பெண்கள் மட்டும் தான் பாத்திரம் கழுவ வேண்டுமா ?பெண்கள் மட்டும் தான் பாத்திரம் கழுவ வேண்டுமா ? ...  தங்கத்தில் முதலீடு செய்ய  தங்கத்தில் முதலீடு செய்ய ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மாயமானைத் துரத்தி ஓடும் மத்தியமர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2020
01:43

கொரோனா காலத்தில், பெரும்பாலான மத்தியமர்கள், பங்குச் சந்தையை நாடி ஓடும் அவசரம் தென்படுகிறது. அவர்களைத் துரத்துவது எது; அதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?
சில வாரங்களுக்கு முன், ஒரு வாசகர் அழைத்தார்.‘தினமலர்’ முதலீட்டுக் கட்டுரையைப் பற்றி பேசியவர், ‘ப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸில் டிரேடிங் செய்யலாமா’ என்று ஆலோசனை கேட்டார். லேசாகத் துாக்கிவாரிப் போட்டது.‘உங்களுக்குப் பங்குச் சந்தையின் அடிப்படைகள் தெரியுமா; ஏற்கனவே முதலீடு செய்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். இல்லை என்று சொன்னவர், ‘பல நண்பர்கள் இது போன்ற விஷயங்களில் முதலீடு செய்கின்றனர்; அதனால் செய்யலாமா என்று யோசிக்கிறேன்’ என்றார்.

காலில் விழாத குறையாக அவருக்கு விளக்கிச் சொன்னேன், ‘ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்’ கொரோனா காலக்கட்டத்தில் புதிய அபாயங்கள் உருவாகியுள்ளன. வழக்கமான முதலீட்டு வாய்ப்புகள் போதிய வருவாயை ஈட்டித் தரவில்லை என்றவுடன், இரண்டு விஷயங்களில் பலரும் ஈடுபட முயற்சி செய்கின்றனர். ஒன்று, பங்குச் சந்தை முதலீடு; இரண்டு, தங்கத்தில் முதலீடு.

கணக்கு

குறிப்பாக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல், ஜூன் வரையான காலகட்டத்தில், 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள், பல பங்குத் தரகு நிறுவனங்களில் கணக்குகள் துவங்கியுள்ளனர். இத்தகைய முதன்முறை முதலீட்டாளர்களை வளைத்துப் போடுவதற்கென்றே, பல நிறுவனங்களும் ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகின்றன.பெரும்பாலான நிறுவனங்கள், ‘டிமாட்’ கணக்குகளை இலவசமாக ஆரம்பிக்க உதவுகின்றன. இன்னும் சில நிறுவனங்கள், இலவச டிரேடிங் கணக்குகளையும் திறக்க வாய்ப்பளிப்பதுடன், இ.டி.எப். எனப்படும், ’எக்ஸ்சேஞ்ச் டிரெடட் பண்டு’களின் இலவச யூனிட்டுகளையும் வழங்குகின்றன.

ஒருசில நிறுவனங்கள், புதிய வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்துவோருக்கும் ரொக்க பரிசு தருகின்றன.இந்தியாவில் உள்ள முக்கியமான முதல், 12 பங்குத் தரகு நிறுவனங்களில் மட்டும், முதல் காலாண்டில், 13 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.அதாவது, இவர்கள் எல்லாரும் சிறு முதலீட்டாளர்கள், டிரேடர்கள். இதனால், மும்பை பங்குச் சந்தையில், ஏப்ரல் முதல், ஜூன் வரையான காலாண்டில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விற்றுமுதல் பெருகியிருக்கிறது.

இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 40 சதவீதம் அதிகம்.இவர்கள் அனைவரது கவனத்தையும் பங்குச் சந்தை ஈர்த்துள்ளதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.மார்ச் மாதம், இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண், ‘நிப்டி’ மார்ச் 23 அன்று, 7610 புள்ளிகள் அளவுக்குச் சரிந்தது.

கடந்த வெள்ளியன்று, 10901 புள்ளிகளைத் தொட்டுள்ளது. அதாவது, 43 சதவீத வளர்ச்சி. ஆசை வராமல் என்ன செய்யும்?அதுவும் மற்ற முதலீடுகள்எவற்றிலும் இவ்வளவு வருவாய் கிடைக்காது எனும்போது, நாமும் கோதாவில் குதிக்கலாமே என்று ஓடி வருகின்றனர். உண்மையில், இது தான் அபாயத்தின் ஆரம்பம். கேள்விகளே கேட்காமல், பணத்தைத் துரத்தும்போது, எல்லாமே தப்பாகத் தான் போகும்.உலகமே கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் சிக்கியிருக்கிறது. இதில் இந்தியாவும் விலக்கல்ல.

