வளர்ச்சி சகஜ நிலைக்கு திரும்பும்வளர்ச்சி சகஜ நிலைக்கு திரும்பும் ... உறுதி செய்வோம்- உள்ளூர் கரங்களை! உறுதி செய்வோம்- உள்ளூர் கரங்களை! ...
தாயகம் திரும்பியவர்களுக்கு உதவக் காத்திருக்கும் ‘ஸ்வதேஸ்’ வலைதளம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2020
13:34

நம் ஒவ்வொருவர் வீட்டிலும், யாரேனும் ஒரு நபர் வெளிநாட்டில் இருப்பார். ஒரு காலத்தில் பெருமையாக கருதப்பட்ட டாலரையும், பவுண்டையும், ரியாலையும், தினாரையும் ஈட்டிக் கொடுத்தவர்கள், இப்போது தாயகம் திரும்பிய வண்ணம் இருக்கின்றனர். கொரோனா அவர்களைத் துரத்தியடிக்கிறது.


இவர்களுக்கு இங்கே என்ன வரவேற்பு கிடைக்கப் போகிறது? எப்படிப்பட்ட வசதி, வாய்ப்புகள் கிடைக்கப் போகின்றன? வேலைவாய்ப்புக்காக பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களில், முதலிடத்தில் இருப்பவர்கள், இந்தியர்கள் தான். உலக அளவில் மொத்தம், 27.2 கோடி பேர், வேலை தேடி பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்திருக்க, அதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும், இரண்டு கோடி.நமக்குப் பிறகு தான், மெக்சிகோ, சீனா, ரஷ்ய கூட்டமைப்பு, சிரியா ஆகிய நாடுகள் வருகின்றன. இதிலும் இரண்டு பிரிவினர் உண்டு; உடலுழைப்பு சார்ந்தோர், மூளை உழைப்பு சார்ந்தோர்.கொரோனாவுக்கு இந்த வேறுபாடு தெரியுமா என்ன! அனைவரையும் பந்தாடுகிறது. விளைவு, பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகம் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


அச்சம்
கொரோனா தொற்று துவங்கியவுடன், பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்களின் மூலம், தாயகம் திரும்ப விரும்புவோர் பதிவு செய்து கொள்ளத் துவங்கினர். இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கேன்றே, ‘வந்தே பாரத்’ என்ற திட்டம் துவங்கப்பட்டது. மே, 7ம் தேதி முதல் துவங்கப்பட்ட திட்டத்தினால், இதுவரை, 1.70 லட்சம் பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இப்படி நாடு திரும்புவதற்காக, கிட்டத்தட்ட, 3.48 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகிஉள்ளது. அதாவது, கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், முதியோர், அவசர வேலையாக இந்தியா வர விரும்புவோர் மட்டுமே, முதலில் இந்தியா வந்து இறங்கிஉள்ளனர். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதத்துக்குள், பெரும் எண்ணிக்கையில் வந்து இறங்கப் போகின்றனர்.


வெளிநாடுகளில் வாழும், இரண்டு கோடி இந்தியர்களில், ஒரு கோடி பேர், ஆறு வளைகுடா நாடுகளான, கத்தார், பஹ்ரைன், ஒமான், அமீரகம், குவைத், சவுதி அரேபியாவில் தான் வசிக்கின்றனர்.இதில், தமிழகத்தைச் சேர்ந்த, 25 லட்சம் பேரும்; கேரளத்தைச் சேர்ந்த, 22 லட்சம் பேரும் அடங்குவர். இவர்களில், பத்து சதவீதம் பேராவது, இந்தியா திரும்பி விடுவர். அதாவது, 2.5 லட்சம் தமிழர்கள் தமிழகம் திரும்பிவிடக் கூடும்.அங்கே வேலையிழப்புகள், சம்பள வெட்டுகள், சலுகைகள் குறைப்பு என்று பலரும் அல்லல்படுகின்றனர். பலர், இனிமேல் தங்கள் குடும்பத்துடன் வளைகுடா நாடுகளில் வசிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.



