பதிவு செய்த நாள்
04 ஜூன்2020
01:46

புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மே மாதத்தில், 12.6 புள்ளிகளாக உள்ளது. இது சரிவு தான் என்றாலும்; ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது சிறிது வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வணிக நடவடிக்கைகள் குறைந்து, சாதகமற்ற பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் நுகர்வோர் தேவையும் குறைந்ததை அடுத்து, சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சி, மே மாதத்தில், 12.6 புள்ளிகளாக சரிந்துள்ளது.
ஆய்வு
தரவுகள் திரட்ட ஆரம்பித்த காலத்திலிருந்து இல்லாத அளவுக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில், சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சி, 5.4 புள்ளிகளாக சரிந்திருந்தது.அதாவது, கடந்த, 14 ஆண்டுகளில் காணப்படாத சரிவாக இருந்தது.
இந்நிலையில், கடந்த மே மாதத்தில், சற்று அதிகரித்து, 12.6 புள்ளிகளாக உள்ளது.‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா’ தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.
இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால், சரிவைக் குறிக்கும். தயாரிப்புத் துறை மற்றும் சேவைகள் துறை இரண்டும் சேர்ந்த உற்பத்தி வளர்ச்சி, மே மாதத்தில், 14.8 புள்ளிகளாக சரிந்து உள்ளது. இதுவே, கடந்த ஏப்ரல் மாதத்தில், 7.2 புள்ளிகளாக கடுமையான சரிவைக் கண்டிருந்தது.
மந்த நிலை
இது குறித்து, ஐ.எச்.எஸ்., மார்க்கிட் மேலும் தெரிவித்துள்ளதாவது:வங்கிகளில் நெருக்கடி, நுகர்வோர் தேவை சரிவு, மற்றும் தனியார் முதலீடுகள் குறைவு ஆகிய காரணங்களால், வைரஸ் தாக்கத்துக்கு முன்னரே, இந்தியா நீடித்த பொருளாதார மந்த நிலையின் மத்தியில் இருந்தது. இதையடுத்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த நிதியாண்டில், 4.2 சதவீதமாக குறைந்தது. இது, 11 ஆண்டுகளில் மிகக் குறைவான வளர்ச்சியாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை
இதற்கிடையே, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ், எஸ்., அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ், மற்றும் பிட்ச் ரேட்டிங்ஸ் மதிப்பீடுகள், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரியும் என்றும், நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் தெரிவித்து உள்ளன. மேலும் நாட்டின் தர மதிப்பீட்டையும் குறைத்து அறிவித்தது, மூடிஸ் நிறுவனம்.பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரம், அரசின் தீர்க்கமான கொள்கைகளால் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|