மருத்துவ காப்பீடு கோரிக்கை மருத்துவ காப்பீடு கோரிக்கை ... தங்கம் விலை சவரன் ரூ.200 சரிவு தங்கம் விலை சவரன் ரூ.200 சரிவு ...
இனி யாரும் ஏமாற்ற முடியாது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2020
10:12

சுதந்திர இந்தியாவில், தொடர்ந்து வரி சீர்திருத்தம் பற்றி பல கருத்துகள் சொல்லப்படுவதுண்டு. கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ஓர் அணுகுமுறை, சர்வதேச அளவில், நம் மதிப்பையும், செயல்பாடுகளையும் பன்மடங்கு உயர்த்தப் போவது நிச்சயம்.

வருமான வரி செலுத்துவது என்றாலே பெரும்பாலானோருக்கு எட்டிக்காய். எங்கேனும் மிச்சம் பிடிக்க முடியுமா? வரிச் சட்டங்களில் ஏதேனும் ஓட்டை தெரிகிறதா என்று ஒரு சாரார் எப்போதும் தேடிக்கொண்டே இருப்பர்.இன்னொரு புறம், அரசாங்கம் நியாயபூர்வமாக அளிக்கும்விலக்குகளைப் பயன்படுத்தி, ஆண்டுதோறும், வரி செலுத்தி, ரிட்டர்ன் தாக்கல் செய்யும் அப்பாவி மத்தியமர்களே அதிகம். வரி தீவிரவாதம்ஆனால், இன்றும் வருமான வரித் துறை என்றாலே லேசான கிலி தான். திரைப்படங்களில் கூட, சி.பி.ஐ. ரெய்டு என்பதை விட ஐ.டி. ரெய்டு காட்சிகள் தான் ரொம்பவும் பிரபலம்.அவர்கள் நம் சொத்துகளை அபகரித்துக்கொள்ள வந்திருக்கின்றனர் என்ற இயற்கையான அச்சமே இதற்குக் காரணம்.

தனிநபர்களை விட, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும், பெருந்தொழில்களும் தான் இன்னும் எரிச்சலும் அவஸ்தையும் படுபவை. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பல சமயங்களில், வரி கணக்குகளைத் தாக்கல் செய்யும்போது, அதில் எழும் குழப்பங்கள் சரியாகத் தீர்க்கப்படுவதில்லை.நிறுவனங்கள் வழங்கும் கணக்குகளை, ஐ.டி., துறை அப்படியே ஏற்பதில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு உண்டு. பல சமயங்களில், ஐ.டி., அதிகாரி விதிக்கும் வரியை ஏற்காமல் நீதிமன்ற படியேறியவர்களே அதிகம்

.இது தொடர்பான சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று முக்கியமானது. அதாவது இந்திய நிறுவனங்கள் மீது மார்ச், 2019 முடிய விதிக்கப்பட்ட வருமான வரியின் அளவு, 11 லட்சம் கோடி ரூபாய். இதில், 86 சதவீதம், அதாவது, 9.5 லட்சம் ரூபாய் வரைக்கும் தகராறில் இருக்கிறது. நீதிமன்றத்தில் விசாரணையில் நிற்கிறது.இன்னொரு சம்பவமும் உங்களுக்கு ஞாபகமிருக்கும். வருமான வரியை வசூலிப்பதில் அதிகாரிகள் கடுமை காட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு.கபே காபிடே அதிபர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டபோது, நம் ஊடகங்களில், 'வரி தீவிரவாதம்' என்ற சொற்றொடர் இயல்பாக புழங்கியது.

