பதிவு செய்த நாள்
10 அக்2020
21:44

மும்பை:இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறுவது என வேதாந்தா நிறுவனம் முடிவு செய்திருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, அதன் முயற்சி, தோல்வியை தழுவி இருக்கிறது.
பங்குச் சந்தையிலிருந்து வெளியேற, வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளருக்கு, 134 கோடி பங்குகள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 125.47 கோடி பங்குகள் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.வேதாந்தா நிறுவனம், சந்தையிலிருந்து, பங்குகளை வாங்குவதற்காக, ஒரு பங்கின் விலை, 87.25 ரூபாய் என அறிவித்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி வேதாந்தா நிறுவன பங்கின் விலை தேசிய பங்குச் சந்தையில் 120.50 ரூபாயாக இருந்தது. பல முதலீட்டாளர்கள், 150 ரூபாயில் துவங்கி, 160 ரூபாய் வரை விலை கோரி இருந்தனர். இந்நிலையில், மிகப் பெரிய ஷாக் ஒன்றை கொடுத்தது, எல்.ஐ.சி., நிறுவனம். இதன் வசம், வேதாந்தாவின், 6.37 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிறுவனம், பங்கு ஒன்றுக்கு, 320 ரூபாய் என விலை கோரியுள்ளது. இது சந்தை விலையை விட கிட்டத்தட்ட, 267 சதவீதம் அதிகமாகும்.
ஒருவேளை, வேதாந்தா இந்த விலையை ஏற்றுக் கொண்டால், அனைத்து தரப்பினருக்கும் இதே விலையை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக வேண்டியதிருக்கும். இன்னொரு பக்கம், எல்.ஐ.சி., வசம் இருக்கும் பங்குகளை வாங்காமல் வேதாந்தா சந்தையில் இருந்து வெளியேறுவதும் இயலாத காரியம்.
சந்தையில் பங்குகளை வாங்குவதற்காக, வேதாந்தா, 50.13 சதவீத பங்குகளை அடமானம் வைத்து, 23 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது. இப்போது எல்.ஐ.சி., நிறுவனத்தால், 320 ரூபாய் வரை விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால், மேலும் அதிக தொகை தேவைப்படும். கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் தேவைப்படும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து வேதாந்தா என்ன முயற்சிகள் எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், நேற்று மாலை பங்குகளை வாங்கும் முயற்சி தோல்வியுற்றதாக அறிவித்து விட்டது வேதாந்தா நிறுவனம்.இந்திய பங்குச் சந்தை வரலாற்றில், சந்தையிலிருந்து வெளியேறும் மிகப் பெரிய, ‘டிலிஸ்டிங்’ என சொல்லப்பட்ட முயற்சி, இறுதியில் தோல்வியைத் தழுவி விட்டது.
என்ன ஆகும் எதிர்காலம்?
வேதாந்தா பங்குச் சந்தையிலிருந்து வெளியேறும் முயற்சிக்காக, 315 கோடி டாலரை திரட்டி உள்ளது. இதன் விளைவாக, குழுமத்தின் மொத்த கடன், 1.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இன்னொரு பக்கம், சட்டம் மற்றும் விதிமுறைகள் காரணமாக, தாமிரம் மற்றும் இரும்பு தாது வணிகங்கள் சரிவர செயல்படாமல் இருக்கின்றன. இவை வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய சவாலான காலக்கட்டத்தில், சந்தையில் இருந்து வெளியேறும் முயற்சியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து, வேதாந்தாவின் நிறுவன மறுசீரமைப்பு என்பது நடக்க வாய்ப்பில்லை. நிறுவனத்தின் பங்கு விலை மேலும் சரிவைக் காணும். வேதாந்தாவின் எதிர்காலம் என்பது நிச்சயம் கேள்விக்குறி தான் என்கிறார்கள் வல்லுனர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|