பதிவு செய்த நாள்
24 ஆக2020
00:33

வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பால், கூடுதலாக சேமிக்க வாய்ப்புள்ள தொகையை சரியான முறையில் கையாள்வதன் மூலம் அதிக பலன் பெறலாம். கொரோனா சூழல் எண்ணற்ற சோதனைகளை ஏற்படுத்தி, பொருளாதார நோக்கில் நெருக்கடியை உண்டாக்கியிருந்தாலும், வழக்கமான செலவுகளை குறைப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வீட்டிலேயே இருந்து பணியாற்றும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு, போக்குவரத்து, வெளியே சாப்பிடுவது உள்ளிட்ட செலவுகளுக்கான தொகையை மிச்சம் செய்ய முடிகிறது.
மேலும், அத்தியாவசிய செலவுகள் எவை, தவிர்க்க வாய்ப்புள்ள ஆடம்பர செலவுகள் எவை என்ற புரிதலையும், கொரோனாவால் நாம் எதிர்கொண்டு வரும் புதிய இயல்பு நிலை உணர்த்தியுள்ளது. இந்த புரிதல் மட்டும் போதாது, வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பால் கூடுதலாக சேமிக்க வாய்ப்புள்ள தொகையை சரியாக பயன்படுத்திக் கொள்வதும் அவசியம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
கூடுதல் நிதி
கொரோனா சூழலில், ஒவ்வொருவரும் கைவசம் உள்ள அவசர கால நிதியை அதிகமாக்கி கொள்ள வேண்டும் என, நிதி வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக, ஆறு மாத அத்தியாவசிய செலவுகளுக்கான தொகை அவசர கால நிதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தற்போதைய நிச்சயமற்ற சூழலில் இந்த தொகையை, 12 மாதங்களுக்கான தொகையாக அதிகரித்துக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக ஒற்றை வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இது மிகவும் அவசியமாகும்.
அவசர கால நிதியின் ஒரு பகுதியை வைப்பு நிதியாகவும், எஞ்சிய பகுதியை கடன்சார் நிதியிலும் சேமித்து வைக்கலாம். ‘லிக்விட் பண்ட்’ போன்ற வாய்ப்புகளையும் பரிசீலிக்கலாம். அவசர கால நிதியை வலுவாக்கி கொண்டவுடன், கடன்களில் கவனம் செலுத்துவது நல்லது. கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன்கள் இருந்தால், கையில் உள்ள கூடுதல் தொகை மூலம் அவற்றை அடைத்து விடலாம். வீட்டுக்கடன் உள்ளவர்கள், வாய்ப்பிருந்தால் அசலில் ஒரு பகுதியை முன்னதாக செலுத்தலாம்.
கடன் சுமை குறைவது மன நிம்மதியை அளிக்கும் என்பதோடு, அதன் மூலம் மிச்சமாகும் வட்டித்தொகை சேமிப்பாக மாறும். கடன்களை அடைத்து விடுவது நிதி நிலையையும் வலுவாக்கும்.மாதந்தோறும் கூடுதலாக சேமிக்கும் தொகைக்கு உடனடியாக எந்த தேவையும் இல்லை என்றால், அவற்றை நீண்ட கால இலக்குகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஓய்வு கால நிதி போன்வற்றுக்கான முதலீட்டை அதிகமாக்கலாம்.
முக்கிய இலக்குகள்
சுற்றுலா பயண திட்டங்களுக்கு என ஒதுக்கி வைத்த தொகையையும் இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். பணியில் உள்ளவர்கள், கூடுதல் திறனை அளிக்கும் பயிற்சி திட்டங்களிலும் சேர்ந்து தங்கள் தகுதியை மேலும் அதிகமாக்கி கொள்ளலாம். கூடுதல் சேமிப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் செயல்படும் அதே நேரத்தில், வழக்கமான நிலை திரும்பும் போது இதே அளவு சேமிக்க வாய்ப்பிருக்காது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
எனவே, ‘மியூச்சுவல் பண்ட்’களில் எஸ்,ஐ.பி., மூலமான சீரான முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறவர்கள், வருங்காலத்திலும் தொடரக்கூடிய தொகையாக அதை அமைத்துக் கொள்ள வேண்டும். அதே போல வரி சேமிப்பு அம்சத்தையும் கவனிக்க வேண்டும். வீட்டில் இருந்து பணியாற்றும் சூழலில், குறிப்பிட்ட சில பிடித்தங்கள் பொருந்தாமல் போகலாம் என்பதால், வரி சேமிப்பு நோக்கிலும் முதலீடு அமைவது நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|