பதிவு செய்த நாள்
04 ஜூலை2020
22:35

புதுடில்லி:‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளை, தொழில் துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் அதிகாரிகள், 8ம் தேதியன்று மீண்டும் சந்திக்க இருக்கின்றனர்.
‘ஆன்லைன்’
‘ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அவை விற்கும் பொருட்கள், எந்த நாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்ற தகவலை குறிப்பிட வேண்டும்’ என, உள்நாட்டு வர்த்தகர் அமைப்புகள் கோரி வருகின்றன.இதையடுத்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளை, ’தொழில் துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை’யின் அதிகாரிகள், கடந்த ஜூன், 24ம் தேதியன்று, காணொலி மூலம் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், பெப்பர்பிரை, ஈ – பே’ உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இப்போது அடுத்த கட்டமாக, 8ம் தேதிஅன்று மீண்டும் இது சம்பந்தமாக கலந்து பேச இருக்கின்றனர்.அகில இந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., ‘ஒவ்வொரு மின்னணு வர்த்தக நிறுவனமும், அவை விற்கும் பொருட்கள், எந்த நாட்டின் தயாரிப்பு என்பது குறித்த தகவலை கண்டிப்பாக வழங்க வேண்டும். ‘அப்படிச் செய்தால், நுகர்வோர் முடிவெடுக்க வசதியாக இருக்கும்’ என, கோரிக்கை வைத்து வருகிறது.
கால அவகாசம்
இது குறித்து, அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக மின்னணு வர்த்தக நிறுவனங்கள் விற்கும் பொருட்கள் பலவற்றில், அவை எந்த நாட்டு தயாரிப்பு என்பதை குறிப்பிடுவதில்லை. மேலும் பெரும்பாலான மின்னணு வர்த்தக நிறுவனங்கள், சீனப் பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அது குறித்து நுகர்வோருக்கு எதுவும் தெரிவதில்லை.
அண்மையில், அரசு கொள்முதல் இணையதளம் மூலம், பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், பொருட்கள் எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன், 24ம் தேதியன்று, காணொலி மூலமாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பல நிறுவனங்கள், இத்தகைய தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும்; ஆனால், கால அவகாசம் தேவை எனவும் கேட்டுக் கொண்டன.தற்போது அடுத்த கட்டமாக, 8ம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|