பதிவு செய்த நாள்
25 ஆக2020
13:35

கொரோனா பாதிப்பால், உலகெங்கும் உள்ள தொழில் நிறுவனங்களிடம் பெரிய தடுமாற்றம் இருக்கிறது. கொரோனா காலத்திலும், அதற்கு பிறகும், மக்களின் தேவை மாறி உள்ளது. அது என்ன?. இனி, எதை வாங்குவார்கள்; எதை புறக்கணிப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கப் போகிறது என்பதை, வர்த்தக உலகத்தால் கணிக்க முடியவில்லை.
அதை முன்னிட்டே, நிறுவனங்களின் வளர்ச்சியும், விரிவாக்கமும் இருக்கப் போகிறது. ‘புதிய உலகத்தை’ புரிந்துகொள்ள முடியாமல் தான், புதிய பொருள் அறிமுகம், விரிவாக்கம் போன்றவற்றை, பிரபல தொழில் நிறுவனங்கள் கூட தள்ளிப்போட்டுள்ளன. தொழிலில் நஷ்டமில்லாமல் தப்பிக்க, கடன் என்ற பாதாளத்தில் விழாமல் இருக்க, கார்பரேட் நிறுவனங்களுக்கு பெரிய ஆலோசகர்கள் இருப்பார்கள். ஆனால், சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.,) நிறுவனங்களுக்கு, அனுபவம் தான் பாடம்.
கொரோனா காலத்தில், உற்பத்தியின் அளவு என்ன? மக்களின் புதிய தேவையை நம்மால் பூர்த்தி செய்ய இயலுமா? போன்றவற்றை, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் ஆழ்ந்து சிந்தித்து, அதற்கேற்ப நிதி தேவைகளில் முடிவெடுக்க வேண்டும்.
தடை தகர்க்கிறார்கள்
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், உற்பத்தி, விநியோகம், விற்பனை, கலெக் ஷன் என்ற வட்டத்துக்குள் இயங்கி வெற்றி காண்கின்றன. கொரோனா பரவல் சூழ்நிலையில், எந்த நிறுவனத்துக்கும் தடையற்ற வர்த்தகம் கிடைக்கவில்லை. வாடிக்கையாளர் கடை தேடி வராவிட்டால் என்ன? வீட்டில் இருந்தே வீடியோ காலில் பேசி, ஆடைகளை தேர்வு செய்யும் வழியை கண்டறிந்திருக்கிறது, ஒரு பிரபல ஜவுளி நிறுவனம். இப்படி பலர், வியாபார வியூகங்களை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உற்பத்தியாகும் இடத்தில் இருந்து, நுகர்வோருக்கு தொய்வில்லாமல் பொருட்கள் கொண்டு செல்லும், ‘விநியோக சங்கிலி’ என்று சொல்லப்படும் ‘லாஜிஸ்டிக்ஸ்’ தான் தொழில் வெற்றியின் முக்கிய அம்சம். இன்றைய சூழ்நிலையில், மாநிலங்களுக்குள் ஏன், மாவட்டங்களுக்குள், ‘இ-–பாஸ்’ என்கிற புதிய நடைமுறையை கொரோனா தந்துவிட்டது.
நிதி திரட்டுவதில் கவனம்
அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் தவிர, மற்ற பொருட்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு செல்லக் கூட, தற்போது, ‘இ–பாஸ்’ பெற வேண்டிய சூழல் இருக்கிறது. அது, தொழில் நிறுவனங்களுக்கு உகந்தது அல்ல. இதனால், நான்கு மாதங்களாக, தொழில் நிறுவனங்களுக்கு, தடையற்ற வர்த்தகம் கிடைக்கவில்லை.
தொழிலின் ‘விநியோக சங்கிலி’ பாதிக்கப்படும் போது, அந்த நிறுவனத்தின் இயல்பான இயக்கத்தையும் பாதிக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், மக்களின் புதிய தேவைகள் என்ன?, ‘விநியோக சங்கிலி’ இயல்பாக உள்ளதா என்பதை உன்னிப்பாக கவனிக்காமல், தொழில் நிறுவனங்கள், மீண்டும் பழைய உற்பத்தி நிலை இருக்கும் என கருதி, அதற்கான நிதி திரட்டுவதில் ஈடுபடக்கூடாது.
தொழில் முடங்கும்
தேவையை கருத்தில் கொண்டே உற்பத்தி திட்டமிட வேண்டும். அப்படி உற்பத்தியாகும் பொருட்களை, நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் தடையற்ற வர்த்தக சூழல் இருக்கிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் செலவிடப்படும் நிதி, ஒன்று ‘ஸ்டாக்’ ஆக நிறுவனத்திலேயே தங்கிவிடும் அல்லது வாராக்கடனாக நிலுவையில் நிற்கும். இரண்டுமே தொழிலை முடக்கிப்போடும்.
