தற்சார்பு இந்தியாவில், ‘ஸ்டார்ட் அப்’ பங்குதற்சார்பு இந்தியாவில், ‘ஸ்டார்ட் அப்’ பங்கு ...  மின்னணு வடிவில் காப்பீடு பாலிசி மின்னணு வடிவில் காப்பீடு பாலிசி ...
கடன் மறுசீரமைப்பு நமக்கு தேவையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2020
23:17

சமீபத்தில் நடந்து முடிந்த நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின் இறுதியில், நம்மைப் போன்ற மத்தியமர்களுக்கு, இரண்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்.

இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதை எப்படி முடிவு செய்வது?கொரோனா நம்மைத் தாக்குவதற்கு முன்பிருந்தே, ஒரு கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. கார்ப்பரேட், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மற்றும் தனிநபர் கடன்களை மறுசீரமைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே அக்கோரிக்கை.

கொள்ளை நோய் ஏற்பட்டவுடன், இந்தக் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க துவங்கியது. இந்த நிலையில் தான், பல்வேறு கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகையை ஒத்தி வைக்கும் திட்டம் அறிமுகமானது. ஆகஸ்ட், 31 உடன் இந்த திட்டம் நிறைவு பெறும். அதன் பிறகு, நிறுவனங்களும், தனிநபர்களும் மீண்டும் மாதாந்திர தவணை தொகைகளை செலுத்தத் துவங்குவரா என்ற கேள்வி எழுந்தது.

கொரோனாவால், தொழில் பாதிப்பு கடுமையாக இருப்பதால், பலரும் மீண்டும் கடனைச் செலுத்த மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் விளைவாக, வங்கிகளின் வாராக் கடன் அளவு பெரிய அளவில் உயரப் போகிறது என்ற அச்சமும் ஏற்பட்டது. இந்த ஆண்டு இறுதியில், வங்கிகளின் வாராக்கடன், 12.7 சதவீதம் வரை உயரக்கூடும் என்ற மதிப்பீடும் வெளியிடப்பட்டது.

இதில் இரண்டு பிரச்னைகள். ஒன்று, நிறுவனங்களும், தனிநபர்களும் கடனைச் செலுத்த முடியாமல் போவதற்கு, அவர்களுடைய தவறு காரணமல்ல. கொரோனாவின் சீதனம் அது. இரண்டாவதாக, வாராக்கடன் பெருகிவிட்டால், வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் துவண்டு போய்விடும். அவற்றை மீட்பது இன்னும் பெரிய சிரமம்.

இந்நிலையில் தான், கடன் மறுசீரமைப்பு திட்டம் முன்மொழியப்பட்டது. அதாவது, கார்ப்பரேட்டுகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், தனிநபர் ஆகியோர் மூச்சு விட்டு, ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொஞ்சம் அவகாசம் கேட்கப்பட்டது.

மறுசீரமைப்பு

சமீபத்திய நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் இறுதியில், இந்த கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி செவிமடுத்திருக்கிறது.ஆனால், முந்தைய தவறுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் அதனிடம் இருக்கிறது. அதனால், இம்முறை நடைமுறைக்கு வரும் கடன் மறுசீரமைப்பு திட்டம், மிகக் கறாராக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த, 2008ம் ஆண்டு பொருளாதார பாதிப்புக்குப் பின் அறிமுகமான கடன் மறுசீரமைப்பு திட்டங்களால், வங்கிகள் மேன்மேலும் கடன்காரர்கள் ஆனது தான் மிச்சம். வாராக்கடன் பெருகியது தான், வங்கிகள் கண்ட பலன்.

இம்முறை, கொரோனாவால் பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு மட்டுமே மறுசீரமைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.அதற்கேற்ப கடந்த மார்ச், 1ம் தேதி வரை, இத்தகைய நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் நல்லபடியாக இருக்க வேண்டும். அதாவது, அப்போதே அவை கடனை கட்ட முடியாமல் இழுத்து பறித்துக்கொண்டு இருக்கக் கூடாது. பிப்ரவரி மாதத்துக்கு பின், அவற்றின் நிலைமை சரிந்திருக்க வேண்டும். அப்போது தான், புதிய திட்டம் அவர்களுக்குப் பொருந்தும்.அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ஒருங்கிணைக்கப்பட்டு, மற்றொரு கடனாக கருதப்படலாம்.