இந்தப் பின்னணியில் இருந்து தான், பிரதமர் அறிமுகம் செய்துள்ள திட்டம் வரவேற்பு பெறுகிறது.'வெளிப்படையான வரி விதித்தல், நேர்மையானவர்களை கவுரவித்தல்' என்ற முழக்கத்தோடு புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்றன. மூன்று அம்சங்கள் இதில் முக்கியமானவை.சாசனம் முதலாவது, வரி செலுத்துவோரின் சாசனம் என்று சொல்லப்படும், 14 அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் அடுத்து நாம் தான் இத்தகைய கடமைகளையும், உரிமைகளையும் வழங்கியுள்ளோம். இதில் மிக முக்கியமான பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.வரி செலுத்துவோர் என்றாலே அவர்கள் வரி ஏய்ப்பவர்கள் என்ற தவறான மனநிலை தான் பெரும்பாலும் இருக்கும். முதன்முறையாக, இந்தச் சாசனம், வரி செலுத்துவோரை 'நேர்மையாளர்'களாக அங்கீகரிக்கிறது.

அவர்களுடைய தனியுரிமையை ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், வரி விதிக்கும் அதிகாரிக்கு பொறுப்புண்டு என்பதையும் இந்தச் சாசனம் உறுதிப்படுத்துகிறது.அதாவது இந்திய வருமான வரித் துறையின் பார்வை முற்றிலும் மாறியிருப்பதன் அடையாளமே இந்தச் சாசனம். வரி செலுத்துவோர் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கின்றனர் என்பதை உணர்ந்து, அவர்களை கவுரவத்துடன் நடத்த முயற்சி செய்கிறது. மேல்முறையீடு இரண்டாவது, முகமறியா மின்னணு மதிப்பீட்டு முறை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த நடைமுறை, இப்போது நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.அதென்ன, 'முகமறியா' என்று கேட்கிறீர்களா? பொதுவாக வரி விதிக்கும் அதிகாரி யார் என்பது வரி செலுத்தும் நிறுவனங்களுக்குத் தெரியும். அவர்களது ஆடிட்டர்களுக்குத் தெரியும்.

இதனால் நன்மையும் உண்டு, வருத்தங்களும் உண்டு. இந்நிலையில், புதிய அணுகுமுறை முற்றிலும் வேறு விதமாக இயங்கும்.நீங்கள் சென்னையில் இருந்து வரி செலுத்தலாம். உங்கள் வருமான வரி மதிப்பீடு இனி இங்கே தான் நடைபெறவேண்டும் என்றில்லை. இந்தியாவின் எந்த மூலையிலும் உள்ள வருமான வரித் துறை அதிகாரி அதை மதிப்பீடு செய்வார். இந்தத் தேர்வு செயற்கை நுண்ணறிவு முறையில் தன்னிச்சையாக, 'ரேண்டமாக' தேர்வு செய்யப்படும்.அவருக்கு நீங்கள் யார் என்பதோ, உங்கள் நிறுவனத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாது.வெளிப்படைத் தன்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு இது.இதேபோல், உங்களுக்கு விதிக்கப்பட்ட வரித் தொகை மீது புகார் உண்டு. மேல்முறையீடு செய்யப் போகிறீர்கள் என்றால், அதையும் மின்னணு முறையில் செய்வதற்கான வாய்ப்பையும், ஐ.டி., துறை வழங்கப் போகிறது.

'இ- - அப்பீல்' என்று இதற்குப் பெயர். செப்டம்பர், 25ல் இருந்து இந்த முறை அமலுக்கு வரும். வரி ஏய்ப்பு இந்த புதிய அணுகுமுறைகள் தொடங்கிய பின், வருமானத் துறை மூத்த அதிகாரிகளோடு பேசிக்கொண்டு இருந்தேன். அவர்கள் தெரிவித்த அம்சங்கள் தான் கவனத்தைக் கவர்ந்தது. அதாவது, கடந்த 15ஆண்டுகளாகவே, தனி நபர்கள், நிறுவனங்கள் ஆகியோரது சிறு, பெரிய அனைத்து வரவுகளையும், செலவுகளையும் ஐ.டி.துறையினரால் பதிவு செய்துவிட முடிந்தது.

