அமெரிக்க டாலர்  ஆதிக்கம் நீடிக்குமாஅமெரிக்க டாலர் ஆதிக்கம் நீடிக்குமா ... டிஜிட்டல் கோல்டு’  முதலீடு  செய்வது எப்படி? டிஜிட்டல் கோல்டு’ முதலீடு செய்வது எப்படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கரையேற உதவட்டும் இந்திய ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2020
02:28

வங்கிகள், அபராத வட்டி விதிக்கக்கூடாது என்று கோரும் வழக்கில், கடந்த வாரம் வெளியான இடைக்கால தீர்ப்பு, வாடிக்கையாளர் நெஞ்சில் பாலை வார்த்தது. ஆனால், பிரதான கோரிக்கையின் மீது இன்னும் முடிவு எட்டப்படாமலேயே இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் என்ன செய்யலாம்?

கொரோனா கொள்ளைநோய் பரவத் துவங்கியவுடனேயே, அதன் பாதிப்புகள் இந்திய மக்களைச் சிதைத்துவிடக் கூடாது என்று கரிசனம் காட்டிய இந்திய ரிசர்வ் வங்கிக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். வாடிக்கையாளர்கள் வாங்கிய பல்வேறு கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகையை முதலில், 3 மாதங்கள் செலுத்த வேண்டாம் என்ற சலுகை வழங்கப்பட்டது.


அதன் பின், இந்தச் சலுகை மேலும், 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. ஆகஸ்ட், 2020 உடன் இந்த இ.எம்.ஐ., ஒத்திவைப்பு நிறைவு பெற்றது.இந்த விஷயத்தில் இரண்டு பிரச்னைகள் எழுந்தன. மாதாந்திர தவணை தொகையில் உள்ள வட்டி மட்டும் குட்டி போடத் துவங்கியது. அதாவது, வட்டி மீது அபராத வட்டி போடப்பட்டது. அது மூலதனத்தோடு சேர்க்கப்பட்டு, வாடிக்கை யாளரின் கடன் சுமை மேன்மேலும் பெருகத் துவங்கியது.


90 நாட்கள்

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், இ.எம்.ஐ., ஒத்திவைப்பு என்ற சலுகை வழங்கப்பட்டிருக்கும்போது, எப்படி அபராத வட்டி போடப்படலாம் என்ற கேள்வி எழுந்தது. வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.இந்த வழக்கில் பல்வேறு தரப்பில் இருந்து வாதங்கள் வைக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை, இவ்விஷயத்தில் இடைக்காலத் தீர்ப்பு வெளியானது. அதாவது, ஆகஸ்ட், 31 வரை, வாராக் கடனாக ஆகாத கடன்கள், இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை, வாராக் கடனாக கருதப்படக்கூடாது என்று தீர்ப்பு சொல்கிறது.


உண்மையில், வாடிக்கை யாளர்களின் இன்றைய நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்தத் தீர்ப்பு பெருங்கருணையுடன் கொடுக்கப்பட்டதாகக் கருதலாம்.இதன் அர்த்தம் முக்கியமானது. அதாவது, செப்டம்பர், 1 முதல், மீண்டும் மாதாந்திர கடன் தவணை கட்டப்பட வேண்டும். ஆனால், வாழ்க்கை நிலைமை இன்னும் சீராகவில்லை. பல நிறுவனங்கள் சம்பள வெட்டை அமல்படுத்தியுள்ளன அல்லது வேலை இழந்தவர்களால் புதிய வேலையைப் பெற முடியவில்லை. சுயதொழில் செய்வோர், புதிய வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடுகின்றனர். மாத வருவாயே நிச்சயமற்ற நிலைமை.


இந்நிலையில், அவர்கள் வாங்கிய வீட்டுக் கடனோ, அடமானக் கடனோ, கல்விக் கடனோ, வாகனக் கடனோ, தனிநபர் கடனோ, நகைக் கடனோ, வீட்டு உபயோகப் பொருள் கடனோ, தலைமேல் கத்தி போன்று தொங்கிக்கொண்டிருக்கும். வங்கிகளின் சட்டப்படி, 90 நாட்கள் மாதாந்திர தவணை கட்டப்பட வில்லை எனில், அது வாராக் கடனாக கருதப்படும். அதன் பின், அதை வசூலிக்கும் விதமே மாறிவிடும். சட்ட நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் ஆகியிருக்கும். இந்த அபாய கட்டத்தை எட்டவிடாமல் தடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு.