தவணைத் தொகையை செலுத்துவதற்கான திட்டம் மாற்றியமைக்கப்படலாம் அல்லது ஒத்தி வைக்கப்படலாம். எதைச் செய்தாலும், இவையெல்லாம் அதிகபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை தான் நீடிக்க வேண்டும்.எந்தெந்த துறைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; எப்படியெல்லாம் மேலும் நெறிப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, கே.வி.காமத் தலைமையில் ஒரு குழுவை ரிசர்வ் வங்கி அமைத்திருக்கிறது. 1,500 கோடி ரூபாய்க்கு மேலான கடன்கள் விஷயத்தில், இக்குழுவே முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு கடன் தொகை

இவ்வாறு மறுசீரமைக்கப்படவுள்ளன? ஜூன் மாதம் முடிந்த காலாண்டில், பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களில், 40 சதவீதம் அளவுக்கு பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது ஓர் ஆய்வு அறிக்கை. அதாவது, அவர்கள், மார்ச் இறுதி வரை வாங்கியுள்ள மொத்த கடனான, 10.7 லட்சம் கோடி ரூபாயில், 6 லட்சம் கோடி ரூபாய் இது போன்ற பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இதைத் தான் இப்போது வங்கிகள் மறுசீரமைப்பு செய்யவிருக்கின்றன. இவை பெருநிறுவனங்கள்; அது தனிக்கதை. மத்தியமர்களான நம் கதைக்கு வருவோம்.தனிநபர் கடன்கடன் மறுசீரமைப்பு பெரும்பாலான தனிநபர் கடன்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இதன்படி, தங்கத்தின் மீதான கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன், நுகர் பொருள் கடன், கார் கடன் பங்கு பத்திரங்களின் மீதான கடன் ஆகிய அனைத்தும், கடன் மறுசீரமைப்புக்கு தகுதி பெற்றவை.கொரோனா காலக்கட்டத்தில் வேலை இழந்த, வருமானம் இழந்த ஏராளமானோர் உள்ளனர். தொழில்கள் நசிந்துள்ளன. இத்தகையோருக்கு கடன் மறுசீரமைப்பு நிச்சயம் வரப்பிரசாதம்.

ஆகஸ்டுக்குப் பிறகு, இவர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைத்துக் கொள்ளலாம்.ஆனால், எத்தகைய மறுசீரமைப்பு வழங்கப்படும், யாருக்கு இவை வழங்கப்படும் என்பதை ஒவ்வொரு வங்கியும், வங்கியல்லாத நிதி நிறுவனமும் தான் தீர்மானிக்கப் போகின்றன. முதலில், மாதாந்திர தவணை ஒத்திவைப்பையும் கடன் மறுசீரமைப்பையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மாதாந்திர தவணை ஒத்தி வைப்பில், மாதாந்திர தவணையைக் கட்ட வேண்டாம். அந்தத் தொகை அப்படியே மூலதனத்தோடு சேர்க்கப்பட்டு விடும். மீண்டும், தவணை ஆரம்பிக்கும்போது, நீங்கள் கட்டவேண்டிய தொகையும், அதற்கான காலமும் அதிகரித்திருக்கும். ஆனால், கடன் மறுசீரமைப்பில், வங்கிகள் பல்வேறு வாய்ப்புகளை வழங்கலாம். மாதாந்திர தவணைத் தொகையை ஒரு சில மாதங்களுக்கு குறைக்கலாம், கடனுக்கான கால அளவை நீட்டிக்கலாம், இப்போதைக்கு முதலில் கடனுக்கான வட்டியை மட்டும் தவணையாக செலுத்துங்கள் என்றும் சொல்லலாம் அல்லது வட்டி விகிதத்தை மாற்றியமைத்து தரலாம்.

ஏற்கனவே நீங்கள் மாதாந்திரதவணை ஒத்திவைப்பை ஏற்றுக்கொண்டு இருந்தால், உங்களுடைய மாதாந்திர தவணைத் தொகை குறைவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், ஏற்கனவே உங்கள் மூலதன தொகை அதிகரித்திருக்கும்.என்னவிதமான கடன் மறுசீரமைப்பு திட்டத்தை வங்கிகள் அறிவிக்கப் போகின்றன என்பது, இனிமேல் தான் தெரிய வரும்.

பொதுத் துறை வங்கிகள் தான் இதை முதலில் வழங்கும். தனியார் வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் இதை வழங்குவதற்கு நிச்சயம் சுணக்கம் காட்டும் அல்லது அவர்கள் முக்கியம் என்று கருதும் வாடிக்கையாளரின் கடனை மறுசீரமைத்து வழங்கும்.

வேண்டுமா?

