கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி ... கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல் கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அபாய மணியடிக்கும் வங்கிகளின் வாராக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
23:14

இந்திய வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை மீண்டும் மோசமடையப் போகிறது என்று தெரிவிக்கிறது, கடந்த வாரம் வெளியான, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கை.


இதற்குக் காரணம் என்ன; என்ன பாதிப்புகள் நேரப் போகின்றன?ஆண்டுக்கு இரு முறை, இந்திய ரிசர்வ் வங்கி, நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கையை வெளியிடும். அதில், இந்தியாவில் உள்ள வங்கிகளின் பலம், பலவீனங்கள், பொருளாதாரநடவடிக்கைகள் பற்றிய தெளிவுகள் வழங்கப்படும். கடந்த வாரம் வெளியான 21வது அறிக்கை, இதுநாள் வரை, பல்வேறு தர நிர்ணய அமைப்புகளும், ஆய்வு நிறுவனங்களும் கணித்ததையே பளிச்சென்று போட்டு உடைத்துவிட்டது.

கடந்த மார்ச் மாத இறுதியில் 8.5 சதவீதமாக இருந்த பட்டிய லிடப்பட்ட வங்கிகளின் ஒட்டு மொத்த வாராக்கடன் 2021 மார்ச் மாதம் இறுதிக்குள் 12.5 சதவீதத்தைத் தொடும். பொருளாதார சூழ்நிலைகள் இன்னும் மோசமாக இருக்குமானால், இந்த அளவு 14.7 சதவீதமாகவும் உயர வாய்ப்புண்டு.இதில், பொதுத் துறை வங்கிகள் தான் அதிகபட்ச பாதிப்பை சந்திக்கப் போகின்றன. 11.3 சதவீதத்தில் இருந்து 15.2 சதவீதமாக வாராக்கடன் உயரப் போகிறது.


நிதிநிலை அறிக்கை

தனியார் வங்கிகளின் வாராக்கடன் 4.2 சதவீதத்தில் இருந்து, 7.3 சதவீதமாகவும், வெளிநாட்டு வங்கிகளின் வாராக்கடன் 3.9 சதவீதமாகவும் உயரும் என்று தெரிவிக்கிறது, நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கை.முந்தைய வாராக்கடன்களுக்கும் இந்த முறை ஏற்படப் போவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக, பெரிய தொழிலதிபர்கள், நிறுவனங்கள் ஆகியோர் வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல்போகும்போது தான், வாராக்கடன் ஏற்படும்.


இதில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றியோரும் அடங்குவர். ஆனால், இம்முறை வேறு கதை. கொரோனா எல்லாரையும் புரட்டிப் போட்டுவிட்டது. விற்பனை இல்லை, உற்பத்தி இல்லை, வேலைவாய்ப்புகள் இல்லை. மொத்தத்தில், பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது.இந்தச் சூழ்நிலையில் மத்தியஅரசும், ஆர்.பி.ஐ.,யும் ஒரு நடவடிக்கை எடுத்தன; கடன்களுக்கான மாதாந்திர தவணையை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்தன. அது நிறுவனக் கடனாக இருந்தாலும் சரி, தனிநபர்களின் வீட்டுக்கடனாக இருந்தாலும், இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டது.


இதை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதாவது, இ.எம்.ஐ., ஒத்திவைப்பை 65 சதவீத சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும், 55 சதவீத தனிநபர்களும் 42 சதவீத கார்ப்பரேட்டுகளும் ஏற்றுக்கொண்டனர். இதை வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் இவர்களால், வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாத அளவுக்கு வருவாய் வீழ்ச்சி. இத்தனைக்கும் வருங்காலத்தில் கூட்டுவட்டியோடு, மூலதனத்தைச் செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தாலும் பரவாயில்லை என்று, இவர்கள், இ.எம்.ஐ., ஒத்திவைப்பை ஏற்றுள்ளனர்.


அப்படியென்றால், உண்மையிலேயே இவர்களுடைய நிலைமை அபாயகரமாகவே இருப்பதாகக் கருத வேண்டும்.ஆகஸ்ட் மாதத்துடன் ஆறு மாதங்கள் முடியவடையப் போகிறது. அதன் பின் தான் உண்மையான நிலைமை தெரியவரும். எத்தனை பேரால், நிறுவனங்களால், மீண்டும் கடன்களின் மாதாந்திரத் தவணைகளை ஒழுங்காகச் செலுத்த முடியும் என்று தெரியவில்லை. பல கடன்கள் மோசமாகிவிடலாம்; மூழ்கிப் போகலாம். வங்கிகள் மட்டுமல்ல; வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் வாராக்கடன் பெருகப் போவது உறுதி.


முந்தைய தருணங்களில் பெருநிறுவனங்களால் வாராக்கடன்கள் பெருகின. ஆனால், இம்முறை நம்முடைய மத்தியமர்களும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் திண்டாடுவதால் வாராக்கடன் பெருகப் போகிறது.

