தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு ...  'டிக்டாக்'கை வாங்கும் முயற்சி: 'மைக்ரோசாப்ட்'டுக்கு தோல்வி 'டிக்டாக்'கை வாங்கும் முயற்சி: 'மைக்ரோசாப்ட்'டுக்கு தோல்வி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பலன் தருமா கடன் மறுசீரமைப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2020
22:27

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கே.வி.காமத் தலைமையிலான குழு, பெருநிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கான திட்டத்தை, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அளித்துவிட்டது. அதை, ரிசர்வ் வங்கியும் ஏற்று, நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளில் இறங்கியுள்ளது. இதன் பல்வேறு அம்சங்கள் இப்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா கொள்ளை நோயால், பல்வேறு பெருநிறுவனங்கள் விற்பனையோ, வர்த்தகமோ, ஏற்றுமதியோ இல்லாமல் கடந்த ஆறு மாதங்களாக தவித்தன. ஒருபக்கம் வருவாய் இல்லை, மறுபக்கம் அவர்கள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்கள் மலைபோல் உயர்ந்து நின்றன. இந்நிலையில், அந்தக் கடன்களை ஒருமுறை மறுசீரமைப்பதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, பல்வேறு தொழில் துறை அமைப்புகளிடம் இருந்து எழுந்தன.

இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, அரசு, கடன்களை மறுசீரமைக்க ஒத்துக் கொண்டது.எந்தெந்த துறை சார்ந்த நிறுவனங்களின் கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும், அதற்கான அடிப்படை என்ன என்பதை இறுதி செய்வதற்காக, மூத்த வங்கியாளர் கே.வி. காமத் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தன் அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கியது.


கடன் விபரங்கள்

அறிக்கையில் உள்ள தகவல்களும், அதன் பிறகு வெளியாகியுள்ள பல்வேறு விபரங்களும் நம் கவனத்தைக் கவர்கின்றன.கொரோனா கொள்ளை நோயால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ள கடன் அளவு, 15.52 லட்சம் கோடி ரூபாய். அதற்கு முன்பே பல்வேறு காரணங்களால், இந்திய தொழில் துறையினருக்கு ஏற்பட்டுள்ள கடன் பாதிப்பு அளவு, 22.20 லட்சம் கோடி ரூபாய். ஆக மொத்தம், 37.72 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக்கடன்கள், சிக்கலில் இருக்கின்றன.

அதாவது பல்வேறு தொழிலகங்களுக்கு வங்கிகள் கொடுத்துள்ள கடன்களில், 72 சதவீத கடன், பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், மொத்தம், 6 முதல், 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று கணித்துள்ளது, ‘இக்ரா’ என்ற தரநிர்ணய அமைப்பு. இதில், 2.10 லட்சம் கோடி ரூபாய் வரை, தனிநபர்கள் வாங்கியுள்ள சில்லரை கடன்களுக்கான மறுசீரமைப்பு இருக்கும்.

கொரோனாவால் சில்லரை வர்த்தகம், மொத்த வர்த்தகம், சாலைகள், ஜவுளித் துறை ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்க, அதற்கு முன்பிருந்தே, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், மின்சாரம், உருக்கு, மனை வணிகம், கட்டுமானத் துறைஆகியவை சிரமத்துக்கு உள்ளாகியிருந்தன.

கடன் மறுசீரமைப்பில்,26 துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் காமத் குழு தெரிவித்துள்ளது. மேலும், ஐந்து விதமான நிதித் துறை விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு, மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது, இக்குழு. இவையெல்லாம் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி, உத்தரவிட்டுள்ளது.


முந்தைய கடன் மறுசீரமைப்புக்கும், இதற்கும் உள்ள பெரிய வித்தியாசம், இந்தக் காலக்கெடு தான். அதனாலேயே, பல தொழில் துறை, வங்கித் துறை நிபுணர்கள், இவ்வளவு விரைவாக இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகத்தை எழுப்பினர்.காமத் குழு அறிக்கையே குறித்த காலத்தில் வெளியாகியிருப்பது, இந்திய அரசின் முனைப்புக்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

பழைய முயற்சிகள்

ஏற்கனவே செய்யப்பட்ட கடன் மறுசீரமைப்புகள் வெற்றி பெற்றுள்ளனவா என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. பழைய வாராக்கடன்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.1991 முதல் இந்தியாவில், தாராளமயக் கொள்கை அறிமுகமான பிறகு, 1996- – 97ல் உருவான மொத்த வாராக்கடன், 16 சதவீதம்.