முதலில், இத்தகைய கடன் சீரமைப்பை நீங்கள் ஏற்க வேண்டுமா என்று யோசியுங்கள். உங்கள் நிதி நிலைமை படுமோசம், மாத வருவாயே இல்லை என்றால், நிச்சயம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய வேலை கிடைத்து, சம்பளமும் வாழ்க்கையும் கொஞ்சம் நிதானமடையும் வரை, இத்திட்டம் உதவலாம். முக்கியமாக, மாதாந்திர தவணை ஒத்திவைப்பை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது, உங்களை மீளவே முடியாத மகா கடன்காரன் ஆக்கிவிடும்.

இதற்குப் பதில், மாதாந்திரதவணைத் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு குறைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறதா என்று பாருங்கள். வீட்டுக்கடன் வாங்கியோரில்கிட்டத்தட்ட, 70 சதவீதம்பேர், மாதாந்திர தவணை ஒத்திவைப்பை ஏற்கவில்லை என்றொரு தகவல் தெரிவிக்கிறது. அப்படியே ஏற்றுக் கொண்டோரில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர், செப்டம்பரில் மீண்டும் தவணை ஆரம்பிக்கும்போது, பழைய தவணைகளையும் செலுத்தி விடுவர் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் வங்கியாளர்.

கடன் அதிகமாக அதிகமாக, அவர்களுடைய சிபில் ஸ்கோர் அடி வாங்கும். அது, எதிர்கால கடன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம் என்ற அச்சமும் இருக்கிறது.

தங்கக் கடன்

நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகளை அறிவித்த சக்திகாந்த தாஸ், இன்னொரு வாய்ப்பையும் வழங்கினார். தங்கக் கடன்களைப் பெறும்போது, தங்கத்தின் மதிப்பில், 90 சதவீதம் வரை கடன் பெறலாம் என்று அறிவித்தார். தற்சமயம், 75 சதவீதம் வரை தான் கடன் வாங்க முடியும். இதனால், வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள தங்கத்துக்கு ஈடாக, கூடுதல் கடன் தொகை பெற முடியும்.

கொரோனா காலத்தில், பணத் தேவைக்காக கடன் வாங்குவோர் பெருகியுள்ளனர். அவர்களுக்கு உதவுவது தங்கம் தான். இதை மனத்தில் வைத்தே, தங்கக் கடனுக்கான அளவு உயர்த்தப்படுவதாக தெரிகிறது. உண்மையில் நம் சமூக துயரத்தின் அளவு உயர்ந்திருப்பதாகவே இதற்குப் பொருள். வேறு வழியில்லாமல் தான் குடும்பங்களும் சிறு, குறு தொழிலகங்களும் தங்கள் வீட்டு நகையை அடகு வைக்கின்றன. அவர்கள் ஒன்றும் இதை விருப்பத்தின் பேரில் செய்வதில்லை.

தேவையா?

முதலில், 90 சதவீத அளவுக்கு கடன் வேண்டுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். இப்போது, உங்கள் தங்கத்துக்கு ஈடாக கூடுதல் தொகை கிடைக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் கட்டப்போகும் மாத வட்டியின் அளவு அதிகமாகவே இருக்கும். அதை, ஒவ்வொரு மாதமும் தாங்க முடியுமா என்று யோசியுங்கள்.மேலும் ஒரு பிரச்னை இருக்கிறது. இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்கிறது. அதனால், 90 சதவீதம் வரை லோன் கொடுக்கச் சொல்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும். இன்றைக்கு 1 கிராம் தங்கம், 5,385 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இது, 5,000த்துக்கோ, 4,500 ரூபாய்க்கோ வந்தால் என்ன ஆகும்?அப்போது நீங்கள் கூடுதலாக ரூபாய் வாங்கியிருப்பீர்கள். அதற்கு ஈடாக, உபரியாக உள்ள தொகையை திரும்பச் செலுத்தச் சொல்வர் அல்லது கூடுதல் நகையை அடமானமாக வழங்கச் சொல்வர். முடியவில்லை என்றால், கடன் மூழ்கிப் போய், ஏலத்துக்கு வந்து விடும் அபாயம் உண்டு.

ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கும் இரண்டு வாய்ப்புகளும் உங்களுக்குப் பொருந்துமா, தேவையா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவை இரண்டும், கொரோனா பெருவெள்ளத்தில் உயிர் பிழைப்பதற்காக தத்தளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்ட மிதவை வளையங்கள். உங்களால் சொந்தமாகவே நீச்சல் அடித்து, கரை சேர முடியும் என்றால், அதை முயற்சி செய்து பார்ப்பதே புத்திசாலித்தனமானது.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com \

98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)