ஏன் இதை இவ்வளவு துாரம் வலியுறுத்த வேண்டி உள்ளது என்றால், பல தனியார் துறை வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே, மீண்டும் கடன் தவணையை வசூலிப்பதில் மும்முரம் காட்ட ஆரம்பித்து விட்டன. வாடிக்கையாளரது பொருளாதார நிலைமை சீரானதா என்று கூட பார்க்காமல், தங்கள் லாபத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமே இயங்கத் துவங்கியுள்ளன.

இந்த நேரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளுக்கு வைத்துள்ள கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. வரும் செப்டம்பர், 15ம் தேதிக்குள், கடன் மறுசீரமைப்புக்கான திட்டத்தை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர். அதாவது, கடன்களைச் செலுத்துவதில் சிரமப்படக்கூடியவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பு திட்டத்தை வரையறை செய்ய, கே.வி. காமத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர் தமது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிவிட்டார். இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, அந்தப் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், சில்லரை கடன் விஷயத்தில், அந்தந்த வங்கிகளே, கடன் மறுசீரமைப்பைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


முதலில் பொதுத் துறை வங்கிகள் தங்கள் திட்டத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். அதைத் தொடர்ந்தே தனியார் வங்கிகளும், வங்கி யல்லாத நிதி நிறுவனங்களும் பின்தொடரும்.பெரும்பாலும், மாதாந்திர தவணைத் தொகை உயர்த்தப்படாமல், கடனுக் கான கால அவகாசம் மட்டும் மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்பதே வங்கியாளர்கள் கருத்து. மற்றபடி வட்டி விகித குறைப்பு ஆகியவை பேசப்படவில்லை.

உண்மையில், கார்ப்பரேட் கடனுக்கு, கே.வி. காமத் தலைமையில் எப்படி ஒரு குழு அமைக்கப்பட்டதோ, அதேபோன்று, சில்லரை கடன் விஷயத்திலும் ஒரு குழு அமைத்து இருக்க வேண்டும். ஏனெனில், இந்தியாவில் உள்ள ஏழை எளியவர்கள் முதல், மத்தியமர்கள் வரை பலரும் விதவிதமான சில்லரைக் கடன்களை வாங்கி, ஒழுங்காகச் செலுத்தி வருகின்றனர். இந்தப் பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, வீட்டுக் கடனையே எடுத்துக் கொள்ளுங்கள். 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு, முழுத் தொகையையும் யாரும் கடனாக வாங்கியிருக்க மாட்டார்கள். 35 லட்சமோ, 50 லட்சமோ தான் கடன் வாங்கியிருப்பர்.


ரூ.1 கோடி

அதுவும் அது கடன் கொடுக்கப்பட்டபோது இருந்த மதிப்பு. இன்றைக்கு மனை வணிகத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், 70 லட்சம் ரூபாய் வீட்டின் சந்தை மதிப்பு, 1 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கும். இதைப் பார்க்கும்போது, வாடிக்கையாளர் வாங்கிய கடன் தொகை குறைவு, அடமானமாக கொடுத்துள்ள சொத்தின் மதிப்பு மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டு, கடன் மறுசீரமைப்பு செய்யும்போது, மாதாந்திர தவணைத் தொகையைக் கணிசமாகக் குறைக்கலாம் அல்லது வட்டி விகிதம் நன்கு குறைக்கப்படலாம்.


ஏற்கனவே, ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு, வங்கிகள், வட்டி விகிதத்தை நிர்ணயிக்கலாம் என்று தெரிவித்தது, இந்திய ரிசர்வ் வங்கி. அதன்படி, தற்போது ரெப்போ, 4 சதவீதமாக இருக்கிறது. இதிலிருந்து, 1 அல்லது 1.5 சதவீதம் கூடுதலாக நிர்ணயித்து, 5 அல்லது 5.5 சதவீதமாக சில்லரை கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படலாம். இதே போன்றது தான், நகைக் கடன். அடமானமாக வழங்கப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு, இந்த ஆண்டில் மட்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


இதனால் தான், ரிசர்வ் வங்கியே தங்க நகையின் மதிப்பில், 90 சதவீதம் வரை கடன் கொடுக்கலாம் என்று அனுமதி அளித்துஉள்ளது. இதையும் கருத்தில் கொண்டு, ஏற்கனவே பெறப்பட்ட தங்கம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப மாதாந்திர வட்டித் தொகை குறைக்கப் படலாம்.தேய்மானம் இல்லாத தனிநபர் அடமானக் கடன்கள் அனைத்திலும் இந்த மறுமதிப்பீடு என்பது நிச்சயம் சாத்தியம்.


