விவசாய வளர்ச்சிக்கு உதவும், ‘ஸ்டார்ட் அப்’விவசாய வளர்ச்சிக்கு உதவும், ‘ஸ்டார்ட் அப்’ ...  பெற்றோரின் முதலீடு ஆலோசனை பெற்றோரின் முதலீடு ஆலோசனை ...
கைகள் நீண்டால்தான், மக்களுக்கு கொண்டாட்டம் !
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
22:36

சரக்கு மற்றும் சேவை வரியில், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு, மத்திய நிதி அமைச்சகம், இரண்டு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.


இதனால் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலை தான் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.


இது எந்தத் திசையில் செல்லும்?

கடந்த வாரம், நடைபெற்ற, 41வது சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் முக்கியமானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த, 2019 அக்டோபர் முதல், ஜி.எஸ்.டி., வரியில் மாநிலங்களுக்குக் கிடைக்கவேண்டிய, இழப்பீட்டுத் தொகையை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.


இந்த, 2020 -– 21 நிதிஆண்டிலோ, ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலக்கட்டத்துக்கு இன்னும் மாநிலங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.இழப்பீடுஇந்த இழப்பீட்டை எப்படி வழங்குவது என்ற ஒற்றை விஷயத்தை முடிவு செய்வதற்காகவே, 41வது ஜி.எஸ்.டி., கவுன்சில் சந்திப்பு நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு, மத்திய நிதி அமைச்சகம் இரண்டு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

முதலில், ஜி.எஸ்.டி., வருவாய் கணக்கைப் புரிந்துகொண்டால் தான், இந்த இரண்டு வழிமுறைகளையும் புரிந்துகொள்ள முடியும். அதாவது, இந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலக்கட்டத்தில், திரட்டப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி., மேல்வரி தொகுப்பு நிதி, 21,747 கோடி ரூபாய். இந்த நிதியாண்டு முழுமைக்கும் திரட்டப்படக்கூடிய, மொத்த ஜி.எஸ்.டி., மேல்வரித் தொகை 65,000 கோடி ரூபாயாகத் தான் இருக்கும் என்று நிதி அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.


ஆனால், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கணக்கீட்டின் படி, தேவைப்படும் மேல்வரி தொகுப்பு நிதியோ, 1.62 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆக, மேல்வரித் தொகுப்பு நிதியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, 97 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.இந்த கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த நிதியாண்டில், அனைத்து மாநிலங்களுக்கும் தேவைப்படும் நிதி, 3 லட்சம் கோடியாக இருக்கும்.


ஜி.எஸ்.டி., மேல்வரி தொகுப்பு நிதியில் இருந்து கிடைக்கக்கூடிய, 65 ஆயிரம் கோடி ரூபாயைக் கழித்துவிட்டால், மிச்சமிருப்பது, 2.35 லட்சம் கோடி ரூபாய். நிதி அமைச்சகம், இங்கே தான் தன் பரிந்துரையை வழங்கியுள்ளது. ஒன்று, இந்திய ரிசர்வ் வங்கியோடு இணைந்து, இந்த, 97 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளப்படும். அல்லது மாநிலங்கள் விரும்புமேயானால், மொத்த பற்றாக்குறை தொகையான, 2.35 லட்சம் கோடி ரூபாயையும் சந்தையில் இருந்து கடனாகப் பெற்றுத் தர, மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் மாநிலங்களுக்கு உதவி செய்யும்.


இதற்கான நடைமுறை விவரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும். அதனையொட்டி, மாநிலங்கள் தங்கள் முடிவை ஏழு நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் என்று நிதி அமைச்சர், ஜி.எஸ்.டி., கூட்டத்துக்குப் பின்னர் தெரிவித்தார்.இரண்டு, மூன்று மாநில அமைச்சர்களைத் தவிர்த்து, கிட்டத்தட்ட, 14 மாநில நிதி அமைச்சர்கள், மத்திய அரசின் இந்த இரண்டு வழிமுறைகளையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் அர்த்தமற்றவை அல்ல.

ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட போது, மாநிலங்கள் சந்திக்கும் இழப்பீட்டை, மத்திய அரசு, முதல், 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டதோடு, ஜி.எஸ்.டி., சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இருந்து பின்வாங்குவது போலல்லவா இருக்கிறது தற்போதைய அணுகுமுறை என்று கேட்டார், டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா.