கொரோனா பாதிப்பும் அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சொந்த ஊருக்குப் போய்விடுவோம் என்ற முடிவுக்கே பலரும் வந்து சேர்ந்துஉள்ளனர். இன்னொரு தரப்பினரோ, தம் மனைவியையும், குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அனுப்பிவிடும் முடிவில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மத்தியமர்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்கள் நிலையோ படுமோசம். அவர்கள் அங்கே ஒண்டிக்கட்டைகள். வேலைவாய்ப்புகள் இல்லையெனில், அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஊர்பார்க்க திரும்ப வேண்டிய அவல நிலை.

கேள்விகள் அதிகம்
பிரச்னை இங்கே தான் துவங்குகிறது. எப்படி இவர்களை எல்லாம் நம் நாடு அரவணைக்கப் போகிறது?மத்திய அரசு இதற்காக, ‘ஸ்வதேஸ்’ திறன் அட்டைகள் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தாயகம் திரும்புவோர், இந்தத் திட்டத்தின் வலைத்தளத்தில், தங்கள் திறன்களைக் குறிப்பிட்டு, பதிவு செய்துகொள்ள வேண்டும். மே, 30ம் தேதி அறிமுகமான இந்த வலைத்தளத்தில், அடுத்த ஒரு வாரத்தில், 7 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக, கேரளம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், கர்நாடகம், தெலுங்கானா வைச் சேர்ந்தவர்களே இதில் அதிகம்.

பணியாளர்களின் திறன்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு இந்தியாவில் உள்ள மாநில அரசுகள், தொழில் துறையினர், தொழிலதிபர்கள் ஆகியோரோடு கலந்து பேசி, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம். மிக அதிக அளவில் தாயகம் திரும்புவோரைக் கொண்ட கேரளம் மற்றும் தமிழகம், இந்த விஷயத்தில் என்ன செய்வது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றன. பதில்களைவிடக் கேள்வி கள் தான் தலைதுாக்கி நிற்கின்றன.கொரோனா காலத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பது தான் முக்கிய கேள்வி.


திரும்பி வரும் உடலுழைப்பு சார்ந்தோர், சர்வதேச நிறுவனங்களில் வேலைபார்த்தவர்கள். அதனால், அவர்களுடைய திறன்கள் மேம்பட்டதாக இருக்கும். அவர்களுக்கு இந்தியாவில் அதேபோன்ற உயர்தரமிக்க தொழிலகங்களில் வேலை கிடைக்குமா என்பது முதற்கேள்வி.


கல்விச் செலவு
மேலும், அத்தகைய வளர்ந்த தொழிலகங்களில் ஏற்கனவே தகுதியானவர்கள் இருந்தால், வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புண்டா? அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளமோ, இதர சலுகைகளோ, வசதிகளோ கிடைக்குமா? தொழில்துறை மந்தமாக உள்ள சூழலில், புதிய ஆளெடுப்புகள் நடைபெற வாய்ப்புண்டா? இதனால், வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை அதிகமாகிவிடுமோ?இன்னொரு பெரிய பிரச்னை, இத்தகைய உடலுழைப்பாளர்கள் பெற்றுள்ள கடன். வளைகுடா நாடுகளுக்குப் போவதற்கே பலர் கடன் பெற்றுள்ளனர். அதைச் சிறுகச் சிறுக அடைத்துக் கொண்டிருப்பர். அதேபோல், அவர்களுடைய குடும்பச் செலவு கள், பிள்ளைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு ஆகியவற்றை, வேலையற்ற இந்தக் காலக்கட்டத்தில் எப்படிச் சமாளிக்கப் போகின்றனர்? ஓரளவுக்கு நிதி வசதி உள்ளவர்கள், வேலையிழந்து திரும்பும் போது, அவர்கள் நிலைமை வேறு விதமானது. அதாவது, இவர்களிடம் கொஞ்சம் சேமிப்பு இருக்கும். ஊருக்குத் திரும்புபவர்கள் வீடு, அடுக்ககம் ஆகியவற்றை வாங்குவர். சுயமாகத் தொழிலோ, வேறு வணிகமோ செய்து கொள்ளும் அளவுக்கு வசதி இருக்கும். அவர்களை எப்படி தொழில்முனைவோராக மாற்றுவது?