இந்த விஷயத்தில் எம்.எஸ்.எம்.இ., தொழில் அமைப்புகள் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், நடைமுறை மூலதனம் திரட்டுவதற்கு பெரும்பாலும், அவை வங்கி கடன்களை நம்பி தான் தொழில் நடத்துகின்றன. உற்பத்தி, சப்ளைக்கான தேவையை அறியாமல், ‘வங்கிகள் கடன் தருகிறதே…’ என்று கடன் வாங்கினால், பின், வட்டியும், அசலும் நாம்தான் செலுத்த வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தடையற்ற வர்த்தகம் அமையும் போது, வாங்கும் கடன், தொழிலில் புழங்கி, லாபமாக மாறும். மற்ற நேரங்களில், கடன் ஒரு சுமை.
ரூ. 3.5 லட்சம் கோடி
கொரோனா கால இடர்களில் இருந்து, இந்திய பொருளாதாரத்தை மீட்க, ‘சுயசார்பு பாரதம்’ திட்டத்துக்கு, ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கி, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, ரூ.3 லட்சம் கோடி கடனாக வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, கடந்த, பிப்., 28ல், ஒரு எம்.எஸ்.எம்.இ., நிறுவனத்துக்கு, வங்கியில் என்ன கடன் இருப்பு நிலுவை இருந்ததோ, அதில், 20 சதவீதம் அளவுக்கு, நான்கு ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில், கொரோனா கால கடனாக வழங்க, ரிசர்வ் வங்கி வாயிலாக, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அக்., 31ம் தேதி வரை, இவ்வகை கடன்களை, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் வங்கியில் வாங்கிக் கொள்ளலாம்.
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, ரூ.3 லட்சம் கோடி கடனை உடனடியாக, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் உடனடியாக பயன்படுத்துவார்கள் என்று, பல தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், கள நிலவரம், வேறு மாதிரி உள்ளது. இதுவரை, ரூ.1.80 லட்சம் கோடி அளவை விட குறைவாகத்தான் கடன் ஒப்புதல் பெற்றிருக்கின்றனர். கடனை உபயோகப்படுத்தியது, இதில் 70 சதவீதம் கூட இல்லை.
இன்றைய சூழ்நிலையில், கடந்தாண்டு கிடைத்த வியாபாரம் கூட தற்போது இல்லாத பட்சத்தில், அவசியமின்றி கடன் வாங்கினால், அதற்கான வட்டியும், அசலும் பெரும் பாரமாகி விடும். தொழில் சுமையுடன், கடன் சுமையும் ஏறிவிடும் என்பதை, பல எம்.எஸ்.எம்.இ.,க்கள் உணர்ந்துள்ளனர்.
உதாரணமாக, ஆண்டு விற்பனை, ரூ. 15 கோடி கொண்ட ஒரு சிறுதொழில் நிறுவனத்திற்கு நடைமுறை மூலதனக் கடனாக, சுமாராக ரூ.3 கோடி பெற தகுதி உண்டு. தற்போது அதில், மேலும் ரூ.60 லட்சம் கூடுதலாக கடன் கிடைப்பதற்கு, மத்திய அரசின், ‘எமர்ஜன்சி லைன் ஆப் கிரடிட்’ திட்டம் வழிவகுக்கிறது. அதன்படி, அந்த நிறுவனம் கடன் பெற்றிருந்தால், அதன் கடன் ரூ.3.60 கோடி ஆகிறது.
கொரோனா தாக்கம் காரணமாக, அடுத்த ஆண்டு, ரூ.10 கோடி தான் வியாபாரம் ஆகிறது என்று வைத்து கொண்டால், அதன் நடைமுறை மூலதனக்கடன் தகுதி, ரூ.2 கோடியாக குறைந்துவிடும். அப்போது, ரூ.3.60 கோடியாக இருக்கும் கடன், ஒன்று ஸ்டாக் ஆகவோ அல்லது நிலுவை கடனாகவே தொழிலின் கழுத்தை நெரிக்கும். எனவே, கடன் வாங்குவதை மிகச்சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
புதிய வாழ்க்கை
2020ம் ஆண்டில், ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ, ‘உயிர் வாழ்தலே’ வெற்றி தான் என்று பல தரப்பிலும் கருத்து நிலவுகிறது. உறவினர்கள் அதிகம் கூடும் குடும்ப விழாக்கள், மிகப் பிரமாண்டமான அரசியல், ஆன்மிக, கலை, கலாச்சார நிகழ்வுகள், கூட்டம் வழியும் தியேட்டர்கள் போன்றவையெல்லாம், இனி எப்போது சாத்தியமாகும் என தெரியவில்லை. இயல்பு வாழ்க்கை இல்லாவிட்டால் என்ன?, மனித சமூகம், புதியதொரு வாழ்க்கை முறையை தகவமைத்து கொள்ளும். அது என்னவாக இருக்கும் என்பது தான், தொழில் அமைப்புகள் விடைதேடும் சூட்சுமம்.
– தொழில் சுகம் தொடரும்...
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
இமெயில்: karthi@gkmtax.com
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|