அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு ... தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஒரு 'ஓ' போடலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2020
00:11

'ஓ!'பணவீக்கம், பணவாட்டம், பங்குச் சந்தை, நிரந்தர வைப்பு நிதி, வட்டி விகிதம், ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ, மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றெல்லாம் ஏராளமான சொற்கள் இன்று வளைய வருகின்றன.


எத்தனை பேருக்கு இதன் பின்னேயுள்ள அர்த்தங்கள் அத்துபடி? நாம் நிதித் துறையில் போதிய அறிவு பெற்றுள்ளோமா? இந்த திசையில் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருக்கும் ஒரு முயற்சி நம் கவனத்தைக் கவர்ந்தது.


அது என்ன?இணையம் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்வதற்கு இன்னும் பலருக்குப் பயம். டிஜிட்டல் முறையில் மின்சாரக் கட்டணம், சொத்து வரி செலுத்துவதற்கு தயக்கம். ஏ.டி.எம்., போய் பணம் எடுப்பதைவிட, வங்கியில் படிவம் பூர்த்தி செய்து, பணம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். பற்று அட்டை, கடன் அட்டை வைத்துக் கொள்வதை விட, நேரடியாக பணம் கொடுத்து வாங்கிவிடுவதே உசிதம் என்று கருதுவோரும் உண்டு.

இதெல்லாம் ஒரு விஷயத்தைத் தான் சொல்கின்றன. இவர்கள் அனைவருக்கும் வளர்ந்து வரும் நிதித் துறை மாற்றங்கள், முன்னேற்றங்களில் போதிய பரிச்சயமில்லை, அனுபவம் இல்லை. பழைய உலகத்து மனிதர்களாகவே இருக்க விரும்புகிறார்கள்.இது பெரியவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் பெண்களும் கூட இத்தகைய புரியாமையில் இருக்கிறார்கள். இதன் இன்னொரு பாதிப்பு தான் பெரிய பிரச்னை. அது அரைகுறை புரிதல்.


பாதி தெரிந்து,பாதி தெரியாமல் இருத்தல்.இதனுடைய பாதிப்புகள் எவ்வளவு மோசமானவை தெரியுமா? கடந்த ஒரு வாரத்தில் வெளியான செய்திகளின் தலைப்புகள் இவை: 'கடன் பெற்று மோசடி, மகளிர் குழு புகார்', 'நிதி நிறுவனத்தில் ஏமாந்தோர் பணத்தை திரும்ப பெறலாம்', 'கடலுார் அருகே கிசான் நிதி உதவி திட்டத்தில் ரூ. 12 லட்சம் மோசடி', 'பெண் கணக்காளர், 60 லட்சம் மோசடி செய்த விவகாரம்', 'சீட்டு நடத்தி மோசடி'...அதாவது நிதித் துறை மோசடிகள்.


மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு, விதவிதமாக களவாடுவோர் பெருகியுள்ளனர்.இன்னொரு சமீபத்திய உதாரணம். கொரோனா காலத்தில் ஒரு நிறுவனம் தன்னுடைய பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. கடன் அட்டை வாங்கிக் கொடுத்து, தேய்க்கச் சொல்லிவிட்டது. ஆறு பணியாளர்களும் தங்கள் லிமிட் வரை தேய்த்து விட்டனர். இப்போது கடன் அட்டை வாங்கிக் கொடுத்த தொழில் முதலாளி, விழி பிதுங்கி நிற்கிறார். குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் கூட கட்டாததால், வட்டி குட்டி போட்டு, குட்டி போட்டு, பல லட்ச கடனில் வந்து நிற்கிறது.

'கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இந்தக் கடனைச் சீரமைத்துத் தருவார்களா' என்று என்னிடம் ஆலோசனை கேட்டார். 'எத்தனை சதவீத வட்டி போடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துமா இந்தத் தப்பைச் செய்தீர்கள்?' என்று கேட்டபோது தான், அந்தத் தொழில் முதலாளிக்கு வட்டி விகித அளவே தெரியவந்தது. மூர்ச்சை போட்டு விழாத குறை தான்.

இன்னொரு பக்கம் பேராசை. ஒரு வெளிநாட்டு நிறுவனம், 'பிட்காயின்' என்ற மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்து, லாபம் ஈட்டித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காண்பித்தது. எண்ணற்றோர் போய் விழுந்தனர். முதலில் கொஞ்சம் பணம் பார்த்தார்கள். அப்புறம் ஒருநாள் வெப்சைட்டை மூடிக்கொண்டு காணாமல் போனது அந்நிறுவனம். திருடனுக்குத் தேள் கொட்டியது போன்று, வெளியே சொல்லவும் முடியாமல், காவல் துறையிடமும் புகார் அளிக்க முடியாமல், கடும் நஷ்டத்தில் பலர் திண்டாடிக்கொண்டு இருக்கின்றனர்.