ஒவ்வொரு காலாண்டும், நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கிறது. 2020 -– 21ம் நிதியாண்டில், நம் வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும் என, அத்தனை சர்வதேச தர நிர்ணய நிறுவனங்களும், புரோக்கரேஜ்களும் தெரிவித்துள்ளன. குறைந்த பட்சம், 5 சதவீதம் முதல், 9 சதவீதம் வரை வீழ்ச்சி இருக்கும் என்பதே அனைவரது கணிப்பு.

இன்னும் பல மாநிலங்களில் உள்ளூர் ஊரடங்கு உள்ளது; தொழில்கள் துவங்குவதில் சிக்கல். உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் இருந்து, விற்பனை தலங்களுக்கு எடுத்துப் போவதில் இடர்கள். சேவைத் துறைகளிலும் தடுமாற்றம்; பல்வேறு துறைகளில் வேலைஇழப்பு. இவ்வளவு மோசமான சூழலில், பங்குச் சந்தை மட்டும் உயர்ந்து கொண்டே போனால், அது குமிழியல்லாமல் வேறென்ன?

இந்தியாவின் அடிப்படைப் பொருளாதார வளத்தை, பங்குச் சந்தை பிரதிபலிக்கவில்லை. அது வெறும் சூதாட்டம் மாதிரி ஆகிவிட்டது என்றே, பல பொருளாதாரவல்லுனர்கள் கருதுகின்றனர்.சரி, அப்படியானால் பங்குச் சந்தை உயரக் கூடாதே? எப்படி உயருகிறது? பணப் புழக்கம் இருப்பதால் தானே சந்தைகள் உயர்கின்றன? நியாயமான கேள்வி.

ஆனால், விடை வேறு இடத்தில் இருக்கிறது.அமெரிக்காவில் இன்று, கடனுக்கான வட்டி கிட்டத்தட்ட பூஜ்ஜியம் அளவுக்கு வந்துவிட்டது. அதற்கு மேல் அங்கு கடன் பத்திரங்களை வாங்குவதற்கு, அந்நாட்டு அரசாங்கம், ஏராளமான டாலர்களை வாரி விட்டிருக்கிறது.

இதேபோல பல்வேறு நாடுகளும், கொரோனா பாதிப்புகளில் இருந்து, தத்தமது நாடுகளின் பொருளாதாரங்களை மீட்பதற்காக, எக்கச்சக்கமான பணத்தை செலவு செய்து கொண்டிருக்கின்றன. இன்று, அமெரிக்காவில் வெறுமனே கடன் வாங்கி, இந்தியாவில் முதலீடு செய்தால் கூட, எக்கச்சக்கமாக லாபம் பார்க்கலாம். இதைத் தான் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதாவது, எக்கச்சக்க டாலர்கள் வந்து கொட்டுவதால் தான் பங்குச் சந்தைகள் உயர்ந்து உள்ளன. அதுவும், நிப்டியில் உள்ள, 50 பங்குகளில், 15 பங்குகள் தான் எப்போதும் உயர்கின்றன. மீதமுள்ள, 35 பங்குகள் பெரிய அளவில் உயரவில்லை. எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல், ஓடும் ஓட்டம் இது. ‘ஐயோ, பங்குச் சந்தை உயர்ந்து கொண்டே போகிறதே, நாம் இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டோமே’ என்று சின்ன முதலீட்டாளர்கள் அனைவரும் இப்போது களத்தில் குதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களைத் துரத்துவது, ‘பியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்’ எனப்படும், ‘போமோ’ பதற்றம் தான். இன்னொரு பக்கம், சிறு முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிப்பது, தங்கம். அதுவும் தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்து வருகின்றனர். இதுவும் கொரோனா காலத்தில், 40 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியைத் தந்திருக்கிறது.இது போன்ற பதற்றத்தையும், அவசரத்தையும் நான், 2000, 2008 ஆகிய இரண்டு முக்கிய தருணங்களில் பார்த்திருக்கிறேன்.


அதாவது, பெருமுதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோர் வாய்ப்பைப் பயன்படுத்தி, முந்திக்கொண்டு, தரமான பங்குகளை எல்லாம் சல்லிசான விலைக்கு வாங்கிக் குவித்து விடுவர். அவர்கள் சம்பாதிக்கும் லாபத்தைப் பார்த்து வாய் பிளக்கும் மத்தியமர்கள், லேட்டாக களத்தில் குதிப்பர்.இரண்டாம் தர, மூன்றாம் தர, பென்னி ஸ்டாக்குகளுக்கெல்லாம் மவுசு கூடிவிடும்.

