வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு ... திடக் கழிவு மேலாண்மை ‘சிப்காட்’டில் துவக்கம் திடக் கழிவு மேலாண்மை ‘சிப்காட்’டில் துவக்கம் ...
தேவையற்றதை நீக்கினால் தேவையானது வரும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2020
11:01

செல்வ செழிப்பு என்பது, உள் மன அமைப்பை பொறுத்தது. நம் நம்பிக்கைகளும், குறிக்கோள்களும், வாழ்வியல் வழிமுறைகளும் தான், செல்வத்தை அடைய வைக்கிறது. இவை, பல சூட்சும அடிப்படையில் செயல்படுபவை. பலவற்றுக்கு நேரடி காரண, காரணிகள் கண்டுணர்வது கடினம். ஆனால், அறிவியல்பூர்வமாக உடனடியாக நிரூபிக்க முடியாத விஷயங்களை, பரீட்சித்து கூட பார்க்காமல் புறந்தள்ளுவதால் இழப்பு நமக்குத் தான்.

இருபது ஆண்டுகளுக்கு முன், வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஒரு கருத்தரங்கிற்கு செல்ல நேர்ந்தது. அந்த வல்லுனர், இந்திய, சீன வழிமுறைகளை விளக்கியபோது, 'கல்சர் ரிமூவல்' என்று ஒரு வழியை போதித்தார். கேட்கும் போது மிகச் சாதாரண விஷயமாக தான் பட்டது. இதற்கு, 'தேவையில்லாததை நீக்குதல்' என்று பொருள் கொள்ளலாம்.

எது தேவை, எது தேவையில்லை என்று எப்படி கண்டுகொள்வது? இதை படிக்கையில், பலருக்கு நடிகர் வடிவேலின் பிரபல வசனம் நினைவுக்கு வரலாம்: 'நீ புடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்!' இதை காமெடியாக மட்டும் பார்க்காமல், நம் வாழ்விற்கு பொருத்திப் பாருங்கள். நம்மை பார்த்தே நாம் சிரிக்க வேண்டிய நிலை வரும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். தேவையில்லாத பொருட்களை நீக்கினால் என்ன ஆகும்? பண வரவு பெருகும் என்று சொல்கிறது வாஸ்து சாஸ்திரம். வீட்டில் வேண்டாத பொருட்கள் எப்படி நல்ல சக்திக்கு முடையாக இருக்கிறது என்று விளக்கினார் அந்த ஆசிரியர். உபயோகப்படுத்தாத பொருட்களில், தரித்திரம் குடி கொண்டுள்ளதாகச் சொன்னார். அவற்றை நீக்கும் போது, இறை ஒளி வீட்டினுள் குடி கொள்ளும் என்று பல ஆதாரங்களுடன் விளக்கினார்.

தேவைப்படுவோருக்கு அளியுங்கள்

பணமும் பொருளும் சுழன்று கொண்டே இருக்க வேண்டும். அது, நம் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு, அடுத்தவரிடம் செல்ல வேண்டும். பயன்படுத்தாத பணமும், பொருளும் தேக்க நிலையை உருவாக்கும்.நம் வீடுகளில் பயன்படுத்தாத பணம் இருக்கிறதோ, இல்லையோ, பயன்படுத்தாத பொருட்கள் ஏராளம் இருக்கும். வீடு சிறுத்தாலும் பொருள் பெருத்து பிதுங்கி வழியும் நம்மில் பலரது வீடுகளில்.தேவை முடிந்து விட்டது என்று அறிந்து, அந்த பொருளை தானமாகவோ, விலைக்கோ அல்லது குப்பைக்கோ கொடுக்க வராத மனத்தை, என்னவென்று விவரிக்க முடியும்!

பற்றாக்குறை கொண்ட மனதிற்கு பொருட்களை நிறைத்து வைத்து பார்க்கப் பிடிக்கும். எதையும் பிரிய மனம் வராது. என்றாவது தேவைப்படும் என்று நினைத்து வைத்திருப்போம். அது, கடைசியில் யாருக்கும் பயன்படாமல் அழிந்து போகும். அப்படி என்றால், நம் வீடு என்பது பொருட்கள் வீணாகக் காத்திருக்கும் கிடங்கா? அப்படி வேண்டாத பொருட்கள் நிறைந்திருக்கும் வீட்டில் ஐஸ்வர்யம் வருமா?பத்து ஆண்டுகளுக்கு முன் வாங்கிய சட்டை முதல், பாரம்பரிய பொருள் வரை ஒவ்வொன்றையும் பிரியாதிருக்க, ஒவ்வொரு காரணம் வைத்திருப்போம்.

தினம் பயன்படுத்தும் பொருள் என்றால், ஓர் ஆண்டாக அதை பயன்படுத்தவில்லை என்றால், வீண் என்று முடிவு செய்யுங்கள். இப்போது பயன்படுத்தாதவற்றை எப்போதும் பயன்படுத்தப் போவதில்லை. அது தான் நிஜம்.நல்ல நிலையில் உள்ளதை தேவைப்படுவோருக்கு அளியுங்கள். யாருக்கும் உதவாததை உடனே அகற்றுங்கள். நீங்கள் உருவாக்கும் இந்த புது வெளி தான், செல்வம் வரும் புது வழி!