வலியுறுத்தல்

மேலும், டில்லி என்பது யூனியன் பிரதேசம், அதற்கு முழு மாநில அந்தஸ்து இல்லை. எப்படி நாங்கள் கடன் வாங்க முடியும்? எங்களுக்கு அதிகாரம் இல்லையே என்றும் தெரிவித்தார் சிசோடியா. புதுச்சேரியும் இதே கருத்தை வழிமொழிந்தது.தமிழ்நாட்டில் இருந்து பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘மாநில நிதி ஆதாரங்களை விட்டுக் கொடுக்க முடியாது’ என்றே வலியுறுத்தினார். மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை கணக்குகள் அவரை அப்படிப் பேச வைத்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அதாவது, 2020 -– - 21 இல் மட்டும் நிலுவைத் தொகை, 11 ஆயிரத்து, 459. 37 கோடி ரூபாய். இதற்கு முன்பு 2017 – -18 நிதியாண்டில் இருந்து, 2019 – -20 வரை, வர வேண்டிய நிலுவைத் தொகைகளைக் கூட்டினால், 4,872.57 கோடி ரூபாய் ஆகும்.மேற்கு வங்க நிதி அமைச்சர், அமித் மித்ரா ஒரு பாட்டம் அழுதே தீர்த்துவிட்டார்.


மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் சம்பளம் வழங்கவே நிதி நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் விதமாக மத்திய அரசு நடந்துகொள்ளலாமா என்று தம் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.இன்று வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசாங்கமாகிய நீங்கள் தானே, தேவைப்படும் நிதியாதாரத்தைக் கடன் வாங்கி, உரிய முறையில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்? அதற்கு மாறாக, நீங்கள் மாநிலங்கள் கடன் வாங்குவதற்கு உதவி செய்கிறேன் என்பது என்ன நியாயம்?


எங்கள் தொண்டைக்குழிக்குள் இந்த இரண்டு வழிமுறைகளை நீங்கள் திணிக்கிறீர்கள். நிகழ்கால வாழ்க்கைக்காக, எதிர்காலத்தையே அடகுவைக்கச் சொல்கிறீர்கள் என்று பொறிந்து தள்ளினார், பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல்.மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கும் மத்திய அரசே கடன் வாங்குவதற்கு என்ன வேறுபாடு? ஏன் மத்திய அரசே கடன் வாங்கட்டும் என்று மாநில அரசுகள் கோருகின்றன?

மாநிலங்களுக்கான நிதி வருவாய் என்பது மிகவும் சுருக்கமானது. ஜி.எஸ்.டி., வந்த பின்னர், மது, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியும், பத்திரப் பதிவின் மூலம் கிடைக்கும் வருவாயையும் தவிர வேறு வருவாய் இல்லை. இந்நிலையில், மாநிலங்களைக் கடன் வாங்கச் சொன்னால், அவர்கள் வாங்கும் கடனுக்குக் கூடுதல் வட்டி வழங்க வேண்டியிருக்கும். அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும், கடன் சுமையின் அளவு உயர்ந்துகொண்டே போகும். ஆனால், மத்திய அரசின் நிலை இதுவல்ல. அவர்களால், குறைந்த வட்டிக்கே கடன் வாங்க முடியும். தேவைப்பட்டால் கூடுதலாக நோட்டு அடித்து, இறக்கி, நிதி நிலைமையைச் சமாளிக்கவும் முடியும். இது மாநிலங்களின் வாதம்.

மத்திய அரசு தரப்பில் தென்படும் தயக்கத்துக்கு வேறு விளக்கம் தருகின்றனர், ஒருசில பொருளாதார நிபுணர்கள். அதாவது, மத்திய அரசு கடன் வாங்குமேயானால், கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் (டெப்ட் டு ஜி.டி.பி., ரேஷியோ) உயர்ந்துவிடும். கடன் சுமைநிதிப் பற்றாக்குறையின் அளவும் உயர்ந்துவிடும். இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவர் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முன்னரே இதுபோன்று, பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்கும் பழக்கம் இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.