பிரபலமான காப்பீட்டு நிறுவனத்தின் முகவர் போல் ஒருவர் அறிமுகமாகி, இல்லாத ஒரு திட்டத்தையும் அதற்கான கமிஷன் தொகையையும் பற்றி என்னிடம் மார்கெட்டிங் செய்யத் தொடங்கினார். சிரித்துக்கொண்டே நான் விபரம் கேட்க, அந்த போன் அப்புறம் அவுட் ஆப் ரீச்க்குப் போய்விட்டது! இரண்டு, மூன்று பங்குகளை வாங்குவதற்கு, எவரை பார்த்தாலும், 'ஓசி' ஆலோசனை கேட்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். அரசாங்க அனுமதியோ, லே அவுட் வரைபடமோ கூட இல்லாத மனைகளில் முதலீடு செய்த அப்பாவிகளை நான் அறிவேன்.

ஒன்றே ஒன்று தான் உண்மை. நம்மைச் சுற்றி ஏராளமானோர் நிதித் துறை அறியாமையில் உள்ளனர். ஆனால், அதை ஒப்புக்கொள்ளும் நேர்மை அவர்களிடம் இல்லை.வளர்ந்து வரும் ஒரு நாட்டில், நிதித் துறை அறிவு போதிய அளவு பெருகவில்லை என்றால், அதனால் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது.


இதனைக் கருத்தில் கொண்டு தான், இந்திய ரிசர்வ் வங்கி, 'நிதித் துறை கல்விக்கான தேசிய வழிமுறைகள் 2020 -- 2025' என்ற கல்வித் திட்டத்தை வகுத்துள்ளது. 47 பக்க திட்ட ஆவணம் அத்தனையும் அற்புதம். ஒன்பது இலக்குகளை அடைவதற்கே, இக்கல்வித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அதில், நிதித் துறை கல்வியை முக்கியமான வாழ்க்கைத் திறனாகப் பயிற்றுவிப்பதே முதன்மை நோக்கம். இதனைச் செய்வதற்கு பள்ளிகள், கல்லுாரிகள் முதற்கொண்டு பல மையங்களில் நிதித் துறை வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும்.


நிதித் துறை சார்ந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கூட, சின்ன வயதில் இருந்தே அறிமுகம் செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது? வங்கியில் பணம் செலுத்துவது எப்படி? ஒரு கடன் விண்ணப்பத்தை எப்படி நிரப்புவது? ஒரு வங்கியில் வரைவோலை எப்படி வாங்குவது என்பது முதற்கொண்டு, வட்டி விகிதம் என்றால் என்ன? எப்படி அதைக் கணக்கிட வேண்டும்?

கடன் என்றால் என்ன? காப்பீடு என்றால் என்ன? பங்குச் சந்தை, பரஸ்பர சகாய நிதி என்றால் என்ன? தங்க முதலீடு, நிலத்தில் முதலீடு, கடன் பத்திரங்களில் முதலீடு ஆகியவையெல்லாம் என்னென்ன என்பதையெல்லாம் பல்வேறு நிலைகளில் படிப் படியாகச் சொல்லிக் கொடுப்பதற்கான முயற்சி இது.சிறுவர்களுக்கு மட்டுமல்ல, வேலைக்குப் போகும் இளைஞர்கள், முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் நிதித் துறை கல்வி அளிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதில் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, நிதித் துறை கல்வியை வழங்க, இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.உலகம் எங்கும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நிதித் துறை கல்வி தொடர்பான ஓர் ஆய்வை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

'ஸ்டாண்டர்டு அண்ட் புவர்' என்ற ரேட்டிங் நிறுவனம், உலக அளவில், நிதித் துறை கல்வி எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் பல சுவாரசியமான விபரங்கள் அடங்கியுள்ளன.உதாரணமாக, உலக அளவில் நிதித் துறை அறிவு நிரம்பப் பெற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, சுவீடன், பிரிட்டன் ஆகியவை முன்னணியில் உள்ளன. அமெரிக்கா அல்ல.


தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அந்த அளவுக்கு இவ்வறிவு இல்லை. பணக்கார நாடுகளில் தான் நிதித் துறை அறிவு பெற்றோர் அதிகம் இருக்கின்றனர். அதாவது, அவர்கள் தங்களது நிதித் துறை அறிவினால் தான் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று புரிந்து கொள்ளலாம்.வயது வாரியாகப் பார்த்தாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் நிதித் துறை கல்வி போதுமான அளவு இல்லை.