குப்பைக்கூளம் நீக்கினால் இடம் சுத்தமாகும், பணம் வருமா என்ன? நிச்சயம் வரும்! அலுவலகங்கள் முதல், கோவில்கள் வரை பண வரவிற்கு முக்கிய காரணம், அங்குள்ள நல்ல சக்தி. வீட்டில் தரை சுத்தம் செய்யும் அளவிற்கு, நாம் பணம் வைக்கும் பீரோக்களை சுத்தம் செய்வதில்லை. பலர், பணம் வைக்கும் பர்சை, குப்பை தொட்டி போல வைத்திருப்பர். சிலர், பணத்தை கண்ட இடங்களில் போட்டு வைத்திருப்பர். மதியாதார் வாசலை மிதிக்க மாட்டாள் மகாலட்சுமி.

இதை அறிந்த பின், ஒவ்வொரு முறை வீட்டில் தேவையில்லாததை நீக்கும் போதெல்லாம், எதிர்பாராத இடத்திலிருந்து எனக்கு பண வரவு கிட்டும். இதை வெளியில் சொன்னால் சிரிப்பர் என்று நினைத்துக் கொள்வேன். வாஸ்து சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். மார்க் ஆலென் என்ற மேற்கத்திய ஆசிரியர், மில்லியனர்கள் ஆவது பற்றி புத்தகங்கள் எழுதி, கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். அவரும் இதையே சொல்கிறார்.

பரந்த குணம் வேண்டும்

பணம் இருக்கும் இடம் சுத்தமாக, சீராக இருக்கட்டும். அங்கு இறைத்தன்மை இருக்கட்டும். வேண்டாத பொருளை தினசரி நீக்குங்கள். பயன்பாடு முடிந்ததும், பொருட்களை தானமாக தேவைப்படுவோருக்கு அளியுங்கள். வீட்டில் நிறைய திறந்த வெளி இருக்கட்டும். வெளிச்சத்துடன், காற்றுடன், செல்வமும் தேடி வரும் என்கிறார். மார்க் ஆலென் புத்தகம் படித்த பலருடன் பேசினேன். அனுபவரீதியாக அனைவரும் இதை ஒப்புக் கொள்கின்றனர். வீடோ, அலுவலகமோ, கிடங்கோ, வாகனமோ, உங்களுக்கு பணவரவு வேண்டும் என்றால், தேவையில்லாதவற்றை நீக்கி, இருப்பதை சீராக வைத்துக் கொள்ளுங்கள்; கண்டிப்பாக பணவரவு கிட்டும்.

நான் முதன்முறை இதை யுக்தியாக பரிசோதித்த போது, காணாமல் போனதாக நினைத்த பல ஆவணங்களும், புகைப்படங்களும் கிடைத்தன. ஒரு சிறு தொகை பிரிக்கப்படாத கவரில் தட்டுப்பட்டது. வேண்டிய சில, 'விசிட்டிங் கார்டு'கள் கிடைத்தன. அடுத்த சில நாட்களில், கொடுத்த கடன் ஒன்று, பல ஆண்டுகள் கழித்து எதிர்பாராமல் திரும்ப வந்தது. 'வீட்டை சுத்தம் செய்தால் எப்படியும் தொலைந்த பொருட்கள் கிடைக்கும். இதை வைத்து பண வரவு என்று எப்படி சொல்வது?' என்று கேட்டார் ஒரு நண்பர். 'இதை, நாங்கள் தொழிற்சாலையில் லீன், 5S என்று தினம் செய்கிறோமே; புதிதாக ஒன்றும் இல்லையே...' என்றார், இன்னொருவர். 'என்ன சார், இது எப்படி வேலை செய்கிறது என்று மட்டும் சொல்லுங்கள்?' என்றார், என்னிடம் ஆலோசனைக்கு வந்தவர்.

ஒரு பொருளின் தேவை முடிந்ததும், அதை நன்றியுடன் அடுத்தவரிடம் கொடுக்க, பரந்த குணம் வேண்டும். இது போனால் அடுத்தது வரும் என்ற நம்பிக்கை வேண்டும். குப்பைக் கூளமற்ற இடம், சிதறிய எண்ணங்கள் இல்லாத மனதின் பிரதிபலிப்பு. அந்த மன ஒழுங்கு, நிச்சயம் பணத்தை கவர்ந்து உள்ளே வரச் செய்யும்!அடி மண்டி கழுவாத காபி டம்ளரில், யார் புதிதாய் போட்ட காபியை ஊற்றுவர்? கோப்பையை கழுவி சுத்தமாக வைத்துக் காத்திருப்பது, நம் வேலை. உங்கள் கோப்பையை ஆண்டவன் நிரப்புவான்!

-பணம் பெருகும்

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
கட்டுரையாளர்,
உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்
gemba.karthikeyan@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)