அதனால் கிடைக்கும் பலனை, வாடிக்கையாளர்களுக்கே வழங்குவதன் மூலம், அவர்களை இந்தப் பெருந்தொற்று காலத்தில் காப்பாற்றலாம்.இது நடக்குமா, நடக்காதா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியவரும். வங்கிகள் எவ்வளவு திறந்த மனதோடு இருக்கின்றன, வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொண்டுள்ளன என்பது, செப்டம்பர், 15ம் தேதி தெரிந்துவிடும்.அடிப்படை பிரச்னை அப்படியே தான் இருக்கிறது.


அதாவது, அபராத வட்டி போட வேண்டுமா, கூடாதா என்பது தான் பிரச்னை. வங்கிகள், அபராத வட்டி என்பது தங்கள் உரிமை என்று கருதுகின்றன. வட்டித் தொழில் செய்யும் எங்களிடம் வட்டி போடாதே என்று சொல்வது என்ன நியாயம் என்று கேட்காமல் கேட்கின்றன வங்கிகள். மேலும், இது மக்களுடைய சேமிப்புத் தொகை, அதை எப்படிச் சும்மா வாரிக் கொடுக்க முடியும் என்றும் வாதம் வைக்கின்றன.அரசாங்கமும் முடிவெடுக்கத் தயங்குவது தெரிகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அடியொற்றியே அரசாங்கமும் நடக்கிறது.


ஆனால், ஒரு கட்டத்தில், மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுத் தான் ஆகவேண்டும். பெருமழை, வெள்ளம், பூகம்பம் போன்றதுதான் இந்தக் கொரோனா பெருந்தொற்றும். அவற்றில் வாழ்வாதாரத்தை இழந்தோரை மீட்பதற்கு எப்படி அரசாங்கம் உடனடியாக பணமாகவும், பொருளாகவும் கொடுத்து உதவுகிறதோ, அதே போன்று தான் இங்கேயும் உதவ வேண்டும்.


இங்கே முக்கியம் சாதாரண ஏழை, எளிய, மத்தியமர்கள் தான். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முதல், பெருநிறுவனங்கள் வரையுள்ளவற்றைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். கே.வி. காமத் அந்தக் கவலையை ஏற்றுக் கொள்ளட்டும்.சில்லரைக் கடன்களில், சாதாரணவர்கள் வாங்கிய கடன்களின் மீதான அபராத வட்டியை மட்டும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளட்டும். அதாவது, அபராத வட்டி தள்ளுபடி என்றால், அது வங்கிகளுக்குப் பெருநஷ்டம். அவற்றின் நிதிநிலை அறிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.


அதற்குப் பதில், மொத்த அபராத வட்டித் தொகையை, அரசாங்கமே வங்கிகளுக்கு வழங்கும் என்று சொல்லலாம். காலத்தின் கட்டாயம்இதன் மூலம், வங்கிகளுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதேசமயம், சாதாரணவர்களும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். வேண்டுமென்றால், சாதாரணமானவர்களின் கடன்களிலும் ஒருசில வரையறைகளை உருவாக்கி, குறிப்பிட்ட எல்லை வரை வாங்கப்பட்ட கடன்களுக்கான அபராதத் தொகையைத் தாங்களே ஏற்கிறோம் என்று அரசாங்கம் சொல்லலாம்.


ஏற்கனவே, நம் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் ஒரு கருத்தைத் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு கள் தணிந்து, மீண்டும் பொருளாதாரம் மீண்டெழும் நிலையில், அடுத்த நிதிச் சலுகை திட்டம் அறிவிக்கப்படும் என்றார். அரசாங்கமே, அபராத வட்டியை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் இந்தத் திட்டத்தை, தமது நிதிச் சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் சேர்த்துக் கொள்ளலாம்.அதாவது, கொரோனா பெருஞ்சுழலில், மக்கள் மிக மோசமாக அடித்துச் செல்லப்படுகின்றனர்.


எந்தக் கொழுக்கொம்பையாவது பிடித்துக்கொண்டு, ஒவ்வொருவரும் கரையேறத் துடிக்கின்றனர். மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அத்தகைய உதவிக் கரத்தை நீட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com

98410 53881

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)