பொருளாதார வளர்ச்சி மற்றும் வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை களை தொடர்ந்து, 2007ல், மொத்த வாராக்கடன், 2.6 சதவீதமாகக் குறைந்தது.அடுத்து, 2008 உலகப்பொருளாதார மந்தநிலைக்குப் பின், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம், மீண்டும் வாராக்கடன், 2017 -– 18ல், 11 சதவீதமாக உயர்ந்தது.


இதை அங்கீகரித்து, வங்கிகளின் நிதி நிர்வாகத்தைக் கடுமையாக மேம்படுத்தியதன் மூலம், 2019 – -20ல் இது, 8.5 சதவீதமாகக் குறைந்தது.தற்போது, கொரோனா கொள்ளை நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், வாராக்கடன், 12.5 முதல், 14.7 சதவீதம் வரை உயரலாம் என்று தெரிவிக்கிறது, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை.ஆக, இந்த முறை இன்னொரு கடுமையான முயற்சிக்கு அடிகோலிடுகிறோம்.


கொரோனாவால் வணிகம் பெருகவில்லை. உற்பத்தி உயரவில்லை. வருவாய் மேம்பட வில்லை. இந்நிலையில், மீண்டும்சகஜ நிலைக்கு வரும் வரை, இந்திய தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டிய அவசரம் அரசுக்கு உள்ளது. அதனால், அவர்கள் வாங்கிய கடன்களை உடனடியாக மோசம் போய்விட்டது என்று சொல்லாமல், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தத்தி தவழ்ந்தேனும் இவர்கள் நிமிர்ந்து நிற்பர் என்ற நம்பிக்கை தான்.

இங்கே அவர்களுடைய கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. மாறாக, அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. வட்டி மட்டும் மற்றொரு கடனாக கருதப் படலாம் என்று சொல்லப்படுகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், வலி சற்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.அரசாங்கத்துக்கும் வேறு வழியில்லை. தொழில் துறையால் கடன் கட்ட முடியவில்லை என்று அவற்றை வாராக்கடனாக அறிவித்துவிட்டால், சிரமம் தொழில் முதலாளிகளுக்கு மட்டுமல்ல, வங்கிகளுக்கும் தான்.

அந்த வாராக்கடனை ஈடுசெய்யும் அளவுக்கு, ஈட்டும் வருவாயில் இருந்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து வைக்க வேண்டும். இன்றைய சூழலில், வங்கிகளால் கூடுதல் நிதியை ஒதுக்கி வைக்க முடியாது. மேலும், வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகளிலும் கடுமையான அழுத்தம் ஏற்படுத்தும். இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கே, கடன் மறுசீரமைப்பு முயற்சி.

பலன்கள்

எத்தனை நிறுவனங்கள் இதனால் பலன் பெறும்? ஒரு கணக்கீட்டின் படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 1,000 நிறுவனங்கள், இதனால் பலன் பெறும் என்று தெரிகிறது.‘கிரிசில்’ என்ற ரேட்டிங் நிறுவனம், இன்னொரு எண்ணிக்கையைச் சொல்கிறது. அவர்களால் தர மதிப்பீடு செய்யப்பட்ட, 8,500 நிறுவனங்களில், மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள், கடன் மறுசீரமைப்பு பெறலாம் என்று தெரிவிக்கிறது.

காமத் வகுத்துள்ள வரையறைகள், வங்கியாளர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியை அளித்து உள்ளது. அதேசமயம், பல துறைகளைச் சேர்ந்தவர்கள், இதனால் தங்களுக்குப் பெரிய பலன் இல்லை என்றும் அங்கலாய்க்கின்றனர்.காமத் குழு முன்வைத்துள்ள வரையறைகளுக்குள் தம்மால் வரமுடியாது என்ற ஆதங்கம் உள்ளது.இன்னொரு பக்கம், வங்கித் துறை ஆய்வாளர்களால், வேறு சில பிரச்னைகள் முன்வைக்கப்படுகின்றன.