நாமும் ஏதோ லாபத்தைப் பார்த்துவிட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்துவர்.உண்மையில், இவர்களுக்கு வேறு பெயர் உண்டு. விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகள் என்றே இவர்களைக் கருத வேண்டும்.ஏதோ நாலு காசு சம்பாதிக்கிறோம், உங்களுக்கு ஏன் வயித்தெறிச்சல் என்று நீங்கள் பொருமுவது என் காதில் விழுகிறது. \


மன்னிக்க வேண்டும் நண்பர்களே, நீங்கள் லாபம் சம்பாதித்தால், மெத்த மகிழ்ச்சி அடைவேன். அதுவும், பங்குச் சந்தை பற்றியும், தங்க முதலீடுகள் பற்றியும் நன்கு தெரிந்து, இதற்குள் நீங்கள் நுழைந்திருந்தால், நிச்சயம் மகிழ்ச்சி தான்.பெரும்பாலானோர் அப்படி இல்லையோ என்ற அச்சம் தான், என் எச்சரிக்கையுணர்வுக்கு அடிப்படை.ஏனெனில், பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்; அதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன.

நம்பிக்கை


இந்த நிதியாண்டில், பல நிறுவனங்கள் என்ன வருவாயை ஈட்டப் போகின்றன என்பதே தெரியவில்லை. அதனால், 2021 -– 22ம் நிதியாண்டில் தான், தொழில்கள் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும்.இரண்டு, ஆகஸ்ட் மாதம் வரை வங்கிகள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ.,களை ஒத்திவைத்துள்ளன. அதன் பிறகு, உண்மையில் எத்தனை பேர் கடனைத் திருப்பிச் செலுத்தப் போகின்றனர், எவ்வளவு வாராக்கடன்களாக மாறப் போகின்றன என்பது தெரிய வரும்.

மூன்று, கொரோனாவே இன்னும் எத்தனை மாதங்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. பல நாடுகளில் இரண்டாம் அலை ஆரம்பித்துள்ளதாக தகவல். இதனால், இன்னும் முடக்கம் ஏற்படுமானால், பொருளாதாரம் அதலபாதாளத்துக்குப் போவது உறுதி. நான்கு, சர்வதேச அளவில், கச்சா எண்ணெயின் விலை உயராமல் இருக்க வேண்டும், சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை உயராமல் இருக்க வேண்டும், தங்க இறக்குமதி குறைய வேண்டும். இதெல்லாம் இருந்தால் தான், நம் பொருளாதாரம் மூச்சுவிட்டு மேலே எழும்.

எல்லாவற்றுக்கும் மேல், நவம்பரில் வரவிருக்கும் அமெரிக்க தேர்தல் பெரிய இடர். அதற்குள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடு களைத் துடைத்து எடுத்துக்கொண்டு போய்விடுவர் என்ற அச்சம் நிலவுகிறது.கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, வலுவற்ற டாலர், சர்வ தேச அரசியல் மோதல்கள் என்று பல விஷயங்கள், தங்கம் விலை உயர்வுக்குக் காரணங்களாக உள்ளன. ஆனால், இது நிரந்தரமல்ல.

பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர்களின் வேகம் தணிந்து போய் விடலாம். கொரோனாவுக்கு விரைந்து மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துவிடலாம்.உலக நாடுகளின் மத்திய வங்கிகள் இப்போது தத்தமது செலவுகளை தாராளமாகச் செய்கின்றன. இவை ஒருகட்டத்துக்குப் பிறகு சிக்கனம் பேணலாம்; இழுத்துப் பிடிக்கலாம்.

இவையெல்லாம் நடைபெறுமானால், தங்கம் தன் ஜொலிஜொலிப்பை நிறுத்திவிடும் .உண்மையில், இந்தச் சந்தைகள் மிகவும் தந்திரமானவை; மாயமான். அறிமுக முதலீட்டாளர்களை கீழே இடறி, குழிக்குள் தள்ளி விடுபவை. தேர்ந்த குதிரை ஜாக்கி களே திணறும் காலம் இது. இதில், குதிரை ஏறியே பழகியிராதவர்கள், அந்தப் பக்கமே போகாமல் இருப்பது தானே புத்திசாலித்தனம்!

.வெங்கடேஷ்\
pattamvenkatesh@gmail.com 9841053881

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)