பதிவு செய்த நாள்
08 ஆக2020
23:57

புதுடில்லி, ஆக.9–நாட்டின் ஸ்மார்ட்போன் விற்பனை, நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து மீட்சியை காணும் என, சந்தை ஆராய்ச்சி நிறுவனமான, ஐ.டி.சி., தெரிவித்துள்ளது.மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், விற்பனை பாதியளவுக்கு குறைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஐ.டி.சி., மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 50.6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இக்கால கட்டத்தில், 1.82 கோடி போன்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.
இந்த சரிவுக்கு, கொரோனா பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டது காரணமாக அமைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த மொபைல்போன் சந்தையில், சாம்சங் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, சயோமி, விவோ ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.விற்பனையில் சரிவை கண்டாலும், ஸ்மார்ட்போன் பிரிவில், சீன தயாரிப்பு நிறுவனமான சயோமி முதலிடத்தை வகிக்கிறது. மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில், 29.4 சதவீதத்தை சயோமி பிடித்துள்ளது.இதையடுத்து, சாம்சங், 26.3 சதவீத சந்தையையும்; விவோ, 17.5 சதவீத சந்தையையும் பிடித்துள்ளது. ரியல்மி 9.8 சதவீதமும்; ஒப்போ 9.7 சதவீதமும் பெற்றுள்ளது.
ஜூன் மாத காலாண்டின் துவக்கத்தில் விற்பனையாளர்கள் வினியோகத்தில் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. மேலும், தொழிற்சாலைகள் இன்னும் முழு அளவு உற்பத்தியை எட்டாததால், அடுத்த காலாண்டிலும் பற்றாக்குறை இருக்கும்.ஜூன் மாதத்தில் பல இடங்களில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக, தேவைகள் அதிகரித்தது. இருப்பினும், விருப்பப்படி வாங்க முடியாமல் கிடைப்பதை தான் வாங்க முடிந்தது.
விற்பனையை பொறுத்தவரை, ஆன்லைன் மூலமான விற்பனை, 44.8 சதவீதமாக முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 39.9 சதவீதம் குறைவாகும்.ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி., அதிகரித்தது, மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால், நிறுவனங்கள் போனின் விலையை அதிகரித்துள்ளன.சாதாரண போன்களின் விற்பனை, மதிப்பீட்டு காலாண்டில், 69 சதவீதம் சரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|