அதாவது, ஒவ்வொரு வங்கியும் தமது நடைமுறை லாபத்தில் – ஆப்பரேட்டிங் ப்ராபிட் – ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, வாராக்கடன்களை எதிர்பார்த்து ஒதுக்கிவைக்கின்றன. இதற்கு, ‘புரோவிஷன் கவரேஜ் ரேஷியோ’ – பி.சி.ஆர்., – என்று பெயர். 2018ல், 48 சதவீதமாக இருந்த இந்த விகிதம், தற்போது, 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒருசில வங்கிகள், 81 சதவீதம் அளவுக்குக் கூட, கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்து வைத்துள்ளன.


நாளை, கடன் மறுசீரமைப்பெல்லாம் முடிந்த பின், வங்கிகள் வேறுவிதமாக பார்க்கப்படும். ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் உள்ளன என்ற அளவு கவனிக்கப்படும். அது, வங்கிகளின் பலவீனமாகவே பார்க்கப்படும். இதனால் இவர்கள் இப்போதே உஷாராக இருக்க பார்ப்பர்.

அதாவது, தங்களுடைய மொத்த கடன் பட்டியலில், மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் அளவு, 5 சதவீத அளவுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள முயற்சிப்பர் என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்னொரு அச்சமும் நிலவுகிறது. வாராக்கடனாக பதிவு செய்யவேண்டிய ஒருசில கணக்குகளை, இந்த மறுசீரமைப்புத் திட்டத்தை முன்வைத்து, மறைத்துவிடலாமோ என்ற கருத்து பேசப்படுகிறது.

தேவை பெருகுமா?

இந்த மாதிரியான சாமர்த்தியங்கள் எல்லாம் நெடுங்காலம் செல்லுபடியாகாது. ஏனெனில், அடிப்படையில் கடன் மறுசீரமைப்பு என்பது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தாற்காலிக தீர்வு மட்டுமே. அதாவது, அதற்குள் விற்பனை கூடிவிடும், லாபம் பெருகும், அதன்மூலம் பொருளாதாரம் தலைநிமிர்ந்து விடும், நிறுவனங்களும் தங்கள் கடனைச் செலுத்துவதற்கு துணிவு பெற்றுவிடும் என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ள முயற்சி இது.


இதெல்லாம் நடைபெற்றாலும், நிலைமை முழுமையாகச் சீரடைந்தாலும், பல நிறுவனங்கள் மீண்டெழுவது சந்தேகமே என்று தெரிவிக்கின்றனர், ஒருசில சந்தை ஆய்வாளர்கள்.அவர்கள் கணக்குப்படி, மறுசீரமைக்கப்பட்ட கடனில் குறிப்பிட்ட சதவீதம், வாராக்கடனாக மாறவே வாய்ப்புண்டு. இதற்கு இரண்டு அடிப்படை காரணங்கள் சொல்லப்படுகின்றன.

கொரோனா பாதிப்புகள் இன்னும் எத்தனை மாதங்கள் நீடிக்கும் என்று சொல்ல முடிய வில்லை என்பது ஒன்று. தேவைகள் எவ்வளவு விரைவாக உயரும் என்று தெரியவில்லை என்பது இன்னொன்று.இந்திய ரிசர்வ் வங்கி, பிரச்னையின் ஒரு முனையைப் பிடித்து இழுத்துக் கட்டிவிட்டது. அது கடன் தரப்பு. ஆனால், தேவை தரப்பு என்ன ஆகும் என்பது தெரியவில்லை.

மக்கள் கையில் பணப்புழக்கம் பெருகி, தேவைகள் பெருகினால் தான் வர்த்தகமும், வணிகமும் உயரும். அதுதான் நீண்டகால வளர்ச்சிக்கு வித்திடும்.இப்போதைக்கு பெருவெள்ளத்தை, சிறு கை கொண்டு அடக்கியிருக்கிறது, மத்திய ரிசர்வ் வங்கி. கையைத் தள்ளிக்கொண்டு வெள்ளம் ஆர்ப்பரிக்க ரொம்ப காலம் ஆகப்போவதில்லை. அதற்குள், வலுவான வளர்ச்சி என்ற அணை கட்ட வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசாங்கங்களிடமே இருக்கிறது.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com
* 9841053881

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)