திருட்டுத்தனம்

இதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால், வாராக்கடன் என்பது வங்கிகளின் பார்வையில் பெரும் சுமை தான். மறுப்பதற்கில்லை. ஆனால், அடிப்படை வாழ்வாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கமே இதற்குக் காரணம்.வங்கியைச் சுரண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இது செய்யப்படவில்லை என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் போதும். இதிலும் ஏதேனும் யுக்தி இருக்குமா, குறுக்கு வழி, திருட்டுத்தனம் இருக்குமா என்பதை வங்கி நிர்வாகங்கள் கண்காணிப்பது நல்லது.


பொருளாதார பாதிப்புள்ள மத்தியமர்கள் கடன் ஒத்திவைப்பை பெறுவது நியாயம். ஆனால், தவறாகப் பயன்படுத்த எவரேனும் முனைவர் என்றால், அது தடுக்கப்பட வேண்டும்.அதேபோல் ஆகஸ்டுக்குப்பின், ஒத்திவைப்பை நீட்டிக்கக் கூடாது. ஒரு முறை கடன் மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை, பல சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கோருகின்றன. இன்றைய சூழலில், இது வங்கிகளின் சுமையை மேன்மேலும் அதிகரிப்பதாகவே இருக்கும்.


அதனால், ஏதேனும்ஒரு வரையறையை உருவாக்கி, அதன்படி கடன் சீரமைப்பை வழங்கலாம். வாராக்கடன் பெருகுவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சமாளிப்பது தான் இப்போது மிகவும் முக்கியம்.குறிப்பாக, வங்கிகள் வாராக்கடனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு, அவை ஈட்டும் வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கும். அதனால், கடன் கொடுப்பதற்கு அவற்றிடம் போதிய மூலதனம் இருக்காது. அதேபோல், புதிய கிளைகள்திறப்பது அனுமதிக்கப்படாது. போதிய மூலதனம் இல்லை என்றால், ஒருசில வங்கிகள்கடன் கொடுப்பதையே ஆர்.பி.ஐ., அனுமதிக்காது.
ஏற்கனவே, பொதுத் துறை வங்கிகள் பார்த்து பார்த்துத் தான் கடன் கொடுக்கின்றன. பெரிய ரிஸ்க் எடுக்க அவை தயங்குகின்றன. இனி நிலைமை இன்னும் மோசமாகிவிடும். கொரோனாவில் இருந்து மீளவேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், வங்கிகள் கடன்கள் கொடுக்காமல், இழுத்துப் பிடித்தால், பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடும். ஒவ்வொரு துறையிலும் கடன் வறட்சி ஏற்பட்டு, தொழில் பாதிப்பு ஆழமாக இருக்கும்.
மேலும், பெரும்பாலான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் தான் கடன் பெறுகின்றன; அவற்றுக்கும் இதே பிரச்னை தான். அவற்றாலும் கடன் கொடுக்க முடியாது எனும்போது, தொழிலகங்கள் மீள்வதில் சிக்கலும், தாமதமும் ஏற்படப் போவது உறுதி.இதையெல்லாம் பார்க்கும்போது, நத்தை கூண்டுக்குள் சுருங்கிக்கொள்வது போல், நம் பொருளாதாரம் சுருங்கிவிடுமோ என்ற அச்சம் எழாமல் இல்லை.


இந்தச் சமயத்தில் தான், மத்திய, மாநில அரசுகள் கூடுதலாக நிதியாதாரங்களை ஏற்படுத்தி, வங்கிகளையும் காப்பாற்றி, நம் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.

அச்சம்

ஆனால், அரசாங்கத்துக்கு வேறோரு கவலை இருக்கிறது. இதையெல்லாம் செய்தால், எங்கே நம் நிதிப் பற்றாக்குறையின் அளவு பெருகிவிடுமோ; கடனுக்கும், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் பெருகிவிடுமோ; அதனால் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், இந்தியாவின் முதலீட்டுத் தரத்தைக் குறைத்துவிடுமோ என்று அச்சப்படுகிறது. உண்மையில், நாம் ரேட்டிங் ஏஜன்சிகளுக்காக கவலைப்படக் கூடாது. காலுக்காக செருப்பே அன்றி, செருப்புக்காக காலை வெட்டிக்கொள்ள முடியாது. மேலும் வெளிநாட்டு முதலீட்டை எதிர்பார்த்து, சரிவடையும் உள்நாட்டு அமைப்புகளை நடுத்தெருவில் விட்டுவிடவும் முடியாது.

இந்நிலையில், நம் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ள நம்பிக்கை வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன.‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், நம் பொருளாதாரத்தை மீட்பதற்குத் தேவையான இன்னொரு பொருளாதார ஊக்கத் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்யும்’ என்று அவர் தெரிவித்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.


அடிப்படையில், இந்த வாராக்கடன் என்பது வங்கிகளின் குறையில்லை, தனிநபர்கள், நிறுவனங்களின் குற்றமும் இல்லை. ஆர்.பி.ஐ.,யின் கையாலாகத்தனமும் இல்லை. கொரோனா என்ற கொள்ளை நோய், நம் இந்தியப் பொருளாதாரத்தை திக்கு தெரியாத காட்டில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இருள் கண்டு மிரளாமல், நிதி ஆதாரங்கள் எனும் கைவிளக்கைப் பிடித்து, துாரத்து வெளிச்சப் புள்ளியை நோக்கி நகர்வது ஒன்றே இப்போதைக்கு வழி.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com

9841053881

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)