நிதித் துறை அறிவுக்கும் கணிதத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. சர்வதேச கணிதத் தேர்வுகளில் முதல்நிலை பெறும் நாடுகளில், நிதித் துறை அறிவுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.அதாவது, நிதித் துறை அறிவைப் பெறுவது பெரிய கம்ப சூத்திரமல்ல. அதற்கு ஆர்வமும் ஈடுபாடும் வேண்டும்.
தாம் எந்த நிலையிலும் ஏமாற்றப்பட்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டும். மேலும், முறையற்ற வழியில் செயல்பட்டால் தான், நிறைய பணம் சேர்க்க முடியும் என்ற தப்பான கருத்தும் பல பேரிடம் இருக்கிறது. இதுவும் தவறு.

உண்மையில், நிதித் துறை மற்றும் பொருளாதாரத் துறையின் அடிப்படைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டாலே போதுமானது. அனைவருக்கும் பணக்காரர்கள் ஆக வேண்டும். நிதி நெருக்கடியே வரக்கூடாது என்பது தான் பெரு விருப்பம். இந்த இரண்டு இலக்குகளை எட்டுவதற்கு அடிப்படைத் தேவை நிதிக் கல்வி தான்.

சின்ன வயதில் இருந்தே, எதிர்காலத் திட்டமிடல் சொல்லித் தரப்பட வேண்டும். நிதியைக் கையாளும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். அப்பா பிள்ளையாகவோ, அம்மா பிள்ளையாகவோ இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. கல்வி, திருமணம், குழந்தைகள், நோய்நொடி, ஓய்வுக் காலம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எதிர்பார்த்து திட்டமிட வேண்டும்.


அந்தந்தச் சமயங்களில் தேவைப்படும் தொகைகள் எவ்வளவு என்பதை கணித்து, அதற்கேற்ப முதலீடுகளையும் காப்பீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.அடிப்படை நிதித் துறை அம்சங்களை சொல்லிக் கொடுக்கப்படுவதோடு, நிதி சார்ந்த உளவியல் அம்சங்களிலும் இந்தக் கல்வித் திட்டம் கவனம் செலுத்தவேண்டும்.

முக்கியமாக குறுக்கு வழியில் பணம் சேர்க்கும் எண்ணத்தை விட்டுவிட்டாலே போதும். நேர்மையான வழியிலேயே வாழ்க்கையின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். என்ன ஒன்று, ஒருசில விஷயங்களை அடைவதற்கு கொஞ்சம் நீண்ட காலம் ஆகலாம். இதற்கு தான் உளவியலில் இரண்டு கருத்துகள் சொல்லப்படும். உடனடி மனநிறைவு, தாமதமான மனநிறைவு என்று இவற்றுக்கு பெயர்.


முறையான திட்டமிடல் இருக்குமேயானால், தாமதமாகவேணும் தன்னிறைவை அடைந்து விட முடியும். உதாரணமாக, டில்லி போக வேண்டும் என்றால், ஒருவருக்கு ரயிலில், 33 மணிநேரம் ஆகலாம், இன்னொருவருக்கு விமானத்தில், 3 மணிநேரம் ஆகலாம். இருவரும் போய் சேருவது டில்லி தான்.இன்னொரு கருத்து, ஒப்பிடல் கூடாது என்பது. நாம் எந்நேரமும் நமக்குக் கீழே உள்ளவரோடு அல்ல, மேலே உள்ளவரோடு மட்டுமே ஒப்பிட்டுக்கொண்டு வெந்து வெந்து சாகிறோம்.


மேலும், இந்த நாடு நமது சொத்து, இதன் வளங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொது, இவை ஒவ்வொன்றும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும். அதாவது, இயற்கையைச் சுரண்டும் மனப்பாங்கு ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.


நிதித் துறை கல்வி என்பது ஒரு மன ஆரோக்கியம். கைக்குள் அடங்கியிருக்கும் கட்டுப்பாடு. தன்னிறைவு. தறிகெட்டு ஓடும் குதிரையை இழுத்துப் பிடிக்கும் லகான். அதில் முறையான பயிற்சி இருந்தால் தான், எதிர்காலம் என்னும் பந்தயத்தில் சீரான வேகத்தில் ஓடி, நிலையான இலக்குகளை எட்ட முடியும். இந்தத் திசையில், மக்களுக்கு பயிற்சி கொடுக்க முன் வந்திருக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு, தாராளமாக ஒரு 'ஓ' போடலாம்!
ஆர்.வெங்கடேஷ்pattamvenkatesh@gmail.com9841053881

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)