பதிவு செய்த நாள்
27 ஆக2020
23:59

மும்பை:‘‘வங்கிகள் கடன் வழங்குவதில் மிகுந்த தயக்கம் காட்டினால், அது அவற்றின் சுய தோல்வியில் தான் முடியும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
காணொளி வாயிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘‘பாதிப்புகளை முன் கூட்டியே உணர்வதன் மூலம் மோசடிகளை தவிர்க்க முடியும்,’’ என்றும் தெரிவித்துள்ளார்.
விரும்பத்தக்கதல்ல
மேலும், வங்கிகள் அமைப்பு தொடர்ந்து உறுதியானதாகவும் நிலையானதாகவும் இருப்பதாகவும்; ஆனால், கொரோனா பாதிப்புகள், வங்கி மூலதன நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.அண்மையில், ரிசர்வ் வங்கி, தன்னுடைய ஆண்டறிக்கையில், கடந்த நிதியாண்டில், வங்கி மோசடிகள் இரு மடங்கு அதிகரித்து, 1.85 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது:பல்வேறு வணிகங்களில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் வகையில், வங்கிகளின் இடர் மேலாண்மை அமைப்புகள் அதி நவீனமானதாக இருக்க வேண்டும். மேலும், வெளிப்புற சூழல்களில் ஏற்படும் மாற்றங்களுடன் ஒத்திசைந்து, வரக்கூடிய அபாயங்களை முன்கூட்டியே உணர்வதாக இருக்க வேண்டும்.
இடர் மேலாண்மை அமைப்பில் கவலைப்படக்கூடிய ஒரு பகுதி, இணையதள மோசடியை நிர்வகிக்க இயலாத நிலை. கடன்களுக்கு அனுமதி வழங்கும்போது அல்லது கடன் வழங்கிய பிறகு ஆகிய இரண்டு காலகட்டத்திலும் வங்கிகளின் இடர் மேலாண்மை திறன் குறைவே, பல மோசடிகள் நடைபெற காரணமாக அமைந்துள்ளது.வங்கிகள் கடன் வழங்குவதில் அதிக தயக்கம் காட்டினால், அது அவற்றின் வருமானத்தையும் பாதிக்கும்.
தீவிர தயக்கம் நிச்சயமாக விரும்பத்தக்கதல்ல.நம்பிக்கைநிர்வாகம், இடர் மேலாண்மை, முடிவெடுப்பதில் தரம் ஆகியவற்றின் மூலம், வங்கிகள் தங்கள் பின்னடைவை தடுத்துக் கொள்ள இயலும். தற்போதைய தொற்று நோய் பரவல், வங்கிகளின் வரவு செலவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இது அவற்றின் மூலதன பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இந்நிலையில், வங்கிகள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பது தான் மிக முக்கியமானது.மூலதனத்தை முயன்று திரட்டுவதின் மூலம், கடன் வழங்குவதை உறுதி செய்வதோடு, முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்க முடியும்.
வாடிக்கையாளர்களுக்கு கடன் தவணையை செலுத்துவதில் வழங்கப்பட்டிருக்கும் அவகாசம், ஒரு தற்காலிக தீர்வு தான். கடன் மறுசீரமைப்புகள் தான் கடன் வாங்கியவர்களுக்கு நீடித்த நிவாரணமாக அமைய முடியும்.வங்கிகள் முழு சுயாட்சியுடன், தொழில் ரீதியாக இயங்க வேண்டும்.இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.ரூபாய் மதிப்பு அதிகரிப்புகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க தேவையான திட்டங்கள் ரிசர்வ் வங்கியிடம் இன்னும் இருப்பதாக, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதையடுத்து, நேற்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 48 காசுகள் அதிகரித்து, 73.82 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|