அதற்குத் தேவைப்படும் தொழில் ஆலோசனைகள், வழிகாட்டு நெறிகள், அரசாங்க அனுமதிகள், வங்கி கடன்கள், ஊக்கப்படுத்தும் திட்டங்கள் ஆகியவை என்னென்ன?பொதுவாக இப்படி வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியவர்கள், அடுத்த சில ஆண்டுகளிலேயே திரும்பிப் போய்விட முயற்சி செய்வர். வளைகுடா போர் முடிவுற்ற பின், பல தென்னிந்தியர்கள் மீண்டும் சென்றனர். சவுதி அரேபியாவில், வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் சவுதியர்களுக்கே வழங்கவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போதும், வேலையிழந்தவர்கள் மீண்டும் சில ஆண்டுகளில் அங்கேயே போய்ச் சேர்ந்தனர். இம்முறையும் அதேபோல் நடக்கலாம். ஆனால், அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை யூகிக்க முடியாது.


முந்தைய சூழ்நிலைகளைப் போன்றதல்ல கொரோனா பாதிப்பு. மீண்டும், வளைகுடா நாடுகளில் பொருளாதாரம் மீளும் போது தான், வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அங்கே போகமுடியும். அதுவரை அவர்கள் இங்கே என்ன செய்வர்? பலரும் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள, புதிய பயிற்சி களில் ஈடுபடக் கூடும். அடுத்த ஓராண்டுக்குள் இவர்கள், வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது, ஜப்பான், இந்தோனேசியா, கென்யா ஆகிய நாடுகளுக்குக் கூட புலம் பெயரக் கூடும்.


பல்வேறு முயற்சிஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்களை எப்படி இந்தியா பார்த்துக் கொள்ளப் போகிறது?இன்னொரு சிக்கலையும் இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய அந்நிய செலவாவணியின் அளவு, கிட்டத்தட்ட, 23 சதவீதம் சரிந்து விட்டதாகத் தெரிவித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் வி. முரளிதரன். கடந்த, 2019ல், 6.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்த அந்நிய செலாவணி வரவு, தற்போது 4.83 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.நாட்டுக்கே இவ்வளவு பெரிய இழப்பு என்றால், ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒன்று புரியும். படித்த மத்தியமர்களுக்கும், உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் இந்தியாவிலேயே போதுமான வாய்ப்புகளும் சம்பளமும் கிடைத்திருக்குமேயானால், வெளிநாடே போயிருக்க மாட்டார்கள். இவர்களை ‘பொருளாதார புலம்பெயர்ந்தோர்’ என்றே அழைக்கிறோம். இன்றைய கொரோனா காலத்தில், அவர்கள் விருப்பப்பட்டு அல்ல, வேறு வழியில்லாமல், இந்தியாவுக்குள் மீண்டும் பறந்து வந்திருக்கின்றனர். இப்போது இவர்கள் பிறந்த நாடே, இவர்களுக்கு வேடந்தாங்கலாக மாறியிருக்கிறது. மீண்டும், பறந்து போகத் தேவையான சூழ்நிலையும் வாய்ப்பும் அமையும்வரை, அவர்கள் இங்கே கண்ணியத்துடனும், ஆரோக்கியத்துடனும் மனத் தெம்புடனும் ஜீவித்திருக்க வேண்டும். வேடந்தாங்கல், சகாரா பாலைவனமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்வது மத்திய, மாநில அரசாங்கங்கள் எடுக்கும் பல்வேறு முயற்சிகளில் தான் அடங்கியிருக்கிறது!தாயகம் திரும்பியவர்களுக்குஉதவக் காத்திருக்கும்‘ஸ்வதேஸ்’ வலைதளம்!
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)