உதாரணமாக, தேசிய உணவுக் கழகம், நபார்டு, ரூரல் எலக்டிரிபிகேஷன் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்றவை கடன் வாங்கியுள்ளன. அதேபோல், ஜி.எஸ்.டி., இழப்பீட்டை ஈடுசெய்யவும் மாநிலங்கள் கடன் வாங்கலாம். அது எந்த வகையிலும் உடனடியாக மத்திய அரசின் கடன் சுமையை உயர்த்திவிடாது என்ற வாதம் வைக்கப்படுகிறது.

இரண்டு பக்கமும் நியாயம் இருப்பது போல் தான் தென்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது நிதி நிலைமைகளின் அடிப்படையிலேயே யோசிக்கின்றனர். இதில் ஏதேனும் ஒரு புள்ளியில் அனைவரும் சந்திக்க வேண்டும். மேலும், இரண்டு வழிமுறைகளில், ஏதேனும் ஒன்றை அனைத்து மாநில அரசுகளும் ஒருமித்து ஒப்புக்கொண்டாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காகத் தானோ என்னவோ, நாளை மத்திய நிதித் துறைச் செயலர், அனைத்து மாநில நிதி அமைச்சர்களையும் மீண்டும் காணொளி வாயிலாகச் சந்திக்கப் போகிறார். அவர், என்ன கருத்துக்களை முன்வைக்கப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.

ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டபோது, இப்படிப்பட்ட மோசமான கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதற்கு, ‘நீ தான் பொறுப்பு’ என்பதோ, ‘நான் பொறுப்பில்லை’ என்று விலகுவதோ அர்த்தமற்ற செயல்கள். நிதி அமைச்சர் தெரிவித்தது போன்று, கொரோனா, ‘கடவுளின் செயல்’ தான். ஆனால், அதை மனிதர்கள் தானே எதிர்கொண்டாக வேண்டும்?


அப்படி இருக்கும் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு விடாமல், சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம், தீர்வு காணப்பட வேண்டும். உதாரணமாக, மேல்வரித் தொகுப்பு நிதியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையான, 97 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசே கடன் வாங்கி, மாநிலங்களுக்குக் கொடுத்து, தற்போதைய சிக்கலான சூழலைச் சந்திக்கலாம். அடுத்த கட்டமாக, 2.34 லட்சம் கோடி ரூபாயைத் திரட்டும் பொருட்டு மாநிலங்கள் கடன் வாங்குவதற்கு உதவலாம். இதன்மூலம், மாநிலங்களின் உடனடி நிதிப் பிரச்னைகள் தீர்க்கப்படலாம்.


இந்நிலையில், மத்திய அரசே முன்நின்று கடன் வாங்குவதே நிர்வாக ரீதியில் எளிதாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கித் தரப்பு கருதுவதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது .மத்திய, மாநில அரசுகள் முட்டிக்கொண்டு நிற்கும் சூழல் வந்தால், அபாயம் மக்களுக்குத் தான். வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, மாநில அரசுகள், அத்தியாவசிய சம்பளத் தேவைகளுக்கு மடைமாற்றி விடலாம்.


அரசாங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் தான் இன்றைய கொரோனா காலத்தில் செய்யப்படும் ஒரே முதலீடு. அதில் சுணக்கம் ஏற்படுமேயானால், பொருளாதார மீட்சி ஸ்தம்பித்துவிடும். கிடைத்துவரும் சொற்ப வேலைவாய்ப்புகளும் துவண்டு போய்விடும். ஏற்கனவே நிதிப் பற்றாக்குறை இலக்குகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது ஞாபகம் இருக்கலாம்.


இன்றைய தேதியில், கொரோனாவில் இருந்து மக்களை மீட்பது மட்டுமே முதன்மைப் பணி. அதனால், ரேட்டிங் ஏஜென்சிகளுக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கும் அச்சப்பட்டுக் கொண்டு, வாளாவிருந்துவிட வேண்டாம் என்று மத்திய அரசுக்குப் பல முன்னணி பொருளாதார அறிஞர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கின்றனர்.உண்மையில், இரண்டு கைகளும் தட்டினால் தான் ஓசை எழும்.


இன்று மத்திய, மாநில அரசுகள் கைக்கோத்துக்கொண்டு கொரோனாவில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதில் ஈடுபட்டால் தான் வெற்றி சாத்தியம். ஒருவர் கைக்கொடுக்க மறுத்தாலும், தயங்கினாலும், பாதிப்பு மக்களுக்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.கைகள் நீளட்டும், மக்கள் பிழைக்கட்டும்!

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com

9841053881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)