் பதிவை புதுப்பிக்காமல் நிராகரித்து விட்டாலோ, கல்வி இலாகாவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில் இத்தகைய டிரஸ்டில் இயங்கும் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்.

பட்ஜெட்டில் மாற்றம்

கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், டிரஸ்ட் விதிகளில் மாற்றங்களை நிதியமைச்சர் அறிவித்தார். அதன்படி, டிரஸ்ட் அமைப்புகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது செயல்பாடுகள் குறித்த விபரங்களுடன், வருமான வரி துறையிடம் டிரஸ்ட் பதிவை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.பதிவு தேதி முடிவதற்கு ஆறு மாதம் முன், விண்ணப்பித்திருக்க வேண்டும்.வருமான வரி கமிஷனர், டிரஸ்ட்டின் செயல்பாடுகள் நேர்மையாக உள்ளனவா, வரித்தாக்கல் சரியாக செய்துள்ளனரா? என்று சரிபார்ப்பார். இவை திருப்திகரமாக இருந்தால், மீண்டும் பதிவை புதுப்பிப்பார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, டிரஸ்ட் சட்டத்தையும், விதிமுறைகளையும் பிசகாது நடைமுறைப்படுத்துதல். இல்லாவிட்டால், பதிவு ரத்து செய்யப்பட்டு, அனைத்து வருமானத்துக்கும் வரியும், அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.கோவிட் 19க்கு பின், சமீபத்தில், டிரஸ்ட் பதிவு தொடர்பான தேதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, மறுபதிவுக்கான தேதி, 31 டிச., 2020 ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)