அவர்களுக்குத் தெரியாமல் 100 ரூபாயைக் கூட நீங்கள் வெளியே கொடுத்துவிட முடியாது, பெற்றுக்கொள்ள முடியாது. அந்த அளவுக்குத் தொழில்நுட்பம் அனைத்தையும் ஒருங்கிணைத்துவிட்டது. இனிமேல் வரி ஏய்ப்பு என்பது சாத்தியமே இல்லை.இந்நிலையில், வரி செலுத்துவோர் நேர்மையாளராக மட்டுமே இருக்க முடியும். பெரிய அளவுக்கு வரி இழப்பு ஏற்படும் சூழல் ஏற்படுமானால், அதை ஐ.டி., துறையில் உள்ள செயற்கை நுண்ணறிவு அல்காரிதம் கண்டுபிடித்துவிடும்.அது சுட்டிக்காட்டும் கேஸ்கள் தான் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

நிச்சயம், அவர்கள் தவறு செய்திருப்பர். முடிந்தது, கதை. இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் மிகக் குறைவானவர்கள். அதாவது மொத்த மக்கள் தொகையில், 1 சதவீதம் கூட இல்லை. 1.5 கோடி பேர் தான் வருமான வரி செலுத்துகின்றனர். அமெரிக்காவிலோ, இதர ஐரோப்பிய நாடுகளிலோ, 90 சதவீதத்தினர் மேல், வருமான வரி செலுத்துகின்றனர்.இந்நிலையில், கொரோனா வேறு நம்மைத் தாக்கியுள்ளது. இந்நிலையில் எத்தனை பேரால், முழுமையாக வருமான வரி செலுத்த முடியும் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் அரசாங்கம் படிப்படியாக வரி வருவாயை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். அணுகுமுறை மாற்றம் இந்த இடத்தில் தான் கைகொடுக்கப் போகிறது. ஐ.டி., துறை இதைப் புரிந்து கொண்டதால், மேன்மேலும் மென்மையான ஆனால் உறுதியான போக்கை கடைப்பிடித்து வருகிறது. தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் நாடியுள்ளது. குற்றமே செய்யமுடியாமல் செய்துவிட்டால், அல்லது எங்கெல்லாம் ஏய்ப்பு நடைபெற வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் தடைகளைப் போட்டு விட்டால், எல்லாரும் ஓர் ஒழுங்குக்கு வந்து தானே ஆக வேண்டும்.இந்தப் புதிய திட்டம் அமலுக்கு வந்த மறுநாளே, நாடெங்கும் உள்ள 3,000 வரி மதிப்பீட்டாளர்கள் பல்வேறு வருமான வரித் துறை அலுவலகங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை வழிநடத்தும் மதிப்பீட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல், செக்ஷன், 133ஏ கீழ், நேரடியாகச் சென்று சோதனை செய்யும் அதிகாரம் இனிமேல், ஐ.டி., துறையின் விசாரணை பிரிவுக்கும், டி.டி.எஸ்., ஆணையரகங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தற்போது எந்த ஐ.டி., அதிகாரியும் விசாரணைக்குப் போகலாம் என்ற சூழல் இருக்கிறது.ஆக, பெரிய மாற்றம் ஒன்றை இந்திய வருமான வரித் துறை அமல்படுத்தியுள்ளது. புத்திசாலித்தனத்தையும், தகவல்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, முன்னணிக்கு நகர்ந்துள்ளது.இனிமேல் வருமானத்தைக் குறைத்துக் காண்பிப்பது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. எல்லா ஓட்டைகளும் படிப்படியாக அடைக்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் நிறைய சம்பாதிப்பை அரசாங்கம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு உரிய வரியைச் செலுத்திவிட்டு, சவுகரியங்களை அனுபவியுங்கள் என்று மட்டுமே சொல்கிறது.உண்மையில் இது கன்றுக்கு உரிய பாலைக் கொடுத்துவிட்டு, மிச்சத்தைக் கறந்துகொள்வதற்கு ஒப்பானது. ஒட்ட ஒட்ட கறந்து, தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் வரி ஏய்ப்பாளர்களின் எண்ணங்கள் இனிமேல் வெற்றி பெறப் போவதில்லை. எதிர்கால வளர்ச்சி என்னும் கன்றுக்குப் பால் கொடுத்தே தீர வேண்டும்.

ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)